வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை

வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை tree-root-irrigation
Agriwiki.in- Learn Share Collaborate

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறைகள் பரிந்துரை செய்துள்ளன.

ஆர்வம் : தமிழக அரசில், வருவாய் நிர்வாக ஆணையராக இருப்பவர் சத்யகோபால். ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், விலங்கியல் பாடத்தில், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நீர் மேலாண்மை
மற்றும் மரங்கள் வளர்ப்பில், ஆர்வம் கொண்டவர். இவர், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்த, மரங்களின் வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறையை கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்தி உள்ளார். இதன் வாயிலாக, மரங்கள், வேகமாக வளர்வதை, தன்
ஆய்வின் மூலம் நிரூபித்து உள்ளார்.இதற்காக, அவரை பாராட்டி, சுதந்திர தின விழாவில், முதல்வர்பழனிசாமி கவுரவித்தார்.

தன் கண்டுபிடிப்பு குறித்து, சத்யகோபால் கூறியதாவது: பொதுவாக குழி தோண்டி, மண், உரம் போட்டு, செடி அல்லது மரங்களை நடுவோம். பின், அவற்றை சுற்றி பாத்தி கட்டி, தண்ணீர் விடுவோம். இவ்வாறு தண்ணீர் விடும்போது, தண்ணீர் அதிக அளவில் வீணாகும்; மின்சார செலவும்
அதிகரிக்கும்.சொட்டு நீர் பாசனத்திலும், செடி மற்றும் மரங்களின் வேர்களுக்கு, தண்ணீர் செல்ல தாமதமாகிறது. மரங்களின் வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் சென்றால், நீர் தேவை குறையும்; மரம் நன்றாக வளரும்.

கடந்த ஆண்டு, ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, மரக்கன்று நடுவதற்காக தோண்டிய குழியின் நான்கு புறமும், பிளாஸ்டிக் குழாய்களை புதைத்துவிட்டு, மற்ற பகுதிகளில், உரம், மண் போன்றவற்றை நிரப்பி, செடிகளை நட்டேன்.
பாராட்டு : இரண்டு அடி ஆழத்திற்கு, நான்கு புறமும் வைத்த பிளாஸ்டிக் பைப்புகளில், சிறிது மண்புழு உரம் மற்றும் ஆற்று மணலை நிரப்பிவிட்டு, குழாயை உருவி எடுத்து விட்டேன். ஆற்று மணல் மீது, தண்ணீர் ஊற்றியபோது, தண்ணீர் நேராக வேருக்கு சென்றது.

deep-root-irrigation
deep-root-irrigation

இவ்வாறு நடப்பட்ட மரம், சாதாரணமாக நடப்பட்ட மரக்கன்றை விட, வேகமாக வளர்ந்தது. தண்ணீர் மற்றும் மின்தேவை குறைந்தது. இந்த முறையை பயன்படுத்த செலவும் குறைவு.

திருப்பூர் மாவட்டத்தில், வறட்சி காரணமாக, தென்னை மரங்கள் கருகத் துவங்கிய போது, தென்னை மரங்களை சுற்றி, இம்முறையில் மணல் நிரப்பி, தண்ணீர் விட, தென்னை மரங்கள் நன்கு வளர்ந்தன; குரும்புகள் உதிர்வது குறைந்தது.எனவே, இந்த கண்டு பிடிப்பு விபரத்தை,
அரசுக்கு தெரிவித்தேன். அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. இது, உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.