Month: March 2021

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்றுக்கு இடுபொருளாக (input) மாறுவதன் மூலமே அவற்றின் உள்ளீட்டு செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்க முடியும். நன்செய் நிலங்களில் நெல், கரும்பு, வாழை (Banana) சாகுபடியுடன் மீன், கறவை மாடு, கோழி, காடை மற்றும் வாத்துகளை வளர்க்கலாம். இவற்றுக்கான தீவனப்பயிர் (Fodder) மற்றும் காளான் வளர்ப்பும் இணைத்து செயல்படுத்தலாம். நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் (Straw) கால்நடைகளுக்கு தீவனமாகவும், காளான் வளர்ப்பில் இடுபொருளாகவும் பயன்படுகிறது. கால்நடை கழிவுகளின் சாணம், பயிர்க் கழிவுகள் மற்றும் காளான் வளர்ப்பில் கிடைக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கலாம்.
உபதொழில்கள்:
புன்செய் நிலங்களில் பயிர் சாகுபடியுடன் (Cultivation) கறவை மாடு, எருமை, ஆடு, கோழிகள் வளர்க்கலாம். இதனுடன் சாண எரிவாயுக்கலன் அமைக்கலாம். பட்டுப்புழு, தேனீக்கள் மற்றும் பழமரங்கள் வளர்க்கலாம். மண்புழு உரப்படுக்கை தயாரிப்பதுடன் வீட்டுத்தோட்டம் (Home garden) அமைக்கலாம். மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடியுடன் வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழிகள் வளர்க்கலாம். வேளாண் காடுகள், பழ மர சாகுபடி, பண்ணைக் குட்டை ஆகியவையும் பயன் தரும். எந்த நிலமானாலும் பயிர்த் தொழிலுடன் உபதொழில்களை இணைத்து செய்வதே தொடர் லாபம் (Profit) தரும். அந்தந்த பகுதிகளில் உள்ள காலநிலை, மண்வளம், மழையளவு, விற்பனை வாய்ப்பு, விவசாயிகளின் மூலதனத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
உபத்தொழில்கள் செய்வதன் மூலம் ரசாயன உரங்களின் அளவையும் சாகுபடி செலவையும் குறைத்து, மண்வளத்தை மேம்படுத்தலாம். நீர் ஆதாரம் அதிகமாக இருந்தால் 10 சென்ட் நிலத்தில் மீன் குட்டை அமைக்கலாம். இதில் கட்லா 4 பங்கு, ரோகு 3 பங்கு, மிர்கால் 2 பங்கு மற்றும் ஒரு பங்கு புல்கெண்டை என 400 மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். குட்டையின் மேல் கூண்டு அமைத்து கோழி அல்லது ஜப்பானியக் காடை வளர்த்தால் இவற்றின் எச்சங்கள் மீன்களுக்கு (Fish) உணவாகும். மீன் குட்டையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் மீன்குட்டை கழிவுகள் பயிர்களுக்கு எருவாகிறது. குட்டையைச் சுற்றி காய்கறி மற்றும் பழப்பயிர்கள் வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேலையாட்களை குறைத்து குடும்ப நபர்களே வேலைகளைச் செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.
சங்கீதா, உதவி பேராசிரியர்
லதா, பேராசிரியர்
உழவியல் துறை வேளாண்மைப் பல்கலை கோவை.
agronomy@tnau.ac.in