Month: September 2017

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பை விளக்கும் ஒரு பக்க கட்டுரை.
தாராபுரம் நீர் மேம்பாடு
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு
ஏன் தாமதிக்க கூடாது?
1. ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையால் நில அதிர்வுகள் ஏற்படும்.
2. திடீர் நில மற்றும் கட்டிட புதைவுகள் ஏற்படும்.
3. நிலத்தடியில் வெற்றிடம் ஏற்படுவதால் கடல் நீர் ஊடுறுவி நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக மாசுபட்டு பல உடல் நல கோளாறுகள் ஏற்படும்.
4. ஆங்காங்கே தற்போது இருக்கும் தண்ணீர் மாபியாக்கள் அதிகமாகி ஒட்டு மொத்த சமுதாயமும் அடிமைப்பட்டு சீரழிய நேரிடும்.
அவசியம் ஏன்?
1. காலநிலை மாற்றங்களால் மழை பொழியும் நாட்கள் குறைந்து வெப்பம் அதிகமாகி வருவதால் நிலத்தின் மேற்பரப்பில் நீரை தேக்கி வைப்பதால் நீர் மிகுதியாக ஆவியாகிவிடுகிறது.
2. நிலத்தடி நீர் கடல் மட்டத்தை தாண்டி ஏற்கனவே வறண்டுவிட்டது.
3. இருக்கும் ஆழ்குழாய்களை செறிவூட்டுவதால் புதிய கிணறுகளின் தேவை குறையும் மற்றும் பொருளாதார இழப்பையும் தவிர்க்க முடியும்.
செயல் படுத்தும் முறை
1. நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவிற்கு உகந்த அளவில் தற்காலிகமாக மழை நீரை தேக்கி வைக்க பண்ணை குட்டையை அமைக்கவும்.
2. மண் கலந்த நீரை நன்றாக வடிக்க குட்டையின் நடுவிலோ அல்லது ஒரு ஒரத்திலோ சுமார் 5அடி x 5அடி x 5அடி பரப்புள்ள குழியை அமைக்கவும்.
3. நீர் வடிக்கும் குழியின் அடிப்பகுதியிலிருந்து ஆழ்குழாய் கிணறு வரைக்கும் சிறு அகலத்தில் அமைத்து பி.வி.சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கவும்.
4. பக்கவாட்டில் பி.வி.சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு நிறைய குறு துளைகள் இட்டு பச்சை பிளாஸ்டிக் வலையால் நன்கு சுற்றி மண்துகள்கள் எதுவும் நுளையா வண்ணம் கட்டி விடவும். இந்த சல்லடை அமைப்பு மூலம்தான் மழை நீர் மெல்ல ஊடுறுவி ஆழ்குழாய் கிணற்றுக்குள் செல்லும்.
5. நீர் வடிக்கும் குழியை முதலில் பெரும் கற்களால் பாதி அளவு மூடி விடவும். மீதியை சிறு கற்கள் கொண்டு மூடி விடவும். மேற்பகுதியில் ஓரிரு அடிக்கு மணலையோ அல்லது மணல் கப்பிகளையோ கொண்டு மூடிவிடவும். இந்த வடிகால் அமைப்பு சல்லடை அமைப்பை அடைக்காமல் இருக்க உதவும்.
6. மேலும் விபரங்களுக்கு பின்பக்கமுள்ள படத்தை பார்க்கவும்.

Home Page

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள்

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள்

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா?

நண்பர்களே எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.

இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

மேல்நோக்கு நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் ( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.

அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.

இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் I போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

கீழ்நோக்கு நட்சத்திரங்கள்:

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள்,
( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

சமநோக்கு நட்சத்திரங்கள்:

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும்
( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்.

