உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள்

உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள்
Agriwiki.in- Learn Share Collaborate
உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள்
– பாமயன் –
இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவு போல இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இச்சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக மோடி அவர்களின் பிறந்தநாளன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவுகள் வரமா? அல்லது சாபமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இத்தகைய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் ஏன் நடந்து வருகின்றன. அதன் பின்னணிதான் என்ன?
இந்தியாவின் வேளாண் சந்தை மிகப்பெரியது. ஏறத்தாழ 1658700 கோடி ரூபாய்கள் புரளும் துறை. இந்தியாவின் வேளாண்மையை நம்பி உள்ளவர்கள் 55 விழுக்காட்டு மக்கள். இன்று இவ்வளவு பெரிய சந்தையை பன்னாட்டு அமைப்புகளுக்குத் திறந்துவிட்டுள்ளார்கள். தடைகள் யாவும் தளர்த்தப்பட்டுள்ளன.
தேவைக்கான உற்பத்தியில் ஈடுபட்டு வந்தபோது உழவர்கள் சந்தையைப் பெரிதும் நம்பி இருக்கவில்லை. ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வேளாண்மையின் ஏற்பட்ட மாற்றம், குறிப்பாக சந்தையை நோக்கிய உற்பத்தி ஏற்பட்டபோது, அதை விற்க வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டார்கள். அப்போது அவற்றை முறைப்படுத்த வேளாண் கொள்முதல் மையங்கள் உருவாக்கப்பட்டன. அவை சிறப்பாகவும் செயல்பட்டன. ஆனால் வழக்கம்போல அதில் அரசியல் கட்சிகளின் தலையீடு, ஊழல் போன்றவற்றால் சீரழிந்து போகத் தொடங்கின. எப்படி நன்னோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டனவோ அதேபோல இவையும் சீரழிக்கப்பட்டன. இதையே காரணங்காட்டி அவற்றை மூடும் நடவடிக்கைகளும் நடந்தன. அத்தோடு அவற்றை தனியார்களிடம் ஒப்படைக்கவும் செய்தார்கள். குறிப்பாக பீகாரிலும் கேரளாவிலும் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றால் எந்த நல்ல பலனும் கிட்டவில்லை. தனியார் அமைப்புகள் நன்றாகப் பயன்பட்டன, உழவர்களுக்குப் பயன் கிட்டவில்லை. இதை தேசிய மாதிரி கணக்கீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மூன்று சட்டமுன்வரைவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்த சட்ட முன்வரைவு அடுத்தது பண்ணைச் சேவை முன்வரைவு என்று மூன்று வரைவுகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நகர்வில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பஞ்சாப், அரியானா முதலிய நன்செய் வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளே. ஏனென்றால் அதிகமான நீர் வளம், அதிகமான ரசாயன உரங்கள் வீரிய விதைகள் என்று உற்பத்தியை பெருமளவு பெருக்கியதால் கோதுமையும், நெல்லும் அதிக அளவு விளைந்தன. தமிழத்தில் தஞ்சை மண்டலத்தில் இதே நிலைதான் உள்ளது. அவ்வாறு அதிகமாக உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்த வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் பயன்பட்ட உழவர்களும், மண்டி எனப்படும் சிறு கொள்முதல் மையங்களும் பயன்பட்டன. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்களும் பெருமளவில் மண்டிகளை உரிமம் பெற்று நடத்தி வருகின்றனர். இதனால் மாநில அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. குறிப்பான 7 விழுக்காடு வரை மாநில அரசுகளுக்கு பரிவர்த்தனையில் வருமானம் கிட்டும். இந்த சட்டங்கள் வழியாக தனியார் அமைப்புகள் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து சந்தையைக் கைப்பற்றுவார்கள். மாநில வருவாயும் தடைப்படும். சிறு குறு மண்டிகள் காணாமல் போகும்.
அரசு முன்வைக்கும் வாதம் என்னவென்றால், உழவர்கள் தங்களது விளைபொருளை எங்கும் கொண்டு சென்று விற்றுக்கொள்ளலாம் என்பதாகும். அதற்கு புதிய சட்டம் ஒன்றும் தேவையில்லை. ஏற்கனவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களை எங்கும் கொண்டு சென்று விற்பதை யாரும் தடை செய்ய முடியாது. உண்மையில் இந்தச் சட்டத்தின் உட்பொருள், வணிகள் எங்கும் சென்று வேளாண் விளைபொருட்களை வாங்கலாம் என்பதாகும். ஆக ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக, உழவர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி பெருவணிகர்களைக் காப்பாற்றும் முயற்சி இது என்றே கூற முடியும்.
அடுத்தாக நிறைய வாங்குவோர் சந்தைக்குள் வரும்போது போட்டி உருவாகி உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். உண்மையில் அப்படி நடக்கவில்லை என்பதற்கு பீகாரும், கேரளாவும் நல்ல எடுத்துக்காட்டுகள்.
நாம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் போட்டி ஏற்படுத்தினால் கட்டணம் குறையும் என்றார்கள். நடைமுறை என்ன? பல நிறுவனங்கள் வருவதுபோல் வந்தன. அவை ஒரே நிறுவனமான ரிலையன்சால் அடித்து நொறுக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளன. இதுதான் நமது வேளாண் சந்தையிலும் நடக்கும்.
