அங்கக வேளாண்மை சான்று பெற

அங்கக வேளாண்மை. சான்று பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
Agriwiki.in- Learn Share Collaborate

அங்கக வேளாண்மை சான்று பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

(Organic Farming Certificate)

செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து விட்டு இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சாகுபடி முறை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைக்கிறது.

இந்த சூழலில் உண்மையாகவே இயற்கை சாகுபடி முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, அந்த விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இயற்கை சாகுபடி முறையை அங்கக வேளாண்மை (Organic Farming) என அழைக்கிறார்கள்.

மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின்படி நம் மாநிலத்திலும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை செயல்பட்டு வருகிறது.

அங்கக வேளாண்மை சான்று பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை முதன்மைப் பேராசிரியர் ஏ.சோமசுந்தரம் கூறியதாவது:

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தனி நபராகவோ, குழுவாகவோ பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப் பொருட்கள் சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பதிவு செய்யலாம்.

கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

# இயற்கை வழி வேளாண்மை முறையில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும்

# ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் ரசாயன நேர்த்தி செய்த விதைகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது.

# அங்ககச் சான்று பெற வேண்டுமானால் ஆண்டுப் பயிர் விதைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும், பல்லாண்டு பயிர்களுக்கு முதல் அறுவடை தொடங்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் தேசிய அங்கக உற்பத்திக்காக கூறப்பட்டுள்ள தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

# ஏற்கனவே அங்கக முறையில் தொடர்ந்து சாகுபடி செய்பவர்களாக இருந்தாலும் குறைந்தது 12 மாதங்கள் காத்திருந்து, அதன் பிறகுதான் சான்று பெற இயலும்.

# அங்கக வேளாண் சாகுபடியின் போது மண்வளம் பாதுகாக்க பயறுவகைப் பயிர்களை வருடாந்திர பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

# இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை வெளி நிறுவனங்களிடமிருந்து வாங்கும்போது, அவை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேறு மாசுபடுத்தும் பொருட்கள் இல்லாதது என்பதற்கான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து எழுத்துபூர்வமாக வாங்கிட வேண்டும்.

# பண்ணைக்கு உள்ளே வரும் இடுபொருட்கள் மற்றும் பண்ணையில் இருந்து வெளியில் செல்லும் பொருட்கள் பற்றியும், பண்ணையில் நடைபெறும் தினசரி பணிகள், ஆண்டு பயிர்த் திட்டம், பரிசோதனைகள் பற்றிய விவரங்களையும் பதிவு செய்து ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

# மண் அரிமானத்தைத் தடுக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர் வாய்க்கால்களின் அருகிலோ, அதிக உரம், பூச்சிமருந்து பயன்படுத்தும் பண்ணைகளின் அருகிலோ அங்ககச் சான்று வயல்கள் இருக்கக் கூடாது.

அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்க தேவையானவை:

விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொதுவிவரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் விவரம், ஆண்டுப் பயிர் திட்டம், நில ஆவணம் (சிட்டா நகல்), நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) போன்ற விவரங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இதர தகவல்களுக்கு விதைச் சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர், 1424 ஏ, தாடகம் சாலை, கோயம்புத்தூர் – 641 013 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 0422 2435080

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.