நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு
Agriwiki.in- Learn Share Collaborate

நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு  ! – 25 சென்ட் நிலம்… ஆண்டுக்கு ரூ 3 லட்சம்

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது.

நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மிகமிக அவசியம். இல்லையெனில் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும். அந்த வகையில் பயிற்சிக்குப் பிறகு, இயற்கையான மேய்ச்சல் முறையில் வெற்றிகரமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியைச் சேர்ந்த ஜோசப் ஆரோக்கியராஜ்-பிரான்சிஸ் பிரியா தம்பதி.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு-மாரம்பாடி சாலையில் மூன்றாவது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது புனித வனத்து சின்னப்பர் ஆலயம். அங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் 500 மீட்டர் சென்றால் இவர்களது பண்ணை நம்மை வரவேற்கிறது. நாட்டுக்கோழிகள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன. கோழிக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசத் தொடங்கினார் ஜோசப்.

“ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரில தொழில்நுட்ப உதவியாளரா வேலை பார்த்தேன். அங்க போதுமான சம்பளம் கிடைக்காததால பெயின்டிங் வேலை செஞ்சிட்டிருந்தேன். பிறகு, மூணு வருஷத்துக்கு முன்னாடி அசில், பெருஞ்சாதி, சிட்டுக்கோழி ரகங்கள்ல நாலு நாட்டுக் கோழிகளை வாங்கிட்டு வந்து வீட்டுல வளர்க்க ஆரம்பிச்சேன். அந்தக் கோழிகள் கொஞ்சம் கொஞ்சமா பெருகி ஒரு கட்டத்துல 40 கோழிகளாயிடுச்சு. அப்போ ஒரு நண்பர் இன்குபேட்டர் வாங்கி முட்டைகளைப் பொரிக்கச் சொல்லி யோசனை சொன்னார். உடனே வாங்கிட்டு வந்து முட்டைகளை அதுல வெச்சேன். ஆனா, அது சரிப்பட்டு வரல. அந்த நேரத்துல என் அம்மாவும் அக்காவும் ‘இன்னும் தெளிவா நாலு பேர்கிட்ட விசாரிச்சுட்டுப் பண்ணு’னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்துக்குப் போனேன். அங்க, கோழி வளர்ப்பு பத்திப் பயிற்சி கொடுத்தாங்க” என்ற ஜோசப் தொடர்ந்தார்…

“அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்குக் கோழிகளைக் கொண்டு வந்தோம். இந்த இடம் மொத்தம் ரெண்டரை ஏக்கர். இதுல மேடான பகுதியில் 25 சென்ட் அளவு நிலத்துல வேலி அடைச்சிருக்கோம். வேலிக்குள்ள நாங்க தங்கியிருக்கிறதுக்கு ஒரு குடிசை, கோழிகளுக்கு ஒரு கொட்டகைனு அமைச்சிருக்கோம். நிழலுக்காக அங்கங்க மரங்களை நட்டு வெச்சிருக்கோம். 2015-ம் வருஷம் இந்த இடத்துக்குக்கு வந்தோம். இங்க வந்த பிறகு என்னோட மனைவிதான் முழுமையா கோழிகளைக் கவனிச்சுக்கிறாங்க. நான் ஓய்வு நேரங்கள்ல மட்டும் பார்த்துக்குவேன்” என்றார்.

தீவனங்களை வைத்து முடித்துவிட்டு வந்த பிரான்சிஸ் பிரியா அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். “நாட்டுக்கோழி வளர்ப்புதான் எங்க வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. குடும்பத்தோட இங்கேயே தங்கியிருந்து பார்த்துக்கிறதால, எங்க குழந்தைகளும் இதுல ஆர்வமாகிட்டாங்க. பொதுவா நாட்டுக்கோழி வளர்க்குறவங்க கொட்டகை அமைக்கிறதுக்கே ஆயிரக்கணக்குல பணத்தைச் செலவு செய்வாங்க. ஆனா, நாங்க இந்தப் பண்ணையில பெருசா எந்தச் செலவும் செய்யலை. எங்ககிட்ட இருந்த மரங்கள், தென்னங்கீத்துகளை வெச்சே கொட்டகை அமைச்சோம். 32 அடி நீளம், 16 அடி அகலத்துல ஒரே ஒரு கொட்டகைதான் இருக்கு. அதுவும் வெயில், மழையின்போது கோழிகள் ஒதுங்குறதுக்காகத்தான். இரவுல அடையறதுக்காகத் தனியா குச்சிகளைப் பரண் மாதிரி கட்டியிருக்கோம்.

