வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி
தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.
குறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர்.
எங்கள் அப்பா காலத்தில்,
கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும்.
சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர்.
ஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை.
உளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0.5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும்.
சித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும்.
அடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும்.
கொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது.
by Saravanan Thiyagarajan from FB