சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1

சந்தன மரம் வளர்ப்பு
Agriwiki.in- Learn Share Collaborate

சந்தன மரம் வளர்ப்பு:

(பாகம்-1)
இயற்கையாக சந்தனம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது . இந்தியாவினை பொறுத்த வரையில் தக்காண பீட பூமி பகுதியில் உள்ள இலையுதிர் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது . இப்பகுதியில் வளரும் மரங்கள் சராசரியாக 12 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய தன்மையுடையது . அடிமரத்தின் சுற்றளவு 1 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை இருக்கும்
.
சந்தனம் வளர ஏற்ற மண் வகைகள்:
செம்மண் , கரிசல் மண் , சரளை மண் மற்றும் களிமண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது . களிமண் என்றால் நல்ல வடிகால் வசதி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் . மண்ணின் கார அமிலத் தன்மை குறிப்பிட்ட அளவு வரை இருக்கலாம் . சந்தன மரத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு . அதாவது கற்கள் அதிகம் உள்ள நிலம் , சரளை மண் நிலங்களில் வளரும் சந்தன மரங்களில் அதிக அளவு வாசனை தன்மையும் , அதிக வாசனை எண்ணெய் சத்து இருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன .
சந்தன மரம் வளர ஏற்ற சீதோஷ்ண நிலை மற்றும் மழை அளவு:
இம்மரம் வளர 35 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி
செல்சியஸ் வரை வெப்ப நிலை உகந்ததாகும் . சந்தன மரத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு மட்டுமே நிழல் அவசியம் தேவைப்படும் . மரம் வளர வளர அதிக வெயில் தேவைப்படும் . ஆண்டிற்கு 600 மி.மீட்டர் முதல் 1600 மில்லி மீட்டர் வரை மழை இருந்தால் செழிப்பாக வளரும் .
வளர்ந்த நிலையில் சந்தனம்:
வளர்ந்த நிலையில் சந்தன மரமானது பிரமிடு வடிவத்தில் காணப்படும் . அதாவது மரத்தின் அடிப்பகுதியில் உள்ள பக்கக் கிளைகள் நீண்டும் , மேல் பக்கத்தில் இருக்கும் கிளைகள் மேல்நோக்கி குறுகியும் காணப்படும் . அதோடு மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் மரமானது பசுமையாகவே இருப்பது சந்தனத்திற்கு உரிய சிறப்பாகும் . மரமானது குறிப்பட்ட ஆண்டு இடைவெளிக்கு பின்பே கட்டை தன்மையாக மாறும் . அப்பொழுதுதான் மரத்தின் பயன்பாடு தொடங்கும் . மரம் முதிர்வுக்கு முன் மிருதுவான தன்மையுடனும் முதிர்ந்தபின் ஆழமான வெடிப்புகளுடன் சிகப்பு கலந்த குங்கும நிறத்துடன் இருக்கும் .
சந்தனம் ஒர் டையோசியஸ் ( இருபால் ) வகை:
சந்தன மரமானது ஆண் , பெண் என தனித்தனியாக இல்லாமல் ஒரே வகையில் இரு தன்மைகளையும் கொண்டுள்ளது . ( அர்த்தநாரிஸ்வரர் ) சந்தன மரம் 2-3 வயது முதல் பருவத்திற்கு வந்து பூக்களை உருகாக்கும் . ஆண்டில் இருமுறை அதாவது மார்ச் – மே மாதத்திலும் , செப்டம்பர்- டிசம்பர் மாதங்களிலும் பூக்களை உருவாக்கும் .
சந்தன பழம்:
சந்தன மரத்தில் பூக்கள் உருவானதில் இருந்து 15-20 பழம் நாட்களுக்குள் கருவுற்று காய்கள் உருவாகும் . காய்கள் உருண்டை வடிவம் அல்லது நீள்வட்ட வடிவத்துடனும் , 1 விதையுடனும் இருக்கும் . இளம் காய்கள் பச்சை நிறத்திலும் , பழமானதும் கரு ஊதா நிறத்திலும் இருக்கும் . சந்தன பழம் முதிர்ச்சி அடைய 4-5 மாதங்கள் ஆகும் .
சந்தன ( விதை ) சேகரித்தலும் , தூய்மையாக்குதலும் :
பழங்கள் முதிர்ந்த பின்பு அதாவது கரு ஊதா நிறம் அடைந்த பின்பு சேகரிக்க வேண்டும் . காய்கள் நிறம் மாறியதும் மரத்தில் இருந்து நாமே பறித்து விதைகளை பிரித்தெடுக்கலாம் . அல்லது மரத்திலிருந்து தானாக விழுந்த பழங்களை சேகரித்து விதைகளை பிரித்தெடுக்கலாம் . விதைகள் மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் , செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் சேகரிக்கலாம் . மார்ச் ஏப்ரல் மாதங்களை விட செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அதிக பழங்கள் கிடைக்கும் . எந்த மாதங்களில் சேகரித்தாலும் விதைகளின் தரம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் .
விதைகளை பிரித்தெடுத்தல்:
சேகரித்த பழங்களை தண்ணீரில் நன்றாக ஊற வைத்து பின் இரு கைகளாலும் தேய்த்தால் பழங்களின் மேல் உள்ள தோல்பகுதி உரிந்து விதைகள் தனியாக பிரிந்து விடும் . இவ்வாறு பிரித்த விதைகளை தனியாக சேகரித்து நிழலில் உலர்த்தி சேகரிக்கலாம் . 1 கிலோவில் சராசரியாக 6000 விதைகள் வரை இருக்கும் .
விதை சேகரிப்பு :
மேற்கண்ட முறையில் பிரித்தெடுக்கப்பட்ட விதைகளை
1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் பூஞ்சாண கொல்லி கலந்து காற்றுப்புகாத வண்ணம் சேமிக்கலாம் . இந்த வகையில் விதைகளை சேமிப்பதன் மூலம் விதைகளின் வீரியத்தன்மைய ( Viability ) 1 வருடம் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் . மேலும் வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸில் சேமித்தால் நீண்ட நாள் வதை விதைகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க முடியும் .
நாற்று உற்பத்திக்கு விதைகளை தயார் செய்தல்:
சந்தன மர விதைகளை 50-60 நாட்களுக்கு பிறகு முளைக்க செய்வதன் மூலம் அதிக நாற்றுகளை பெறலாம் . விதை முளைக்க 4-12 வாரம் எடுத்துக் கொள்ளும்.
நாற்று உற்பத்தி முறைகள் :

