Month: September 2019

பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?

வணக்கங்க 🙏
பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள், அதை பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ? 🤔

கொஞ்சம் வித்தியாசமான பதிவு.
எனக்கு தெரிந்ததை, படித்து புரிந்ததை இங்கே கொடுக்கிறேன்.

உங்களுக்கு ஒரு அதிசயமான உண்மையை முன் வைக்கிறேன்.

ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம். 🙄

சரிங்க, விஷயத்துக்கு வருவோம்.
பயிருக்கு தேவையான சத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.

1. அதிக அளவில் தேவையான சத்துக்கள். (பேரூட்டச்சத்துகள்)

2. குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்கள். ( நுண்ணூட்டச்சத்துகள்)

N P K என சொல்லப்படும் பேரூட்டச்சத்துகள் மண், நீர், காற்று, சூரிய ஒளி மூலம் பயிருக்கு கிடைக்கிறது.

ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் மண்ணில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

பயிரின் விளைச்சலில், காய்கள், பழங்கள், தானியங்கள், எல்லாம் நமது தேவைக்கு போக மீதி சந்தைக்கு சென்று விடும் தானே?

அதில் உள்ள சத்துக்கள் மண்ணைவிட்டு வெளியேறிவிடுகிறது. பேரூட்டச்சத்துகள் பெரும்பாலும் மற்ற காரணிகள் வழியாக வந்து விடுகிறது (காற்று, நீர், சூரிய ஒளி)
ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் திரும்புவதில்லை.

மண்ணில் சத்துக்கள் நிறைய இருந்தாலும் நெடுங்காலமாக பயிர் செய்யப்படுவதால் இந்த சத்துக்கள் குறைந்து கொண்டே போய் பற்றாக்குறை வரும் வாய்ப்பு உள்ளது.

இதை எப்படி தடுப்பது? 🤔

JADAM method of agriculture பற்றி சிறிது படித்தேன்.
இந்த நிலை பற்றி தெளிவாக பேசுகிறது.

நிறைய செய்திகளை அது கொடுத்து கொண்டே இருந்தது.
அது குறித்தும் பேசுவோம்.
இந்த நுண்ணூட்டச்சத்துகளை எப்படி நிலைநிறுத்துவது பற்றியும் சொல்கிறது.

ஒரு சின்ன விளக்கம் கொடுத்து வழி காட்டுகிறது.
உலகத்திலேயே எல்லா சத்துக்களையும் சமச்சீராக கொண்டுள்ளது தாய் பால் மட்டுமே.
அதே போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளடிக்கியிருப்பது கடல் நீர் மட்டுமே.

அதனால் குறைந்த அளவில் நீர் பாசனத்தில் கலந்து விட சொல்கிறது.

அதாவது நுண்ணுயிர்கள் கலவை தயாரிக்கும் போது 100 ml கடல் நீர் அல்லது 100 கிராம் உப்பு சேர்க்கலாம் என வழி சொல்கிறது.
200 லிட்டர் கலவையில் 100 கிராம் உப்பு சேர்க்கலாம்.
இது காலப்போக்கில் தீர்ந்த சத்துக்களை நிறைவு செய்யக் கூடும் என நம்பிக்கை கொடுக்கிறது.

நாம் நுண்ணுயிர்கள் கலவைகளை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் தயாரிக்கிறோம் தானே?
அப்படி பட்ட நிலையில் வளரும் நுண்ணுயிர்கள் தோட்டத்தில் எப்படி வளரும்?
அதனால் தோட்டத்து தட்பவெட்ப நிலையில் தயாரியுங்கள். அப்படி வளரும் நுண்ணுயிர்கள் மட்டுமே மண்ணில் நிலைபெறும் என சொல்கிறது.

எதுவுமே முழுமையானது அல்ல, தொடர்ந்து தேடுதல் வேண்டும்.

எனக்கு தெரிந்த வரை சொல்லிவிட்டேன், இதை மேலும் மெருகேறும் பணி உங்களுடையது.

வாழ்த்துகள்.

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?!
========================
இது இயற்கை விவசாயத்தில் மிக முக்கியமான செயல்பாடு.

அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.
என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

என் தந்தை சொல்லுவார், நிலத்தை கொஞ்சம் ஆறப்போடனும் என்று.

அந்த வயதில் எனக்கு ஏன் என்று கேட்கவும் தோன்றவில்லை.

