மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்

மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்
Agriwiki.in- Learn Share Collaborate

மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்

காட்டில் உள்ள தாவரங்களும் மரங்களும் காய்ந்து போவதில்லை

சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது, மேலும் ரசாயன முறையில் விளைந்த பயிர்களும் காய்ந்துவிடும், எனினும் வறட்சி காலத்தில் கூட காட்டில் உள்ள தாவரங்களும் மரங்களும் காய்ந்து போவதில்லை.

இயற்கை நம்மிடம் ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது, “நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் என் வழி நடந்தால் நான் உங்கள் பயிர்களை காப்பாற்றுவேன்” இதை சிந்தித்துப் பாருங்கள். மனிதர்கள் செய்யும் செயலையும் இயற்கை செய்யும் செயலையும் ஒப்பிட்டுப் பாருங்கள், நீர் பாசனம் செய்து வளரும் மரங்களில் குறைவான பழங்களே கிடைக்கின்றன, ஆனால் காடுகளில் மானாவாரியாக வளரும் மரத்தில் எண்ணற்ற பழங்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.

இயற்கை பேரிடர்களை இயற்கை உருவாக்குவதில்லை

உதாரணமாக நாம் பயிர் செய்துவரும் நெற்பயிர் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பயிர்செய்யப்பட்ட ஒரு புல் வகைத்தாவரமாகும். நாம் நெல் சாகுபடி செய்யும்போது பாசன வசதி செய்யவில்லை என்றால் பயிர் காய்ந்து விடுகிறது, அதே நேரத்தில் நெல்லின் சகோதரர்களான புல்வகைகள் வறட்சி காலத்திலும் வரப்புகளில் பசுமையாக பூக்கள் மற்றும் விதைகளுடன் காணப்படுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது இயற்கை பேரிடர்களை இயற்கை உருவாக்குவதில்லை, மனிதர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு ஆந்திரபிரதேசத்தில் உள்ள ரயாலசீமாவில் அனந்தபூர் மாவட்டத்தில் மிக மோசமான வறட்சி, 100 மி.மீ. மழை மட்டுமே கிடைத்தது. ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் காய்ந்து மகசூல் எதுவும் கிடைக்க வில்லை, ஆனால் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் இருந்து சிறிதளவு மகசூல் கிடைத்தது. ஆந்திர அரசாங்கம் இதை குறித்து ஐ.நா.விலும் குறிப்பிட்டுள்ளது.

மானாவாரி விவசாயத்தில் மற்றும் இயற்கை பேரிடர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் தீர்வுகாண முடியும்.

 

ஒரு கிலோ மட்கு காற்றில் இருந்து 6 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தாவரங்களின் வேர்களுக்கு கொடுக்கிறது, எனவே மானாவாரி விவசாயத்தில் மட்கு என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது.

மானாவாரி விவசாயமும் – மட்கின் முக்கியத்துவமும்

மண் மரங்களின் தாயாகும், எனினும் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே மரம் மண்ணை பெரிதும் சார்ந்து உள்ளது. பிற்காலத்தில் மரங்கள் மண்ணை சார்ந்து இருப்பதில்லை. நிலத்தின் மேல் அடுக்கில் இருக்கும் மண் துகள்கள் மற்றும் மணல் துகள்கள் இரண்டிற்கும் தண்ணீரை பிடித்து வைக்கும் ஆற்றல் கிடையாது. மண் துகள்களுக்கு இடையே உள்ள மட்கு மட்டுமே தண்ணீரை பிடித்து வைக்கக் கூடியது. மட்கு அதன் பஞ்சு போன்ற தன்மையால் காற்றில் உள்ள தண்ணீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது.

ஒரு கிலோ மட்கு காற்றில் இருந்து 6 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தாவரங்களின் வேர்களுக்கு கொடுக்கிறது, எனவே மானாவாரி விவசாயத்தில் மட்கு என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. மேலும் மழை இல்லாத காலங்களிலும் மட்கு காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மானாவாரி பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

பயறுவகை ஊடுபயிர்களின் முக்கியத்துவம்

மானாவாரி விவசாயத்தில் பயறுவகை ஊடுபயிர்கள் சாகுபடி மிக அவசியமானது. பயறுவகை ஊடுபயிர்கள் சாகுபடி செய்யும்போது அவற்றின் முதிர்ச்சி அடைந்த இலைகள் மண்ணில் விழுந்து தரமான மட்கு கிடைக்கிறது, ஏனெனில் இந்த பயறுவகைத் தாவர இலைகளில் கார்பன் நைட்ரஜன் விகிதம் 20:1 என்ற அளவாகும். அதாவது நைட்ரஜன் சதவீதம் இதில் அதிகமாகும். இந்த இலைகளால் உருவாகும் மட்கு பயிர்களுக்கு சிறந்த ஊட்டசத்தைக் கொடுக்கும், காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி பயிர்களுக்கு கொடுக்கும். எனவே மானாவாரி விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி மிகவும் முக்கியமானது.