 

அ ) பாத்தி முறை :
2 : 1 என்ற விகிதாச்சாரத்தில் மணல் மற்றும் மண் இவற்றை கொண்டு பாத்திகள் அமைத்து அதில் விதைகளை ஊன்றி நாற்று உற்பத்தி செய்யலாம் .
ஆ ) பாலித்தீன் பை முறையில் நாற்று உற்பத்தி
இம்முறையில் பயன்படுத்தப்படுகின்ற பாலித்தீன் பைகளின் அளவுகளுக்கு ஏற்ப நாற்றுகளின் தரம் அமையும் . உயரம் குறைவான பைகளை பயன்படுத்தும் போது தண்டு வளர்ச்சி மட்டும் சிறப்பாக இருக்கும் . ஆனால் வேர் வளர்ச்சி சிறப்பாக இருக்காது . மேலும் சந்தனத்திற்கு துணை செடி அவசியம் என்பதால் அதன் வளர்ச்சியும் கவனத்தில் கொண்டு பாலித்தீன் பைகளை பயன்படுத்தி நாற்று உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் . நாற்று உற்பத்திக்கு பைகளின் தன்மை எந்த அளவு முக்கியமோ அதே போல் நாற்று உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மண் , மணல் , உரம் இவைகளையும் சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே தரமான நாற்றுகளை பெற முடியும் .
விதையில்லா முறையில் நாற்று உற்பத்தி :