நாங்க நாட்டுக்கோழி வளர்ப்பைப் பண்ணை முறையில செய்யல. சாதாரணமா கிராம வீடுகள்ல வளர்க்குற மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். அதேபோல தீவனம், மருந்துகளுக்காகவும் அதிகம் செலவு செய்றதில்லை. இயற்கையா உருவாகுற கறையான் அப்படியே கோழிகளுக்கு உணவாயிடுது. அதுபோக நாங்க தயாரிக்கிற தீவனத்தையும் கொஞ்சமா கொடுக்கிறோம். கோழிகளுக்குச் சீக்கு வந்தா கைவைத்தியம் பார்த்துக்குவோம். அதனால, எங்களுக்குப் பராமரிப்புச் செலவு பெருசா இல்லை. நாங்க நாப்பது கோழிகளோடதான் இங்க வந்தோம். இப்ப 230 கோழிகள் இருக்கு. பத்துக் கோழிகளுக்கு ஒரு சேவல்ங்கிற கணக்குல மொத்தம் 20 சேவல்களும் இருக்கு.

இது செம்மண் நிலம். இந்த மண்ணுக்கு இயல்பாகவே கறையான் அதிகமா உற்பத்தியாகும். இந்தக் கறையான் கோழிகளுக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. செம்மண் நிலங்கள்ல அதிகாலையில காய்ஞ்ச செடிகள்ல, குச்சிகள்ல கறையான் பிடிச்சு இருக்கும். அதனால நாங்க காலையில ஆறுமணிக்கு எங்க வேலியோட கதவைத் திறந்து வெச்சிடுவோம். கோழிகள் வெளியே போய் காடு முழுவதும் சுத்தி, காலால கிளறிக் கறையான்களைச் சாப்பிடும். கிட்டத்தட்ட ரெண்டு ஏக்கர் நிலம் முழுக்கக் கோழிகள் மேயும். காலை நேரத்துல மண்ணைக் காலால கிளறும்போது வெளியே வர்ற பூச்சி, புழுக்களையும் பிடிச்சு சாப்பிடும்.

கோழிகள் புல், இலைகளையும் கொத்தித் திங்கும். ஏழு மணிக்குத் தீவனத்தைக் கையில் எடுத்துக்கிட்டு ஒரு சத்தம் கொடுத்தாப் போதும். எல்லாக் கோழிகளும் ஓடி வந்திடும். அதுக்குப் பிறகு, கதவை அடைச்சிடுவோம். 230 கோழிகளுக்கும் சேர்த்துக் காலையில ஏழு கிலோ தீவனத்தைப் பிரிச்சு நாலஞ்சு இடங்கள்ல தட்டு வெச்சிடுவோம். அதைத் தின்னுட்டு வேலிக்குள்ள காலார அலையும். சிலது மரத்து நிழல்ல ஓய்வெடுக்கும். சிலது மண் குளியல் எடுக்கும். தண்ணியை அங்கங்க வெச்சிருப்போம். தேவையானபோது குடிச்சுக்கும். முட்டை போடுற கோழிகள் கொட்டகைக்குள்ள முட்டை வெச்சிடும்.

ஒரு கோழி பத்துப் பதினஞ்சு முட்டைகள் இட்டாலும் அதுல ஒன்பது முட்டைகளைத்தான் அடை காக்கமுடியும். அதனால, முட்டைகள் வீணாக்காம இருக்குறதுக்காக இன்குபேட்டரைப் பயன்படுத்துறோம். அதைத் தவிர்த்து மற்ற எல்லாமே இங்க இயற்கை முறைதான்” என்ற பிரியா, நிறைவாக வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“நாங்க கறிக்காகக் கோழிகளை விற்பனை செய்றதில்ல. முட்டைகளைப் பொரிக்க வெச்சு, குஞ்சுகளாத்தான் கொடுக்குறோம். 500 முட்டைகள் பொரிக்குற திறன்ல இன்குபேட்டர் வெச்சிருக்கோம். எங்ககிட்ட எல்லா வயசுலேயும் கோழிகள் இருக்கு. சராசரியா எப்பவும் நூறு கோழிகள் தினமும் முட்டை வெச்சுட்டு இருக்கும். ஒரு கோழி மூலமா வருஷத்துக்கு 55 முட்டைகள்ல இருந்து 65 முட்டைகள் வரை கிடைக்கும். நூறு கோழிகள் மூலமா வருஷத்துக்கு 6 ஆயிரம் முட்டைகளுக்கு மேல கிடைக்குது. இன்குபேட்டர்ல பொரிக்கிறப்போ 5,500 குஞ்சுகளுக்குக் குறையாம பொரிஞ்சு வரும்.

குஞ்சுகள்ல முதல் வாரத்துல கொஞ்சம் இழப்பு இருக்கும். அதையெல்லாம் கழிச்சா வருஷத்துக்கு எப்படியும் 5 ஆயிரம் குஞ்சுகள் கிடைச்சுடும். ஒரு நாள் வயசுள்ள குஞ்சு 60 ரூபாய்னு வித்துட்டு இருக்கோம். அதுமூலமா, வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்பு, மின்சாரக் கட்டணம்னு ஒரு லட்சம் ரூபாய் செலவு போக, ரெண்டு லட்சம் ரூபாய் லாபமா கிடைக்குது. இதுபோக, முயல்களையும் புறாக்களையும் வளர்க்குறோம். அது மூலமாவும் ஒரு வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. எங்க வீட்டுத்தேவைக்குத் தரமான நாட்டுக்கோழி முட்டைகளும் கோழிகளும் கிடைச்சுடுது. அதனால, இந்த வருமானத்துல நாங்க நிறைவா இருக்கோம்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

தண்ணீர் கவனம்

பண்ணையில் கோழிகளுக்கு எப்போதும் சுத்தமான தண்ணீர் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, கோடைக்காலங்களில் தண்ணீர் அவசியம். தண்ணீருக்காகக் கோழிகளை அலைய விடக்கூடாது. போதுமான தண்ணீர் இல்லாவிட்டால் கோழிகளின் உடல் நலன் பாதிக்கப்படும். கோடைக் காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் வெப்ப அலர்ஜி நோய் ஏற்படும்.

இந்த நோய் தாக்கிய கோழிகள், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு, வித்தியாசமாகக் கத்தும். இறக்கையை அடித்துக்கொண்டே இருக்கும். திடீரென இறந்துவிடும். இந்த நோய் பாதித்த கோழிகளுக்கு, தண்ணீரில் குளுக்கோஸ் கலந்து கொடுக்க வேண்டும். நோய்த் தாக்குதல் அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு அச்சு வெல்லத்தைக் கரைத்து, ஒரு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கக் கொடுக்கலாம்.

நாமே உற்பத்தி செய்யலாம் கறையானை!

கறையானில் உள்ள புரதச்சத்து, கோழிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. செம்மண் நிலங்களில் காய்ந்த குச்சிகள், கட்டைகள், மட்டைகள் ஆகியவற்றை ஆங்காங்கே கொட்டி வைத்து, அதன்மீது சிறிது தண்ணீர் தெளித்து வந்தால், அதில் கறையான்கள் உருவாகும். செம்மண் நிலம் இல்லாதவர்கள், பழைய பேப்பர்களைக் கிழித்து, ஒரு மண்பானையில் அடைத்து, அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து, பானையைக் கவிழ்த்து வைத்தால் போதும், ஓரிரு நாள்களில் கறையான்கள் உற்பத்தியாகிவிடும்.

