விதை வழி செல்க

விதை வழி செல்க
Agriwiki.in- Learn Share Collaborate

ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீ ரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது…’  (விதை வழி செல்க – நம்மாழ்வார்) நூலிலிருந்து….

‘…என்னைப் பொறுத்தவரையில் இந்த நெல் திருவிழா கூட ஒரு போராட்ட வடிவம் தான்.

~

முப்பது வருடம் என்பதெல்லாம் அதிகம். சொல்லி ஆறு வருடங்களிலேயே தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

ஜூலை மாதம் 14ம் தேதி, 2013ம் வருடம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த ‘குக்கூ நெல் திருவிழா’வில் அய்யா நம்மாழ்வார் ஆற்றிய உரையினை எழுத்து வடிவமாக, குக்கூ காட்டுப்பள்ளி – தன்னறம் பதிப்பகம் ‘விதை வழி செல்க’ என்னும் பெயரில் புத்தக வடிவில் கொண்டுவந்திருக்கின்றனர்.

குக்கூ நெல் திருவிழா நடத்துவதற்கான ஊக்கம், திட்டமிடல் அதை சாத்தியப்படுத்த முயலுகையில் உண்டான இடையூறுகள், திருவிழா நடக்குமா? என்ற பதட்ட தருணத்தில் எதிர்பாராத வகையில், எளிய மக்கள் தானே முன்வந்து உதவிய தருணங்கள் என்று நெல் திருவிழா உருவான பின்னணிகள் குறித்தும் அதற்கு பின்னால் இருந்த மனிதர்கள், நிகழ்வுகள் பற்றியும் ஆரம்பத்திலேயே ஆவணப்படுத்தியது கள நிதர்சனங்களை எடுத்துச் சொல்கிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அரசு, பன்னாட்டு கம்பெனி விவசாயம், உற்பத்தி அரசியல், மண்ணின் மரபு விதைகளை, நெல் ரகங்களை அரசுகளும் அதன் கையிலிருக்கும் விஞ்ஞானமும் களவாடியது, மண்ணைக் கெடுக்கும் ரசாயன உரங்கள், மருத்துவம், உணவு மற்றும் நுகர்வு கலாச்சார அரசியல், மீத்தேன் எடுப்பு போன்ற மக்களுக்குக்கும், இயற்கைக்குக்கும் எதிரான வளர்ச்சித் திட்டங்கள், மரபார்ந்த இயற்கை விவசாயம் என்று எல்லாவற்றையும் பற்றி ஆதாரத் தரவுகளோடும், புள்ளிவிபரங்களோடும், தனது பயண அனுபவங்கள் மூலமாகவும் உழைக்கும் சாமானிய சனங்களுக்கு ஏற்றவாறு பேசியுள்ளார் நம்மாழ்வார். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை நோக்கி எப்படி ஒன்றிணைந்து நகர வேண்டும் என்பதையும் தனது பேச்சில் முன்வைத்துள்ளார்.

மேலும், நம்மாழ்வார் முன்மொழிந்த ‘வாழும் கிராமம்’ செயல்திட்டமும் உரையோடு இணைக்கப்பட்டுள்ளது.

‘தற்போதைய காலகட்டத்தில், கிராமங்கள் வாழ்க்கையற்றதாக மாறிவிட்டன. ஆகவேதான் மக்கள் நகரங்களை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வாழும் கிராமங்கள் வளர வேண்டும்’ என்று சொல்லும் நம்மாழ்வார் வாழும் கிராமங்களை உருவாக்குவதில் 21 செயல்திட்டங்களை வகுத்துச் சொல்கிறார்.

விளையாட்டுத் திடல்கள், குளத்தை ஆழப்படுத்துதல், சுய மரியாதையைக் கொண்ட நாட்டார் தெய்வ வழிபாடுகள், ஒவ்வொரு விவசாயியின் நிலத்தில் குளம் அமைத்தல், எல்லைத் தாண்டாத மாடுகள் வளர்ப்பு, தகவல் மையம், பண்ணை சேவை மையம், பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், கிராம சபை, பழ மரங்கள் நடல், தேன் பெட்டி வைத்தல், தச்சுப் பயிற்சி, ஆடு மாடுகள் வளர்ப்பு, பண்ட மாற்று, தற்சார்பாக கிடைக்க கூடிய பொருட்களை அன்றாடங்களுக்குப் பயன்படுத்துதல், இயற்கை வேளாண்மையை கையிலெடுத்தல் போன்றவற்றை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி கடைப்பிடிக்க வேண்டுமென்று செயல் திட்டங்களைத் தனித்தனியே விரிவாகக் கூறியுள்ளார்.

