Month: July 2017

கீரை சாகுபடி

கீரை சாகுபடி

கீரை சாகுபடி
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடி க்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும்.

உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.

கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.

பருவம் :

ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்:

விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோ

விதைத்தல் :

விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்:

நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு:

விதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது.

அறுவடை:

 

அரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்.

முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்.

தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.

தானியக்கீரை : விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியம் எக்டருக்கு 2.4 டன்கள்.

பொன்னாங்கண்ணி சாகுபடி

பொன்னாங்கண்ணி சாகுபடி

பொன்னாங்கண்ணி சாகுபடி: பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர்.

இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம்.

தொட்டிகளில் பராமரிப்பு:

பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம்.

வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச்செடிகள் அல்லது நுண்தண்டுகளை நடவேண்டும்.

பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இதற்காக மண்புழு கம்போஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் அளவு மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாத இடைவெளியில் இடவேண்டும்).

பாத்தியில் வளர்த்தல்:

மண்ணை நன்றாக வெட்டி 1 சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம்.
வேர்களை உடைய பக்கச் செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது.
தொட்டியில் பராமரிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்களான மண்புழு உரம் இடவேண்டும்.
தொட்டியிலும் பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும்.
இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மிலி அளவு) தெளிப்பது நல்லது.
செடிகளை நட்ட 4வது மாதத்தில் இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம்.
தரைமட்டத்திலிருந்து 5 செ.மீ. உயரத்தில் முழுச்செடியை வெட்டி எடுக்கலாம்.

தொடர்புக்கு: 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம்-638 656. திருப்பூர்.
எம்.அகமது கபீர், பி.எஸ்சி (அக்ரி), எம்.பி.ஏ.,

வேளாண்மை ஆலோசகர், 09360748542.

மல்லி சாகுபடி

மல்லி சாகுபடி

மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.
வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும்.

Continue reading

கொத்தமல்லி

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.

கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது.

Continue reading

அதிக லாபம் தரும் வெந்தய கீரை

அதிக லாபம் தரும் வெந்தய கீரை

அதிக லாபம் தரும் வெந்தய கீரை!
குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்:

வெந்தயக்கீரை பயிரிடும் முறை

நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.
பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும்.

விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம்.
அக்., முதல், டிச., மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம்.

25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை.

அறுவடை:

விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம்.

90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம்.மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும்.

வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம்.

மகசூல்:

வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம்.

நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும்.

 

பயன்கள்:

மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம்.

நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது.

Continue reading

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்!

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்

நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம் – கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், குஞ்சுகள் இருமடங்காக வளர்ச்சியடையும்

நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் :

1. ஒரு பழைய பானை

2. கிழிந்த கோணி/சாக்கு

3. காய்ந்த சாணம்

4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்

கரையான் உற்பத்தி செய்முறை :

பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.

கரையான் செயலாற்றும் முறை :

இது ஒரு ஈர மரக்கரையான் வகையானதாகும் (Dandy wood termites) பொதுவாக கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

கரையானில் உள்ள சத்துக்கள்:

கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கரையான் கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாகும்.

நன்மைகள் :

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை.