இயற்கை முறை பயிர் சாகுபடி

இயற்கை முறை பயிர் சாகுபடி natural-farming-agriwiki
Agriwiki.in- Learn Share Collaborate
நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி

பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களை சாகுபடி செய்யலாம்.

இதுகுறித்து வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ள அரசு வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் த.தினகரன், மு.பாண்டியன் ஆகியோர் கூறியதாவது:

மனிதர்களைப் போல பயிர்களையும் நோய்கள், பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் 10 முதல் 15 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக நெற்பயிரில் தோன்றும் பழுப்புப் புள்ளி நோயினால் 1943-ஆம் ஆண்டில் வங்க தேசத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.

அதேபோல, 1918-இல் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நெல் குலை நோய் பல்வேறு கால கட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. இத்தகைய இழப்பைத் தவிர்க்க பல்வேறு ரசாயன மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன.

ரசாயன மருந்துகளைக் கொண்டு பயிர்களை நோய்களை கட்டுப்படுத்தும்போது மண், காற்று, நீர் மாசடைவதுடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் மனிதர்களுக்கும் கேடு உண்டாகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், தீங்கு விளைவிக்காத, லாபகரமான மாற்றுப் பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல் அவசியம்.

அந்த வகையில், இயற்கை வழி பயிர் நோய் நிர்வாக முறைகளில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் ரகங்களைச் சாகுபடி செய்தல், சாகுபடி முறையில் சில மாற்றங்களைச் செய்தல், நன்மை தரும் நுண்ணுயிர்களைப் பயன்படுத்துதல், தாவரப் பொருள்களைப் பயன்படுத்துதல் முக்கியமானதாகும்.

முதலாவதாக,

நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் ரகங்களைத் தேர்வு செய்து விதைத்தல்,

நோயின் தாக்குதல் அதிகம் உள்ள நிலங்களில் எதிர்ப்புத் திறனுடைய ரகங்களைச் சாகுபடி செய்வது நல்லது.

எடுத்துக்காட்டாக,

நெல் குலை நோய்க்கு ஆடுதுறை 36, ஆடுதுறை 39, ஆடுதுறை 40, கோ 43, கோ 44, கோ 45, ஏஎஸ்டி 18, ஐஆர் 20, ஐஆர் 36, ஐஆர் 62, ஐஆர் 64 ஆகிய ரகங்களும்,

உளுந்து மஞ்சள் தேமல் நோய்க்கு வம்பன் 4, வம்பன் 6 ரகங்களும்,

நிலக்கடலை டிக்கா இலைப்புள்ளி நோய்க்கு ஏஎல்ஆர் 1, ஏஎல்ஆர் 3, விஆர்ஐ 5 ஆகிய ரகங்களும்,

நிலக்கடலை துரு நோய்க்கு ஏஎல்ஆர் 1, ஏஎல்ஆர் 2, ஏஎல்ஆர் 3, விஆர்ஐ 4, விஆர்ஐ 5 ஆகிய ரகங்களும்,

கரும்பு செவ்வழுகல் நோய்க்கு கோ 62198, கோ 7704, கோக 8001, கோக 8201 ஆகிய ரகங்களும்,

வாழை வாடல் நோய்க்கு பூவன் ரகம்,

வெண்டை மஞ்சள் நரம்புத் தேமல் நோய்க்கு அர்க்கா அனாமிகா, பர்பானி கிராந்தி ஆகிய ரகங்கள் எதிர்ப்புத் திறன் கொண்டவை.