மண் குளியல்

கோழிகள் மண்ணில் சிறிய குழி பறித்து, அதில் படுத்துக்கொண்டு இறக்கை முழுவதும் மண்ணில் படுமாறு புரளும். இதனால், கோழிகளின் உடல் மேலே உள்ள செல்கள் உதிர்ந்துவிடும். இது நாட்டுக்கோழிகளின் பழக்கம். இதற்காகப் பண்ணைகளில் ஆங்காங்கே சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி, அதில் அடுப்புச் சாம்பலைக் கொஞ்சம் கொட்டி வைத்தால் போதும். கோழிகள் அந்தக் குழிகளில் இறங்கி, மண் குளியல் எடுத்துக்கொள்ளும். இதன்மூலமாக செல், உண்ணிகள் போன்றவற்றால் கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் நஷ்டத்தைத் தவிர்க்க நல்ல யோசனைகள்!

நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் பலர் நல்ல லாபம் பார்த்து வந்தாலும், ஒரு சிலர் பண்ணை ஆரம்பித்த சில மாதங்களிலேயே நஷ்டம் ஏற்பட்டு கோழி வளர்ப்பைக் கைவிட்டு விடுகிறார்கள். இதைத் தவிர்த்து, லாபகரமாக நாட்டுக்கோழிகளை வளர்க்கும் முறை குறித்துத் திண்டுக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சிவசீலன் சொன்ன ஆலோசனைகள் இங்கே…

“நாட்டுக்கோழி வளர்ப்பு அருமையான வருமானம் தரக்கூடிய தொழில்தான். அதுல எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனா, அதை நாம முறையா செய்யணும். ‘கோழி வளர்க்கறது என்ன பெரிய சூத்திரமா? கிராமத்துல தானா அலையுற நாட்டுக்கோழிங்கள நாங்க சின்ன வயசுலயே பார்த்திருக்கோம்’னு நினைச்சுகிட்டு இதுல இறங்கக்கூடாது. முறையா பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள்ல இதுக்கான பயிற்சி இலவசமாவே கிடைக்குது.

நாட்டுக்கோழிகளைக் கூண்டுல அடைச்சு வெச்சு வளர்த்தா பெருசா லாபம் கிடைக்காது. அதுகளை மேய்ச்சல் முறையில வளர்க்கும் போதுதான், நாட்டுக்கோழிக்கான நல்ல குணங்களோட கோழிகள் இருக்கும். இயற்கை முறையில் செலவுகளைக் குறைச்சு லாபத்தை அதிகரிக்கமுடியும்.

நாட்டுக்கோழிகளை வாங்கும்போது, தரமான தூய ரக நாட்டுக்கோழிகளா பார்த்து வாங்கணும். ரொம்பப் பேர் இந்த இடத்துல தடுமாறிடுவாங்க. முதல் கோணல் முற்றும் கோணல்னு சொல்ற மாதிரி, இதுல தப்பு நடந்தா, தொடர்ந்து எல்லாமே தவறாகிடும். அதுனால தரம், ரகம் பார்த்து வாங்குறதுல கவனமா இருக்கணும்.

எப்பவுமே ‘வருமுன் காப்போம்’தான் சிறந்த வழி. அதனால, நோய் வருதோ இல்லையோ அந்தந்த சீசன்ல தடுப்பூசிகளைப் போட்டுடணும். நாட்டுக்கோழிகளுக்குப் பெருசா நோய்கள் தாக்காதுன்னாலும், தடுப்பு மருந்துகளைத் தவறாம கொடுக்கணும். அதை முறையா கடைப்பிடிச்சா, நோய்த் தாக்குதலிலிருந்து கோழிகளைக் காப்பாத்திடலாம். பெரும்பாலான பண்ணைகள்ல நோய்த்தடுப்பு முறைகளைக் கையாளாததாலதான் கோழிகள் இறப்பு அதிகமாகி நஷ்டம் வருது.