மழைநீரை சேமிக்கும் வழிகள்

மழைநீரை சேமிக்கும் வழிகள்

மழைநீரை சேமிக்கும் வழிகள்

விவசாயிகள் மழைக்காலங்களில் பெரும் மழை நீரை சேமிக்கும் வழிகள்

கோடைஉழவு

விவசாயிகள் கோடை உழவின் மூலம் மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையினை அதிரித்து மண்வளத்தினை பாதுகாக்கலாம். பொதுவாக களிமண் நிலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சட்டிக்கலப்பை கொண்டு கோடையில் ஆழஉழவு செய்யவேண்டும். செம்மண் நிலங்களில் ஒன்று முதல் இரண்டு வருட இடைவெளியில் இத்தகைய ஆழஉழவு மழைநீர் சேமிப்பிற்கு உதவியாக இருக்கும்.

உழவு முறை

நாம் உழும்போது பயிரிடும்போதும் நிலத்தின் அமைப்பினை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எப்போதும் உழவும் பயிர் சாலும் சரிவிற்கு குறுக்காகத்தான் இருக்க வேண்டும். உழவின் கரையும் பயிரின் கரையும் பெய்யும் மழை நீரின் வேகத்தினை கட்டுப்படுத்தி அதிக அளவு நீர் மண்ணின் உள்ளே செல்வதற்கு உதவியாக இருக்கும்.

அறைவட்ட கரைகள் போடுதல்

குறைந்த செலவில் மரத்திற்கு நீர் கிடைக்க வட்டப்பாத்திகள் ஒரு மீட்டர் வட்டத்தில் செடிகளைச் சுற்றி போடலாம் இது சமதளபூமிக்கு மிகவும் உகந்தது. ஆனால் சரிவான நிலத்தில் அரை வட்டத்திலோ அல்லது பிறைவட்டத்திலோ பாத்தி செய்து மழைநீரை சேமித்து மரங்களுக்கு கிடைக்கச் செய்யலாம்.

பண்ணைக் குட்டை அமைத்தல்

விவசாயிகளின் நிலங்களில் மழைநீரை தேக்கி வைப்பதற்கு நில அமைப்பிற்கு ஏற்ப சிறிய குட்டை அமைத்து அதில் சேகரிக்கப்படும் நீரை வறட்சிக் காலத்தில் பயிரின் முக்கிய பருவத்தில் நீர் பாசனம் செய்யலாம். பண்ணைக் குட்டையின் கொள்ளளவு ஒரு ஹெக்டேருக்கு சுமார் 250 கனமீட்டர் கொண்டதாக இருக்கலாம்.

கசிவு நீர் குட்டை

மழைநீர் செல்லும் ஓடைப்பகுதியில் கசிவு நீர்க்குட்டை அமைத்து அதில் மழைக்காலங்களில் மழைநீரைத் தேவையான அளவிற்கு தேக்கி விவசாயத்திற்கும், கால்நடைகளின் உபயோகத்திற்கும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். இந்தக் குட்டையால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிணறுகள் பயன்பெறும்

சமமட்ட குழிகள் தோண்டுதல்:

மண் அதிக்கப்பட்ட தரிசு நிலங்களில் மண்வளப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தலாம். 30 செ.மீ அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை சமகோட்டில் தொடர்ச்சியாக தோண்டி ஓடும் நீரை தடுக்கலாம். இதில் காய்ந்த சருகு, இலை மற்றும் கழிவுகளை இட்டு நீர் ஆவியாதலை குறைக்கலாம். இம்முறை களிமண் நிலங்களுக்கு மிகவும் உகந்தது.

