மண்ணும் மனிதரும் part 3

Agriwiki.in- Learn Share Collaborate

#பகுதி_மூன்று:

#மண்ணும்_மனிதரும்

மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பயன்படுத்தி வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கற்கள் மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களின் ஆதி வரலாறு இத்தகைய செங்கற்களின் பயனை பறை சாற்றுகின்றது.

மண்ணிலிருந்து செங்கற்களை உருவாக்கும்போது இரு வகைகளில் உருவாக்குகின்றார்கள். சூளைகளில் வைத்து சுடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் (Burnt Bricks), சூரிய வெப்பத்தில் காய விடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் என அவை இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன. இவ்விதம் சூளைகளின் உதவியில்லாமல் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்களை
ஆங்கிலத்தில் Adobe Blocks என்பார்கள். இத்தகைய செங்கற்கள் 25 தொன் சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை ஆய்வுகள் மூலம் நிலைநாட்டியுள்ளார்கள். அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் 33 தொன்/சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை
நிலைநாட்டியுள்ளன. உண்மையில் இத்தகைய செங்கல் கட்டட அமைப்பு கூரைகள் போன்றவற்றைத் தாங்கும் சக்தி மிக்கவை என்பதையே ஆய்வுகள் காட்டி நிற்கின்றன.


அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் பல கூட மண்ணாலான கட்டடங்களை அமைப்பதில் பின் தங்கி நிற்கவில்லை. முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தச் சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் இந்நாட்டு அரசாங்கங்களால் இத்தகைய மண்ணாலான வீடுகள் (Earth Homes) பெருமளவில் கட்டப்பட்டன. முன்பே கூறியது போல் இவ்விதம் மண்ணை வீடுகளை அமைக்கப் பாவிக்கும் பொழுது அதன் உறுதியை அதிகரிப்பதற்காக சிமெண்ட் , சுண்ணாம்பு போன்ற ஏனைய கட்டடப் பொருட்களைச் சேர்ப்பது வழக்கம்.

சுண்ணாம்பு என்றதும் தான் ஞாபகம் வருகிறது. பண்டைய ‘பாபிலோனியர்கள்’
(Babylonians) மண் சுவர்களின் காலநிலைக்கெதிரான தனமையை அதிகரிப்பதற்காக சுண்ணாம்புடன் மண்ணைக் கலந்து பாவித்திருக்கின்றார்கள். பாவிக்கப்படும் மண்ணின் தன்மைக்கேற்ப, அதனை உறுதிப்படுத்தும் ஊக்கியின் அளவும் மாறுபடும்.

உதாரணமாக அதிகளவு மணலைக் கொண்டுள்ள மண்ணுக்குக் குறைந்த அளவு ஊக்கியே தேவைப்படும். இத்தகைய செங்கற்களை உலோக அல்லது மர அச்சுகளைக் கொண்டு உருவாக்கலாம். இவ்விதம் உருவாக்கப்படும் செங்கற்கள் சுமார் ஒருமாதம் வரையில் சூரிய ஒளியில் காய வைக்கப்பட வேண்டும். காய்ந்த கற்களில் வெடிப்புகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். செங்கல் உருவாக்கப்பட்ட மண்ணில் களிமண்ணின் அளவு அதிகமாக இருந்தால் வெடிப்பு ஏற்படலாம். மணல் அதிகமாகவிருந்தால் துண்டுகளாகப் பொடிந்து விடும். எனவே கலவை சரியாகவிருக்க வேண்டும். இது தவிர இன்னுமொரு முறையிலும் மண் பயன்படுத்தப்படுகிறது.

செங்கற்கள் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே மனித சமுதாயத்திற்கு அறிமுகமான முறைதான் அது. மண்ணைக் குழைத்துப் பூசி உருவாக்கும் முறைதான் அது. ஆங்கிலத்தில் Rammed Earth என்பார்கள்.