‘1945ல இருந்து 1965 வரைக்கும் ‘வையக்குண்டான்’ல வெள்ளாமை எடுத்திருக்கோம். மாட்டு உழுவையில மூணு உழுவை அடிச்சு, நாலாவது உழுவைக்கு பரம்படிச்சு ஆடு, மாடு கெட போட்டு புழுக்கை, எரு, தழைளை மட்டும் தான் உரமா போடுவோம். ஆடியில பாவுனா கார்த்திகையில அறுத்துருவோம். களையெல்லாம் ரொம்ப வளராது. நாத்தாங்கால் புடுங்குறதுக்கு ஒரு மாசம் ஆகும். கருது நல்லா இடுப்பு ஒசரத்துக்கு வளர்ந்து, சாஞ்சு நிக்கும். ஆளுக உள்ளப் போனாக் கூடத் தெரியாது. நல்ல அறுவடை நேரத்துல வயக்காடே ஜம்முனு மணத்துக் கெடக்கும்.

நுனிச் சோகைகள மாட்டுக்கு அறுத்துப் போட்டா நல்லா திங்கும். வையங்குண்டான் வைக்கோலு அவ்ளோ சீக்கிரம் அழுகிப் போகாது. நெல்லும் லேசுல உதுராது. அரிசி நல்லா நீட்டமா இருக்கும். ஆக்கி வச்சா நாலு நாளைக்கு அப்படியே இருக்கும். துணியிலக் கட்டிட்டுப் போய் களத்துல சாப்பிடுவோம். வயித்தாலைக்கு நல்லது. நாட்டு வைத்தியத்துல வையக்குண்டான் அரிசி மருந்தா இருந்துச்சு. பெரிய செலவலாம் பிடிக்காம நல்லாவே அறுவடை எடுக்கலாம்.

அப்போலாம் காலம் தப்பாம மழைப் பொழிஞ்சுச்சு. கண்மாயில தண்ணீர் கெடந்துச்சு. இயற்கை உரங்களத்தான் போடுவோம். இப்போதான் கண்ட கண்ட மருந்துகள ஊத்தி மண்ணையெல்லாம் வேக வச்சுடாய்ங்களே. படிப்படியா வையக்குண்டானயும் கண்டம் பண்ணிட்டாய்ங்க’

அரசியலால் மிகவும் அருவமாக்கப்பட்ட ‘வையக்குண்டான்’ என்ற நமது மரபு நெல் ரகத்தில் வெள்ளாமை எடுத்த உழுகதையைப் பற்றி எனது தாத்தா என்னிடம் மேற்சொன்ன விஷயங்களை இந்த ‘விதை வழி செல்க’ நூலோடு பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.

அறமற்ற அரசியலால் இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளை வணிகமாக்கப்பட்டது, நீர் நிலைகள், விவசாய பூமிகள் அழிப்பு, பருவநிலை மாற்றம், மரபணு மாற்ற பயிர்கள் என்று அரசுகளும், அதன் ஆராய்ச்சிகளும், கூடவே நாமும் இயற்கையின் அடிப்படை சமநிலையைக் குழைத்து அதன் சங்கிலி கண்ணிகளை வலுவாக அறுத்துவிட்டோம்.

அதற்கு உண்டான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ‘பழங்கதையெல்லாம் வேண்டாம், காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டும், பின்னோக்கி செல்ல முடியாது’ போன்ற அறிவுஜீவித்தனக் கருத்துகள், அதிகாரங்கள் எல்லாம் இயற்கைக்குத் தெரியாது. தன்னை சமநிலைப் படுத்திக்கொள்ள எல்லோரையும் வாரி சுருட்டி வாயில் போட்டு மென்று துப்பிவிடும்.

– முத்துராசா குமார்