பின்னாளில் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

மதியம் சாப்பாட்டுக்கு அம்மா முன்கூட்டியே சமைக்க தொடங்குவார்கள். அப்படிதான் இதுவும். நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை மெதுவாக சமைத்து பயிர் எடுக்கும் வகைக்கு கொண்டு வருகிறது. அதுதான் அப்பா, ‘நிலத்தை ஆறப்போடு’ என சொன்னார்

எல்லா பயிர்களும் மண்ணில் இருந்து ஒரே மாதிரி சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. சில பயிர்கள் சில சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும். சில பயிர்கள் அந்த சத்துக்களை குறைவாக எடுத்துக் கொள்ளும்.

அதிகமாக ஒரு சத்து எடுத்துக் கொள்ளும் வேளையில் மண்ணில் அந்த சத்து குறைபாடு தற்காலிகமாக இருக்கும். அந்த சத்து மீண்டும் நுண்ணுயிர்களால் உயார்ப்பிக்க சிறிது காலம் தேவை படும்.
இந்த காலத்தில் அதே பயிரை மீண்டும் பயிரிட்டால் அந்த சத்து குறைவாகவே கிடைக்கும் நிலை ஏற்படக்கூடும்.

வேறு ஒரு பயிர், அந்த சத்து குறைவாக தேவைப்படும் பயிர், செய்யும்போது அந்த சத்து குறைவாகவே மண்ணில் இருந்து எடுக்கப் படும். அந்த காலத்தில் அந்த சத்து மீண்டும் மண்ணில் நிலைபெறும்.
இதுதான் அந்த சூட்சுமம்.

இதனால் மண்ணில் சத்துக்கள் சமநிலை உறுதி படுகிறது.

அடுத்து பயிர்கள் தனக்கு வேண்டிய சத்துக்களை மண்ணில் இருந்து தான் எடுத்துக் கொள்ளுகிறதா, அவை எப்படி பயிர்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து தொடர் பதிவில் பார்க்கலாம்.

சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி

மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு

☫ *இன்று ஒரு தகவல்* ☫

*மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு*

தமிழகத்தில் அதிகளவில் மானாவாரி நிலங்கள் தான் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி மழையை பற்றி பேசுவதும், கவலைப்படுவதும் ஆண்டு தோறும் நிகழ்வது வழக்கமான ஒன்று.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல் சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே.

மானாவாரி தீவனம்
இறவை பாசனம் செய்யும் விவசாயிகளின் வரவு செலவினை ஒப்பிட்டு எதுவும் செய்யாதிருந்து பெரும் நஷ்டத்தை அடைவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பல ஏக்கர் தரிசாக விடும் விவசாயிகள் மாற்று வழி யோசித்து, தங்களது பகுதிக்கேற்ற மரங்களை தேர்வு செய்யலாம். கால்நடைகள் வளர்க்க உறுதுணையான பல தீவன மரங்கள் வறட்சி தாங்கி வளரும் என்பது அறியாமல் உள்ளனர். நமது பகுதியில் வளர்ந்த மரங்களை கூர்ந்து கவனித்து கூட நல்ல முடிவு எடுக்கலாம்.
குறிப்பாக மரத் தீவனத் தழைக்காக கருவேல், வெள்வேல், வாகை, மந்தாரை, கல்யாண முருங்கை, சூபாபுல், வாத நாராயணன், பெருமரம், வேம்பு, பூவரசு, பலா, இலந்தை, கிளைரிசிடியா, அரசு, ஆல், ஆச்சா, மலைவேம்பு இன்னும் பலவகை வரம் தரும் மரங்கள் உள்ளன. மரத்தழைகளில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, ஊட்டச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றின் செரிப்புத்திறன் அதிகமாக உள்ளது.

முளைப்பாரி தீவனம்
மானாவாரி களர், உவர் நிலங்களில் வில்வ மரம் நன்கு வளரும். அவற்றை ஆடுகள் விரும்பி உண்ணும்.
இவை தவிர வாதாங் கொட்டை மரம், இலுப்பை மரம், கொடுக்காப்புளி, இலவம் மரம், செடி முருங்கை, மர முருங்கை, அகத்தி, அத்திமரம், மகிழம்பூ மரம், புளியமரம் ஆகியவை மூலம் நாம் நிறைய தழைகள் பெறலாம்.
எனவே மானாவாரி பகுதியில் உள்ள விவசாயிகள் இவற்றை தனது தோட்டத்தில் நட்டு பசும்புல் கிடைக்காததால் மாடு வளர்க்கவில்லை என்று கூறாமல் குறைந்த நீர் கொண்டு டிரே முறையில் தீவனச் சோளம், முளைப்பாரி, ராகி முளைப்பாரி மற்றும் பார்லி, கோதுமை, முறைத்த இளஞ்செடிகள் உற்பத்தியும் செய்து கால்நடை வளர்க்கலாம். வாய்ப்புள்ளவர்கள் வளர்த்து விற்பனையும் செய்யலாம். பலவகை மரங்களின் பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள், உலர்த்திய தழைகள், ஊறுகாய்வற்றல் எனும் சைலோ உத்திகள் மூலமும் வருமானம் ஈட்டலாம். மரக்கன்றுகள் மானிய விலையில் பெற்றிட, மானாவாரியில் அவற்றை பராமரித்திட, விபரங்களுக்கு ர.வினோத்குமார் 98422 0 8001 ,உதவி வேளாண்மை அலுவலர் அவிநாசி; நன்றி..

புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்

தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ…

பருத்தி: வெள்ளைத் தங்கம்

புரட்டாசிப் பட்டத்திற்கு எல்.ஆர்.ஏ. 5166, கே 11, கே.சி. 2, எஸ்.பி.வி.ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த 120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை காலை மற்றும் மாலை நேரங்களில் பஞ்சை கைகளால் அறுவடை செய்ய வேண்டும். ரகங்களைப் பொருத்து மகசூல் அளவு மாறுபடும்.

துவரை: ஏற்றம் தரும் நாற்று நடவு

துவரை, மிதமான வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் வளரக்கூடியவை. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் குறுமண் நிலம் துவரை சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசிப் பட்டத்தில் கோ 6, வம்பன் 1, வம்பன் 2, கோ(சிபி) 7 போன்ற துவரை ரகங்களைப் பயிரிடலாம். துவரை சாகுபடியில் விதைப்பு முறையை விட, நாற்று நடவு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். 150 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 80 சதவிகிதக் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் காய்களை தனியாகவோ அல்லது முழு செடியாகவோ அறுவடை செய்து வெயிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.

அவரை: அள்ளலாம் மகசூல்

அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, செடியில் காய்ப்பது (குத்து அவரை), மற்றொன்று கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). பந்தல் ரகத்தை பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடியும், குத்து ரகத்தைப் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 1.5 அடியும் இடைவெளி விட வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது, கொடி, பந்தலை அடைந்தவுடன் நுனிக்குருத்தைக் கிள்ளிவிட வேண்டும். அவரை வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. பந்தல் அவரையில் ஹெக்டேருக்கு 240 நாட்களில் 8-10 டன் மற்றும் குத்து அவரையில் 120 நாட்களில் 6-8 டன் மகசூல் கிடைக்கும்.

தட்டைப்பயறு: வெப்பத்திலும் மகசூல் கொட்டும்

வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தட்டைப்பயிரை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மற்றும் நடுநிலை கார அமிலநிலை கொண்ட மண் ஏற்றது. தனிப்பயிராக இருப்பின் ஹெக்டேருக்கு அனைத்து ரகங்களுக்கும் 20 கிலோ விதைகளும், கலப்புப் பயிராக இருப்பின் 10 கிலோ விதைகளும் தேவைப்படும். 120 நாட்களில் அறுவடை செய்து விடலாம். காய்கள் 80 சதவிகிதம் முற்றியபின், செடிகளை அறுத்துக் கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து, மணிகளைப் பிரித்தெடுக்க வேண்டும். ஹெக்டேருக்கு மானாவாரியில் 700-900 கிலோ மற்றும் இறவையில் 1,200-1,500 கிலோ மகசூல் கிடைக்கும்.

பச்சைப்பயறு: பலே வருமானம்

கோ 4, கோ 6, கேஎம் 2, விபிஎன் 1, பிஒய் 1 போன்ற பச்சைப்பயறு ரகங்கள் புரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்றவை. ஹெக்டேருக்கு தனிப்பயிருக்கு 20 கிலோவும், கலப்புப்பயிருக்கு 10 கிலோ விதைகளும் தேவைப்படும். மூன்றில் 2 பங்கு காய்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் செடியை அறுவடை செய்து காயவைத்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். பச்சைப்பயறு தானியங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. பருப்பு தவிர எஞ்சிய பாகங்கள் பசுந்தாள் உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன. ஹெக்டேருக்கு மானாவாரியில் 600-750 கிலோவும், இறவையில் 1,000-1,200 கிலோவும் மகசூல் கிடைக்கும்.