அடுத்து தீவன மேலாண்மையைச் சரியாகக் கடைப்பிடிக்கலைன்னாலும் அதிக நஷ்டம் வரும். நாட்டுக்கோழிகளைப் பிராய்லர் கோழி மாதிரி அடைச்சு வெச்சுத் தீவனம் போட்டு வளர்த்தா நஷ்டம்தான் வரும். நாட்டுக்கோழிளை மேய்ச்சல் முறையில விட்டுட்டா, அதுங்களே தங்களுக்கான தீவனத்தைத் தேடி எடுத்துக்கும். குறைஞ்சளவு நாம கொடுத்தா போதுமானது. அதுவும் மனுசங்களுக்குத் தேவையில்லாத கழிவுகளைத்தான் கோழிகளுக்குக் கொடுக்கணும். அழுகிய காய்கறிகள், முட்டைகோஸ், காலிஃபிளவர் இலைகள்னு கொடுத்தாலே போதுமானது.

எவ்வளவு விலை அதிகமான, சத்தான கம்பெனி தீவனம் கொடுத்தாலும் 120 நாட்கள்ல நாட்டுக்கோழி ஒண்ணே கால் கிலோவுல இருந்து ஒன்றரை கிலோ எடைதான் வரும். இதுதான் நாட்டுக்கோழியோட இயல்பு. அதனால, நாட்டுக்கோழிகளுக்கு விலை அதிகமான கம்பெனி தீவனம் தேவையே இல்லை. கடைகள்ல வாங்கினா ஒரு கிலோ தீவனம் 25 ரூபாய் வரை இருக்கும். அதனால, தீவனத்தைக் குறைவான செலவில் நாமளே தயாரிச்சுக்கலாம்.

மக்காச்சோளம் 50%, தவிடு 40%, பிண்ணாக்கு/ கருவாடு/ சோயா 8%, தாது உப்புக்கலவை 2%, உப்பு 1% இத எல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு அரைத்தால் தீவனம் தயார். விலை மலிவான, தரம் குறைஞ்ச தானியங்களை அதாவது, உடைஞ்ச தானியங்களைக் குறைவான விலையில் வாங்கிப் பயன்படுத்தினாலே போதுமானது. நாம தயாரிக்கிற தீவனம் ஒரு கிலோ பத்து ரூபாயைத் தாண்டக்கூடாது. அப்பத்தான் லாபகரமானதாயிருக்கும்.

கோழிகளைப் பொறுத்தவரைக்கும் தீவனம் வெச்சா, காலி பண்ணிக்கிட்டே இருக்கும். தட்டு காலியா இருக்கேன்னு நாமளும் கொட்டிக்கிட்டே இருக்கக்கூடாது. ஒரு வார வயதுடைய ஒரு கோழிக்கு 10 கிராம் தீவனம் கொடுத்தால் போதும். இதை ஒவ்வொரு வாரமும் பத்துப்பத்து கிராமா அதிகரிச்சுட்டே போகணும். இந்தத் தீவனத்தையும், ஒரு நாளைக்கு மூணு வேளையா பிரிச்சுக் கொடுக்கணும். மீதித் தீவனத் தேவையை ‘மார்க்கெட் வேஸ்ட்’ கொடுக்குறது, மேய்ச்சலுக்கு விடுறது மூலமா சரிக்கட்டணும். அசோலாவையும் தீவனத்தோட கொடுக்கலாம். இந்த முறைகளைக் கடைப்பிடிச்சா நாட்டுக்கோழி வளர்ப்பு கண்டிப்பா லாபகரமாத்தான் இருக்கும்” என்றார் சிவசீலன்.

தொடர்புக்கு,
ஜோசப் ஆரோக்கியராஜ்,
செல்போன்: 96262 69337

தொடர்புக்கு,
டாக்டர் சிவசீலன்
செல்போன்: 94429 37227