குறிப்பான கொரானா அச்சத்திற்குப் பின்னர் வெகு வேகமாக வளர்ந்துவரும் ஆன்லைன் சந்தையான இணையச்சந்தைக்கு ஏராளமான இருப்பு வேண்டும். அந்த பெருமளவு இருப்பு வைக்கும் சூழல் இப்போதுள்ள சட்டங்களின்படி இயலாது. எனவே இதை மாற்றி யாரும் எவ்வளவு இருப்பு வேண்டுமாலும் வைத்துக் கொள்ளலாம் என்று இப்போது வந்துள்ள சட்ட வரைவு உறுதி செய்கிறது. எனவே இனி பதுக்கல் என்ற பேச்சே வராது, அதாவது அவர்கள் சட்டப்படி இருப்பு வைத்துக் கொள்வார்கள். விலையை எவ்வளவு வேண்டுமானாலும் கூட்டி விற்கலாம். யாரும் கேட்ட முடியாது.
அதுமட்டுமல்ல அதைவிடப் பேரச்சம் குறைந்தபட்ச ஆதரவு விலை. இதுவே மிகப் பெரிய மோசடி. அதாவது உழவர்களின் உண்மையான விளைவிப்பு மதிப்பைக் குறிப்பிடாமல், ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் பணவீக்கத்தைக் கணக்கிடாமல், இடுபொருட்களின் விலை ஏற்றத்தைக் கணக்கிடாமல் உழவர்களைக் கொள்ளையடிக்கும் இந்த குறைந்தபட்ச ஆதாரவிலையிலும் கைவைக்கும் போக்கு என்று உழவர் அமைப்புகள் கடமையாக எச்சரிக்கின்றன. ஆனால் அரசு அப்படி எல்லாம் நடக்காது. நாங்கள் ஆதார விலையை எடுக்க மாட்டோம் என்று வாயால் உறுதி கூறுகின்றன. சட்ட வரைவில் ஏதும் இல்லை.
உண்மையில் குறைந்தபட்ச ஆதார வேலையைவிடக் குறைவாக வாங்கும் வணிகர்களைத் தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் வெங்காயம் விலை ஏறினால் அதைத் தடுக்கச் சட்டம் உண்டு. ஏனென்றால் அது நகர்ப்புற மக்களின் நலனைப் பாதுக்காக்கிறது. ஏழை உழவனைப் பாதுகாக்க என்ன சட்ட உள்ளது?
உண்மையில் என்ன செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நியாயமாக அறுதியிட வேண்டும். அதை ஆண்டுக்கு ஆண்டு விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். குறைந்தால் குறைக்கட்டும், உழவர்கள் யாரும் அதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சிறு குறு உழவர் குழுக்களை அதில் பயன்படுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் கம்பனி என்று ஆயிரம் உழவர்களைச் சேர்த்து குழு வைத்து போகாத ஊருக்கு வழிகாட்டும் கதையைத் தூக்கிப் போட்டு விட்டு, இருபது முதல் ஐம்பது பேர்களுக்குள் இருக்கும் குழுக்களை வலிமைப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து இயங்க வைக்க வேண்டும்.
விலையை உறுதி செய்யும்போது (அதாவது உண்மையாக அவர்கள் விளைவித்த செலவை ஈடுகட்டும் முறையான விலை) அது சிறு மண்டியாக இருந்தாலும், பெரும் நிறுவனமாக இருந்தாலும் அதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய வேண்டும், அடுத்ததாக தரம் என்ற பெயரில் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் போக்கு, முன்பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டி போட்டு வாங்குவது, அவர்களை மற்றவர்களிடம் விற்பனை செய்ய விடாமல் தடுப்பது, விலைப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, குறிப்பாக எடையில் ‘அடிப்பது’ அதாவது எடைபோடுவதில் ஏமாற்றுவது, போன்ற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாட்டில் மிகச் சிறப்பாகச் செயல்படும் பொது விநியோக முறை என்ற நியாய விலைக்கடைகளை வலுப்படுத்த வேண்டும். அங்கங்கே விளையும் பொருள்களை மதிப்பேற்றி அங்கங்குள்ள நியாய விலைக் கடைகளுடன் இணைக்க வேண்டும். அதன் மூலம் தேவையற்ற பணச்செலவு குறைவும். இதனால் குறைந்த விலையில் நல்ல உணவு மக்களுக்கு கிடைப்பதோடு உழவர்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும். இதைத்தான் குமரப்பா, காந்தி போன்ற மேதைகள் வலியுறுத்தினார்கள். உற்பத்தியையும், விநியோகத்தையும் பரவல்மயப்படுத்தி, மக்கள்மயப்படுத்துவதற்கு முயல வேண்டும். இந்த முறையில் ஒரு சில குறைகள் இருப்பதால் அவற்றை களைய வேண்டுமேயன்றி, அவற்றை மூடிவிட்டு பெருநிறுவனங்களிடம் கைவிட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது.
நடைவண்டியில் நடைபழகும் குழந்தை தவறிக் கீழே விழுந்துவிட்டது என்பதற்காக நடை வண்டியையே தூக்கி வீசும் கதையாக இன்றைய ஆட்சியாளர்கள் வலுவான அரசுக் கட்டமைப்புகளைச் சிதைப்பது நல்லதல்ல.
அதைவிட அவசியமான பணி, வேளாண் துறையில் உள்ள ஊழியர்களின் பங்கு. அவர்கள் இன்று அரசு தரும் திட்டங்களை கொண்டு செல்லும் தரகர்போல ஆக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கும்பணிகளின் பொருள்களை விற்கும் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். உழவர்களுக்கு வேளாண்மை அறிவைப் பகிரவும், அவர்களுன் சேர்ந்து கண்டறியவும் செய்ய வேண்டும். அவர்களுக்கு போதிய அதிகாரமும், சுதந்திமும் கொடுக்கப்பட வேண்டும். அந்தத் துறையை முடக்கிப்போட்டுவிட்டு, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு எப்படி வேளாண்மையை முன்னேற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.