மண்ணைப் பாவித்து மனைகளை அமைக்கும் போது இன்னும் சில விடயங்களையும் கவனிக்க வேண்டும். மேலும் மண் சுவர் முற்றாகக் காய்ந்த பின்னரே அதன் மேல் சுண்ணாம்புப் பூச்சு போன்ற பூச்சுக்களைப் பூச வேண்டும். நன்கு காய்வதற்கு முன்னர் பூசினால் அது பூச்சைப் பழுதாக்குவதோடு மட்டுமல்ல சுவரின் பயன்பாட்டுத் தன்மையினையும் ஊறுபடுத்தி விடும். இவ்விதம் உருவாக்கப்படும் மண் வீடுகளை சுண்ணாம்பு அல்லது சிமெண்ட் சாந்து கொண்டு பூசி மெழுகி விட்டால், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது மண் வீடென்பதே தெரியப் போவதில்லை. இந்தியாவின் குறிப்பாக தென்பகுதிக் கிராமங்களில் முன்பே குறிப்பிட்டது போல் மரமும் மண்ணும் சேர்த்து Wattle And Daub முறையில் அமைக்கப்பட்டு, இவ்விதம் சுண்ணாம்புச் சாந்து (Lime Plaster) பூசப்பட்ட வீடுகளைக் கண்டிருக்கின்றேன். மண் வீடென்பதே தெரியாது. எழுபது எண்பது வருடங்களைக் கடந்து உறுதியாக நிற்கும் இத்தகைய வீடுகள் பலவற்றை அப்பகுதிகளில்
காணலாம்.

புயல், காற்று, பூமி நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படும் பகுதிகளில் இத்தகைய ‘அடொபி’ வகைச் செங்கற்களைக் கொண்டு வீடுகளை அமைக்கும் போது மிகக் கவனம் எடுக்கப்பட வேண்டும். வீடுகளின் வடிவமைப்பு நெருக்கமாகக் கச்சிதமாக (Compact) இருக்க வேண்டும். அத்திவாரம் உருக்கினால் உறுதிப்படுத்தப்பட்ட காங்ரீட்டினால் (Reinforced Concrete) உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய செங்கற்களை
வைத்துச் சுவர் அமைக்கும் போது இவற்றை இணைத்து வைப்பதற்காகப் பூசபப்டும் ‘காரை’யுடன் (Mortar) உருக்குக் கம்பிகளை அல்லது உருக்கு வலைகளையும் சேர்த்துச் சுவர்களை அமைத்தால் அவை உறுதியாக இருக்கும். இவ்விதம் அமைப்பதன் மூலம் சுவர் இறுக்கமானதாகவிருக்கும். மேலும் காலநிலை மாற்றங்களால் ஏற்படவிருக்கும் சுருக்கம் (Shrinkage) வெடிப்புகள் ஆகியவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம். கூரையைத் தாங்குவதற்காகச் சுவரின் மேல் அமைக்கப்படும் உத்தரங்களைக் கூட (Beams) இத்தகைய உருக்கினால் உறுதியாக்கபட்ட ‘காங்ரீட்’டைப் பாவித்து உருவாக்கலாம்.

களிமண் (50%ற்குக் குறையாமல்) மணல் (30%ற்குக் குறையாமல்) கலந்து உருவாக்கப்படும் இத்தகைய ‘அடொபி’ வகைச் செங்கற்கள்
உருவாக்கப்படும் நிலையில் 30% வரையில் ஈரத்தனமையைக் (Moisture Content) கொண்டிருக்கும். உசிதமான ஈரத்தன்மை 15%இலிருந்து 18% வரையிலாகும். வைக்கோல், புல் போன்றவற்றை மண்னுடன் கலந்து இத்தகைய செங்கற்கள் ஆக்கப்பட்ட வரலாறுண்டு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் 120 வருடங்களுக்கும் அதிகமான பழமை வாய்ந்த வீடுகளில் இத்தகைய முறையில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இவ்விதம் வைக்கோலைக் குறிப்பிட்ட அளவுகளாகக் கத்தரித்து (4″ இலிருந்து 8″ வரையில்) சேர்த்து செங்கற்களை உருவாக்கும் போது அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் உருவாவது குறைக்கப்படுகின்றன. இவ்விதம் வைக்கோல் அல்லது காய்ந்த புல்லைச் (Dried Grass) சேர்த்துச் செங்கற்களை ஆக்கும் போது அவற்றிலிருக்கும் புற்கள் அழுகிப் போய் விடாதா என நீங்கள் கேட்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் 120 வருடங்களுக்கும் அதிகமான பழமையான வீடுகளில் காணப்படும் இத்தகைய செங்கற்களில்
காணப்படும் காய்ந்த புற்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மேலுள்ள கேள்விக்குப் பதிலாக அமைகின்றது.

