borewell recharge போர்வெல் ரீசார்ஜ் 

borewell recharge போர்வெல் ரீசார்ஜ்
Agriwiki.in- Learn Share Collaborate

borewell recharge போர்வெல் ரீசார்ஜ் 

கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து விட்டது.

பல தோட்டங்களில், அரை மணி நேரம்  அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத்தூர் வாரலாமா? என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக… கோடை காலத்தில் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்

கோடை காலங்களில் கிணறுகள், போர் வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்… இன்னும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ… அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்றார் பிரிட்டோராஜ்.

போர்வெல் போடாதீர்கள்!

பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது.

80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால் தண்ணீரைத் தேடி அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும்.

அதிக ஆழத்திற்கு ஊடுருவி. 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்.. போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல் மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள். ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்திற்கு இறக்க மாட்டார்கள்.

ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து ‘நீர் மூழ்கி மோட்டார்களை குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இறக்க முடியாமலோ … அல்லது எடுக்க முடியாமலோ போய் விடும்.

இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!

புது போர்வெல் அமைத்து, தண்ணீருக்குப் பதிலாக வெறும் புகைதான் வந்தது என வேதனைப்படும் விவசாயிகள் அனேகம் பேர்.

ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான்.

அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம்.

கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, நீர்ச் செறிவூட்டல் செய்தால், தண்ணீர் ஊறி விடும்.

நீர்ச் செறிவூட்டல்

கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில் … 6 அடி நீளம், 6 அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்தில் இருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்திற்கு கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடைக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்… மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு கிணறுகளில் சேகரமாகும்.

இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும் போது, ஏற்கனவே ஊற்றுக்கண்களை அடைத்திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து… இனி தண்ணீரே கிடைக்காது, என நீங்கள் நினைத்த… இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும்.

மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி… தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ்வான பகுதிகளில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க்கால்களை எடுக்க வேண்டும். குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதியில் அணை போட வேண்டும். இப்படிச் செய்தால், மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், குழிகளில் சேகரமாகி, நிலங்களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப்பதம்  குறையாமல் இருக்கும்.

பிரிட்டோராஜ்.