வயல் வரப்புகளை உயர்த்துதல்:

வயல் வரப்புகளை உயர்த்தி மழைநீரை வீணாக வெளியில் செல்வதைத் தடுக்கலாம் இதற்கு செம்மண்ணில் சரிவுப்பாத்தி முறையையும் களி மண்ணில் ஆழச்சால் அகலபாத்தி முறையையும் பின்பற்றலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்:

நிலத்தில் மேடு பள்ளம் இருந்தால் அதிக அளவில் தண்ணீர் குடிக்கலாம். ஒரு பக்கம் நிலம் காயும், மற்றொரு பக்கம் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆகையால் முதலில் நிலத்தில் மேடு பள்ளங்கள் இல்லாமல் நிரவி சமப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

மண் ஈரச் சேமிப்பு:

மண்ணில் செடியின் ஆழத்திற்கு உட்பட்ட இடங்களில் இருந்து மட்டும் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகின்றது. இலை, தழை, சருகு போன்ற நிலப்போர்வைகளைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதம் ஆவியாகாமல் பாதுகாத்தல் வேண்டும்.

நீர் சேமிக்கும் முறை

மிகக் குறைந்த அளவு தண்ணீரை வைத்து வெங்காயம், தக்காளி, மக்காச்சோளம், பயறுவகைகள் மற்றும் கொடிவகை பயிர்களை சாகுபடி செய்யலாம்
தென்னை நார்க்கழிவு, கரும்புத்தோகை, போன்ற விவசாய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி நிலப்போர்வை செய்து நீர் ஆவியாவதைத் தடுக்கலாம்

சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் முறைகளைப் பயன்படுத்தி காய்கறி, பருத்தி, நெல், வாழை போன்றவற்றை சாகுபடி செய்வதன் மூலம் தண்ணீரை சேமிக்கலாம்.

தரிசு நிலங்களிலும், மலைப்பகுதியிலும்; மரங்களை நடவு செய்வதன் மூலம் மழை பெய்வதற்கு காரணமாகிறது. சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்தடிநீர் ஆவியாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

~ ப.பி

பலதானிய விதைப்பு முறை

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் :

1.பலதானிய விதைப்பு முறை:

இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் காரியம் பல தானிய விதைப்பு முறை. இரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை, 200 நாட்களில் வளம்மிக்க நிலமாக மாற்றலாம். இதைத்தான் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்தார். 1 ஏக்கர் நிலத்திற்கு பல தானிய விதைப்பு பற்றி காண்போம்.

1. தானிய வகை நான்கு:

சோளம் – 1 கிலோ
கம்பு – 1/2 கிலோ
தினை – 1/4 கிலோ
சாமை – 1/4 கிலோ
2. பயிர் வகை நான்கு:

உளுந்து – 1 கிலோ
பாசிப்பயிர் – 1 கிலோ
தட்டப்பயிர் – 1 கிலோ
கொண்டைகலை -1கிலோ
3. எண்ணெய் வித்துக்கள்:

எள்ளு – 1/2 கிலோ
நிலக்கடலை – 2 கிலோ
சூரியகாந்திவிதை – 2கிலோ
ஆமணக்கு – 2 கிலோ
4. பசுந்தாள் பயிர்கள்:

தக்கப்பூண்டு – 2 கிலோ
சணப்பு – 2 கிலோ
நரிப்பயிர் – 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ
5. நறுமணப் பயிர்கள் :

கடுகு – 1/2 கிலோ
வெந்தயம் – 1/4 கிலோ
சீரகம் – 1/4 கிலோ
கொத்துமல்லி – 1 கிலோ
மேற்சொன்ன 20 விதைகளும் வெறும் உதாரணம். இவற்றை அப்படியே கூறியவாறு விதைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவரவர் பகுதியில் கிடைக்கும் விதைகளை, ஒவ்வொறு வகைக்கும் நான்கு தானியம் வீதம் எடுக்கவும். அளவு கூட குறைய இருக்கலாம். இந்த 5 வகை தானியங்களை கலந்து ஒரே நேரத்தில் நிலத்தில் விதைக்க வேண்டும். விதைகளில் இருந்து வளர்ந்த பயிர்கள் 45 முதல் 50 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை அப்படியே மடக்கி உழவு போடவும். இவை மக்கி நுண்ணுயிர் பெருகும். இதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து சமச்சீராக இருக்கும். பல தானிய விதைப்பு முறையை 2 அல்லது 3 முறை செய்யலாம்.