ஊடுபயிர் செய்யும் முறை

முதன்மைப் பயிருக்கு ஒத்திசைவான ஊடுபயிரை சாகுபடி செய்ய வேண்டும். முதன்மைப் பயிர் ஒரு வித்திலைப் பயிர் என்றால், ஊடுபயிராக இருவித்திலை பயிர் இருக்கவேண்டும். முதன்மைப் பயிர் இருவித்திலைப் பயிர் என்றால், ஊடுபயிராக ஒரு வித்திலைப் பயிர் இருக்கவேண்டும். ஊடுபயிரின் வாழ்நாள் முதன்மைப் பயிரின் வயதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது இரண்டில் ஒரு பங்கு இருக்க வேண்டும்.

உதாரணமாக, துவரையின் வயது 180 நாட்களாகும், எனவே துவரையில் ஊடுபயிராக 60 நாள் வயதுடைய பச்சைப்பயறு அல்லது 75 நாள் வயதுடைய கம்பு அல்லது 90 நாள் வயதுடைய சோயா மொச்சை அல்லது சிறுதானியங்களை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.

ஊடுபயிர்களின் வயது குறைவு என்பதால் முதன்மைப் பயிரின் ஆரம்ப காலத்திலேயே தன் வாழ்நாளை முடித்துவிட்டு முதன்மைப் பயிருக்குத் தேவையான நைட்ரஜனை கொடுக்கிறது, மேலும் மூடாக்கு கொடுக்கிறது, முதன்மை பயிருக்கான செலவையும் ஈடுசெய்கிறது.

வேர்களில் உள்ள ஊட்டசத்துக்கள்

மானாவாரி பயிர்களின் வேர்களின் நுண்ஊட்டங்கள் நிறைந்துள்ளதால் அதன் வேர்களை எரிக்கக் கூடாது, வேர்களை மட்க விடுவதினால் சிறந்த மட்கு உருவாகும். வேர்களை அடியோடு பிடுங்கினாலும் அவற்றை எரிக்காதீர்கள், மேலும் எரு, மண்புழு எரு, சாண எரு தயாரிக்கவும் இதை பயன்படுத்த வேண்டாம். வேர்களை மூடாக்காக பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்துங்கள் அல்லது அப்படியே மட்க விடுங்கள்.

மானாவாரி நிலம் அதிக பரப்பளவு என்பதால் மூடாக்கு போட தேவையான சருகுகள் கிடைப்பதில்லை, எனவே வேர்களின் மூலம் கிடைக்கும் மட்கு உருவாக்கத்தை தடுக்க வேண்டாம். மானாவாரி விவசாயத்தில் உயிர் மூடாக்கு சாத்தியமாகும், மேலும் நிலத்தை பதப்படுத்துவதால் (மண்மூடாக்கு) மண்ணின் வளமும் அதிகரிக்கும்.

மண் மூடாக்கு

மண் மூடாக்கு என்பது மண்ணை பதப்படுத்துவதாகும். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மண்ணை உழவு செய்யவேண்டும், அதாவது பயிர் வரிசைகளுக்கு இடையே உள்ள நிலத்தை உழவேண்டும். மண்ணை 15 நாளுக்கு ஒரு முறை உழவு செய்வதால் மண்ணில் உள்ள வெடிப்புகள் மண்ணால் நிரப்பப்படுகிறது, அதாவது மண்வெடிப்புத் தடுக்கப்படுகிறது. இப்படி உழுவது மழை நீரை சேமிப்பதற்கும், மட்கு இருக்கும் பட்சத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை சேமிக்கவும் அவசியம், மேலும் மண்ணில் காற்றோட்டம் ஏற்படுத்தப் படுவதால் வேர்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கும். அவ்வப்போது உழவு செய்வதால் களைகளும் கட்டுப்படுத்தப்படும்.

களைகள் உருவாகக் காரணம்

1) ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதினால் களைகள் அதிகரிக்கிறது,
2) சாண உரம் மற்றும் மண்புழு உரங்களில் உள்ள களைகளில் விதைகள் மூலமாக,
3) காற்றின் மூலமாக பரவும் களைகளின் விதைகள் மூலமாக.

பாலேக்கர் விவசாயத்தில் ரசாயன உரம், சாண உரம், மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்துவதில்லை என்பதால் களைகளை நாம் சுலபமாக கட்டுப்படுத்த முடியும். மேலும் மூடாக்கு இடுவதினால், களைகள் முளைத்தாலும் மண்ணில் வேர்பிடித்து வளராது. மண்ணில் உயிர் மூடாக்கு (அல்லது ஊடுபயிர்) வளர்க்கும்போது அவை முக்கியப் பயிர்களுடன் ஒத்திசைவுடன் வாழ்ந்து, வேகமாக பரந்து வளர்ந்து மண்ணை மூடுகிறது. மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைக்கிறது, தேனீக்களையும் நன்மைசெய்யும் பூச்சிகளையும் ஈர்க்கிறது.

உழவு

மண்ணை ஆழமாக உழவு செய்ய வேண்டாம், டிராக்டரையும் பயன்படுத்த வேண்டாம், ஏர் கொண்டு உழுவது நல்லது, தற்காலத்தில் இது சாத்தியமில்லை என்றால் ரோட்டவேட்டர் அல்லது கல்டிவேட்டர் பயன்படுத்தி உழவு செய்யவும்.

ஒரு சதுர அடி மண்ணில் மேற்பரப்பில் 32 கிலோ எடைக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தால் மண் இறுகிவிடுகிறது. எனவே பெரிய டிராக்டரைத் தவிர்க்கவும். சிறியரக டிராக்டர் அல்லது கல்டிவேட்டர்களை பயன்படுத்தலாம். மேலும் ரசாயன உரங்கள் பயன்படுத்தும் போதும் மண் மிகவும் இறுகி விடுகிறது என்பதால் நிலத்தை சாதாரணமாக உழவு செய்ய முடியாது, உழவு செலவு அதிகரிக்கிறது. சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயத்தில் மட்கு உருவாக்கத்தினால் மண் மெத்தைப் போல் ஆகின்றது, மண்ணை உழுவதும் எளிது, மேலும் கைகளினாலேயே உழவு செய்ய முடியும்.

உழவு செய்வதற்கு முன் முந்தைய பயிர் கழிவுகளை சேர்த்து வைக்கவும், முக்கியமாக எரிக்காதீர்கள், மூடாக்காக பயன்படுத்த சேர்த்து வைக்கவும். உழவு செய்யும் போது கடைசி உழவு நிலத்தின் சரிவுக்கு எதிராக இருக்க வேண்டும். சரிவுக்கு எதிராக உழுவதினால் மழை நீர் தடுக்கப்பட்டு மண்ணில் உறிஞ்சப்படுகிறது. கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு 200 கிலோ கனஜீவாமிர்ததை சமமாக தூவி நன்றாக உழவு செய்யவும். பருவமழை துவங்கும் போது களைகளின் விதைகளை முளைக்க விடுங்கள். களைகள் முளைத்து மண் பச்சையானதும் உழவு செய்யவும், இதனால் 60 சதவீத களைகள் கட்டுப்படுத்தப்படும். மானாவாரி விவசாயத்தில் இது முக்கியமான அம்சமாகும்.

கோடை காலங்களில் உழவு செய்யும் போது அதிகாலையில் உழவு செய்வதே சிறந்தது. அதாவது பகல் வெப்பம் அதிகமாவதற்கு முன்பே செய்யவேண்டும். ஏனெனில் உழவுக் கருவிகள் சூரிய ஒளியில் அதிக வெப்பமடையும், இந்த வெப்பம் மண்ணிற்குள் செல்கிறது. உதாரணமாக கோடை காலத்தில் நன்பகல் நேரத்தில் உழவு செய்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிகின்றன. எனவே முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உழவுப் பணிகளைத் தவிர்க்கவும்.

நிலத்தின் சரிவு எங்கு முடிகிறதோ அங்கு ஒரு குட்டை வெட்டவும். அந்த குட்டையில் மழை நீர் சேமிக்கப்படும், மேலும் அரிக்கப்படும் மேல் மண்ணும் குட்டையிலேயே சேமிக்கப்படும். அந்த குட்டையினால் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும். குட்டையைச் சுற்றிலும் பல விதமான பழமரங்களை நடவேண்டும். குட்டையில் கிடைக்கும் நீரை பழமரங்களுக்கு பயன்படுத்தலாம். குட்டையைச் சுற்றி பத்துஇலை கஷாயம் தயாரிப்பதற்குத் தேவையான செடிகளையும், ஜீவாமிர்தம் தயாரிக்கத் தேவையான கரும்பையும், இனிப்பான பழமரங்களையும் நடவு செய்யலாம்.

நாம் நாட்டு ரகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம். சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயத்தில் நாட்டுரகப் பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றன. வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் ரசாயன உரங்களை மையப்படுத்தியே உருவாக்கப் பட்டுள்ளதால், ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் இல்லாமல் அவை அதிக விளைச்சல் கொடுக்க முடியாது. நாட்டு ரகங்கள் கிடைக்கவில்லை என்றால் நேரடித் தேர்வு வகைகள் மற்றும் மேம்படுத்தப்ட்ட ரகங்களையும் பயன்படுத்தஙகள். இவையும் கிடைக்கவில்லை என்றால் வீரிய ஒட்டு மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிட்டு ஆறு வருடங்களில் ஒரு புதிய ரகத்தை உருவாக்கி விடுங்கள்.

மானாவாரி விவசாயத்தில் ஒரு முறை விதைக்கத் தேவைப்படும் விதை அளவைவிட மூன்று மடங்கு விதைகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். விதை சேகரிக்கும் போது மூன்று மடங்கு விதைகளை சேகரிக்க வேண்டும். மோசமான வறட்சியினால் பயிர் செய்ய முடியாவிட்டாலோ அல்லது முளைத்த விதைகள் வளராவிட்டாலோ அடுத்த பருவத்தில் அல்லது அடுத்த ஆண்டில் கையிருப்பில் உள்ள விதைகளை விதைக்க முடியும்.
.
சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி
ஈஷா விவசாய இயக்கம்