தேற்றான் கொட்டை

தேற்றான் கொட்டை
Agriwiki.in- Learn Share Collaborate

தேத்தான் கொட்டை – தேற்றான் கொட்டை

இது நீரை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின.

இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது.

அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
முஸ்டா (கோரைக்கிழங்கு),
உசிரா (வெட்டி வேர்),
நாகா (நன்னாரி),
கோசடக்கா (நுரைபீர்க்கை),
அமலக்கா (நெல்லி)
போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம்.

ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.