இவ்விதம் ‘அடொபி’ வகைச் செங்கற்களைக் கைத்தொழிலாகச் செய்வது தேவையற்ற நேர விரயத்தையும், மனித உழைப்பையும்
உருவாக்கும். இதனைத் தவிர்ப்பதற்கு எளிய வகையில் உருவாக்கப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். இந்தியாவுட்பட வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றார்கள். இவற்றில் பெரும்பாலானவை மணிக்கு 150இலிருந்து 500 வரையில் செங்கற்களை உருவாக்க வல்லவை. நம் நாட்டில் பெரும்பாலான நாடுகளில் பாவிக்கப்படும் இத்தகைய இயந்திரங்களில் குறிப்பிடத்தக்கவை ‘எல்சன் புளக் மாஸ்டர்’ (Elson Block Master), ‘சின்வராம்’ (Cinvaram) ஆகியவையே. இவற்றில் ‘சின்வராம்’ வகை ‘எல்சன் புளக் மாஸ்டரி’ன் நவீன மயப்படுத்தப்பட்ட இன்னுமொரு வடிவமே. தமிழகத்தில் காரைக் குடியில் அமைந்திருக்கும் அழகப்பா செட்டியார் பொறியியற் கல்லூரியும் இத்தகைய வகைச் செங்கற்களை உருவாக்கும் இயந்திரமொன்றினை
உருவாக்கியுள்ளது. இவற்றின் தாங்கும் சக்தி 17 – 32 kg/cm.cm)

சூரிய வெப்பத்தில் காயவிடப்பட்டு உருவாக்கப்படும் ‘அடொபி’ (Adobe) செங்கற்கள் எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க
உதவமுடியுமென்பதைப் பார்த்தோம். இம்முறை மண்ணைக் குழைத்து மனைகளை அமைக்கும் முறை (Rammed Earth Construction)
எவ்விதம் உதவக் கூடுமென்பது பற்றிப் பார்ப்போம். செங்கற்களின் பாவனைக்கு முன்பிருந்தே மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வரும்
முறை என்ற பெருமை இதற்குண்டு. இத்தகைய முறையில் மனைகளை அமைப்பது பற்றியும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்றுள்ளனை. நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ‘ரால்வ் பட்டி’ (Ralf Patty) என்பவர் ‘Age Strength Relationship for Rammed Earth’
என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் இத்தகைய முறையில் அமைக்கபப்டும் சுவர்களின் உறுதி, அரிப்பெதிர்க்கும் தனமை என்பன காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும் என்பதனை விளக்கியுள்ளார். இத்தகைய முறையில் அமைக்கப்படும் வீடுகளை எவ்விதம் மிகக் குறைந்த செலவில் அமைக்கலாமென்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரும் பொறியியலாளருமான ‘ஜோன் கிர்காம்’ (John Kirham) என்பவர் பரீட்சார்த்த முயற்சியாக அமைத்த வீடொன்றின் மூலம் உலகிற்கெடுத்துக் காட்டியுள்ளார். இந்த வீடு அமெரிக்காவின் ‘ஓகலகோமா’ (Oklakoma) மாநிலத்தில் அமைந்துள்ள ‘ஸ்டில் வாட்டர்’ (Still Water) என்னுமிடத்தில் அமைக்கபப்ட்டுள்ளது. சுவர், தரை, கூரை எல்லாமே குழைத்த மண்ணைக் கொண்டு $887.80 டாலர்கள் செலவில், சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட இந்த வீடு போதிய
பயிற்சியற்ற சாதாரணத் தொழிலாளர்களாலேயே (Unskilled Labourers) உருவாக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத் தக்கது. மண் கூரையினை
உறுதிப்படுத்துவதற்காக அதனுடன் 1-5/8” (40/8″) அங்குலத் தடிப்பில் காங்ரீட் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

தொடரும்
நான் உங்கள் ஹரி