 

அ ) மென்தண்டு முறை:
இம்முறையில் 25 ஆண்டுகளுக்கு மேலான நல்ல
வளர்ச்சியுடைய மரத்தில் இருக்கும் பக்கக் கிளைகளில் 2 செ.மீ. தடிமனுடைய தண்டுகளை தேர்வு செய்து அத்தண்டில் 1 செ.மீ. அளவு மேல் பட்டையை உறித்து விட்டு செராடிக்ஸ் B பவுடர் போட்டு தென்னை நார் கொண்டு மூட வேண்டும் . இவ்வாறு மூடிய இடத்தில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம் . 30-35 நாட்களில் அந்த இடத்திலிருந்து காலஸ் மற்றும் வேர்கள் தோன்றி வளர ஆரம்பிக்கும் . வேர்கள் 8 செ.மீ. நீளம் வளர்ந்த பின் அந்த பகுதியை வெட்டி தனியாக வளர்க்கலாம் .
ஆ ) வேர் உறிஞ்சி மூலம் நாற்று உற்பத்தி ( Rootsuckers ) :
நன்கு உதிர்ந்த மரத்தின் அடிப்பகுதியில் 1.5-2 மீட்டர் தூரத்தில் 30 செ.மீ. என்ற அளவில் நீள , அகல , ஆழமுள்ள குழி எடுக்க வேண்டும் . இக்குழி பகுதியில் இருக்கும் இளம் வேர்களை நறுக்கிட வேண்டும் . இப்படி நறுக்கிய வேர் நுனியானது 40 நாட்களுக்குள்ளாக வளர தொடங்கும் . இவ்வாறு வளர்ந்த வேர் பகுதிகளை 5-10 செ.மீ. அளவுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு IBA அல்லது NAA 1000 ppm வளர்ச்சி ஊக்கியில் நனைத்து நடவு செய்தால் 23 வாரத்தில் இவ்வேர் பகுதி நன்கு வளரத் தொடங்கிவிடும் .
இ ) பிளவு ஓட்டு முறை ( Cleft grafting )
இம்முறையில் தாய் செடியாக பயன்படுத்தப்படும் மரம் 1 வயதுக்கு குறையாமலும் பென்சிலை விட சற்று தடிமனாகவும் , ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் . இம்மாதிரியான மரத்தை தேர்வு செய்து நமக்கு எந்த மாதிரியான சந்தனமரம் தேவையோ அதிலிருந்து தாய்செடி அளவிற்கே தேர்வு செய்து ஒட்டு கட்டி புதிய சந்தனமரம் உருவாக்கலாம் . இம்முறையில் உருவாக்கப்படும் நாற்றுகள் 60 சதம் நல்ல பலனை தரும் . இம்முறை மேற்கொள்ள குளிர்காலமே ( டிசம்பர் – ஜனவரி ) சிறந்தது .
ஈ ) வேர் வழி ஒட்டு முறை ( Root cutting )
விதையில்லா இனப்பெருக்கம் செய்வதில் வேர்வழி மூலம் நாற்று உற்பத்தி செய்வது பிரபலமடைந்து வருகிறது . இம்முறையில் நாற்று உற்பத்தி செய்ய நன்கு முற்றிய மரத்தில் இருக்கும் பக்க வேர்களை 5 செ.மீ. ஆளவில் வெட்டி எடுத்து செராடிக்ஸ் மருந்தில் நனைத்து எடுத்து நாற்றங்காலில் கிடை மட்டமாக நட்டு , தினமும் தண்ணீர் தெளித்து வந்தால் 30-40 நாட்களில் வேர்த் துண்டுகளில் இருந்து வேர் மற்றும் குருத்துக்கள் தோன்றி வளரும் . நாற்றுக்களை துணைச் செடியுடன் சேர்த்து நடவு செய்யலாம் . இம்முறையில் 60 சத நாற்றுகள் தேர்ச்சி இருக்கும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.