தினை: மானாவாரி மன்னன்

தமிழகத்தில் பெரும்பாலும் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்படும் தினை, கடினமான வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. செம்மண், இரு மண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்தது. ஒரு ஹெக்டேருக்கு வரிசை விதைப்பிற்கு 10 கிலோவும், தூவுவதற்கு 12.5 கிலோ விதைகளும் தேவைப்படும். 90-ஆம் நாளில் கதிர் முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும். உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி குறிப்புகளைக் கடைப்பிடிப்பதாலும் தோராயமாக ஹெக்டேருக்கு ஒன்றரை டன் தானியமும், 5 டன் தட்டையும் பெறலாம். தினை தானியத்தை சாக்குப் பைகளில் வைத்து நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியும். தினையில் உள்ள சத்துக்கள் நெல், அரிசி, கோதுமையில் உள்ளதைவிட அதிகமானது.

குதிரைவாலி: காலம் கம்மி, லாபம் ஜாஸ்தி

குதிரைவாலியை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு மழை பெய்த பின், ஒரு மாதம் வரை மழை இல்லாவிட்டாலும் தாக்குப் பிடிக்கும். பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் குதிரைவாலியைத் தாக்குவது இல்லை. கதிர் நன்கு காய்த்து முற்றிய பின், அறுவடை செய்து, நன்கு காய வைத்து சுத்தம் செய்து, காற்று புகாதபடி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குதிரைவாலி சாகுபடியில் தானியங்களைத் தவிர, அவற்றின் தாள்களும் கால்நடைத் தீவனங்களுக்காக விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் கிடைக்கும். இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது.

கோதுமை, கம்பு, ராகி, மக்காச்சோளம், உளுந்து, சோயாமொச்சை போன்ற பயிர்களையும் புரட்டாசிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு விவசாயிகள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்

தண்ணீரின் முக்கியம் அறிய

தண்ணீரின் முக்கியம் அறிய

மழை பொழியும் போது –

புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும்.

உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும்.

நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும்.

எவ்வளவு மழைநீர் உங்கள் நிலத்தைக் கடந்து செல்கிறதெனத் தெரியும். ஏன் மழைநீரை சேமிக்க வேண்டும் எனப்புரியும்.

உயரமான வரப்பு ஏன் போடவேண்டும், ஏன் மழைநீரை வரப்புகளுக்ள் சேமிக்க வேண்டும் எனப் புரியும்.

பண்ணைக்குட்டை போடுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். அதிக மழை உங்கள் நிலத்தில் கடந்து செல்லும் வழியில் அதனை வாயாக வைத்து எவ்வாறு குட்டை அமைக்கலாம் என முடிவெடுக்க முடியும்.

வயலில் எந்த இடத்தில் கரைகள் அமைத்து சமப்படுத்தலாம் அல்லது எங்கு மண்ணைக் கொட்டி உயரமாக்கலாம் அல்லது குழாய் மாதிரி அமைப்பு வைத்து நீரைக் கடத்தலாம் என முடிவெடுக்கலாம்.

உழாத நிலங்களில் உழவு குறித்து முடிவெடுக்கலாம்.

மரங்கள் வைப்பதெனில் மேட்டு நிலத்தில் நீர் குறைந்த நிலத்திற்கான மரங்கள், நிறைய நீர் தேங்குவதோ அலது அரிப்பதற்கான நிலத்திற்கேற்ற மரங்கள் அல்லது தடுப்பான்கள் குறித்து முடிவெடுக்கலாம்.

எனவே
மழையின் போது ஒரு முறையேனும் நிலத்தினை சுற்றிப் பாருங்கள், தண்ணீரின் முக்கியம் அறிய.

சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு

*பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு*

*3 மாத பராமரிப்பு:*

1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம்புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.

*மாதவாரியாக பராமரிப்பு:*

1.மாதத்தின் முதல் நாள் மரத்திற்கு 10 கிராம் சூடோமோனாஸ் /விரிடி தரைவழி பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம்.
2. *3ம் நாள்* மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா / 200 கிராம் அசோஸ்பைரில்லம் தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.
3. *13ம் நாள்* மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா / 100 கிராம் பாஸ்போபாக்டீரீயா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.
4. *23ம் நாள்* மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.

மீண்டும் அடுத்த மாதம் இதனைத் தொடரலாம்.

மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.

*பாசனம்*
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட் களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.

*மூடாக்கு* முக்கியம்.குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்.

மேலும் சந்தேகங்களுக்கு
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
*9944450552*

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.

Continue reading