சாகுபடி முறையில் மாற்றம்:

ஆழமான கோடைஉழவு செய்யும்போது மண்ணின் ஆழத்தில் தங்கியிருக்கும் நோய்ப் பூசண வித்துகள் மண்ணின் மேற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வெப்பத்தினால் அழிக்கப்படுகின்றன. இம்முறையில் மண்வழிப் பரவும் வாடல், வேர் அழுகல், தண்டு அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

இயற்கை எரு, பசுந்தாள் உரம், கம்ப்போஸ்ட், கரும்பு ஆலைக்கழிவு, மக்கிய தென்னை நார்க்கழிவு, வேப்பம் புண்ணாக்கு முதலியவற்றை பரிந்துரைக்கப்படும் அளவுக்கு மண்ணில் இடும்போது மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகுவதுடன் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட பருவத்தில் விதைத்தாலோ அல்லது நடவு செய்தாலோ ஒரு சில நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

எனவே இப்பருவத்தைத் தவிர்த்து மற்ற பருவங்களில் சாகுபடி செய்யலாம்.

உதாரணமாக குறுவைப் பட்ட நெல்லில் குலை நோயின் தாக்குதலும், கோடைப் பருவத்தில் இலைப்புள்ளி நோய் தாக்கம், கரும்பில் செவ்வழுகல் நோய் தாக்கம் குறைவாக காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உளுந்து, பாசிப் பயறு விதைத்துள்ள நிலத்தைச் சுற்றி தடை பயிராகச் சோளம், மக்காச்சோளம், கம்பு விதைத்தால் மஞ்சள் தேமல் நோய் பரப்பும் வெள்ளை ஈக்கள் தடுக்கப்பட்டு நோயின் தீவிரம் குறைகிறது.

எள் பயிரில் துவரை ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது பூவிலை நோயின் தீவிரம் கட்டுப்படுத்தப்படுகிறது.

பயிரின் இடைவெளி அதிகமாக இருக்கும் நிலங்களில் மட்டைக் காய்ச்சல் என்றழைக்கப்படும் வாழை இலைப் புள்ளி நோயின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.

களைக் கட்டுப்பாடு

நோய் நிர்வாகத்தில் களைக் கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நோய்க் காரணி நுண்ணுயிர்கள் மற்றும் நோய் பரப்பும் பூச்சிகள் களைச் செடிகளில் தங்கி வாழ்கின்றன.

களைச்செடிகளை அழித்து நிலத்தைச் சுத்தமாக பராமரிக்கும் போது பயிர்களில் தோன்றும் இலைப்புள்ளி, இலைக்கருகல், நச்சுயிரி நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நோயுள்ள செடிகளை முக்கியமாக வாடல், வேரழுகல், தண்டழுகல், நச்சுயிர் தாக்கிய செடிகளை அவ்வப்போது பிடுங்கி அழிப்பதன் மூலமும் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதோடு, நோய் பரவுவதையும் தடுக்கலாம்.

பூச்சிகளைக் கவரும் பொறிகளும் நோய் நிர்வாகத்துக்கு உதவுகின்றன. ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிரை சுழற்சி முறையில் சாகுபடி செய்வது நல்லது.

எடுத்துக்காட்டாக வாழை வாடல் நோயை கட்டுப்படுத்த நெல் அல்லது கரும்பை பயிர்சுழற்சி முறையில் பயிரிட்டு நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

கரும்பு செவ்வழுகல் நோயைக் கட்டுப்படுத்த நெல் அல்லது பசுந்தாள் உரம் சாகுபடி செய்யலாம்.

பயறு வகைப் பயிர்களில் தோன்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த சிறு தானியப் பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம்.

தாவரப் பொருள்களைப் பயன்படுத்துதல்:

இயற்கை வழி நோய் நிர்வாகத்தில் வகை தாவரப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகும். இம் முறையில் பெரும்பாலும் வேம்பு சார்ந்த பொருள்களே பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவீதக் கரைசலைப் பயன்படுத்தி நெல் இலையுறைக் கருகல், நச்சுயிர் நோய், உளுந்து, பாசிப்பயறில் தோன்றும் சாம்பல் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஏக்கருக்கு 60 முதல் 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் நெல் இலையுறைக் கருகல், உளுந்து, பாசிப்பயறு, எள், பருத்தியில் வேர் அழுகல் நோய், வெற்றிலை வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

தென்னையில் வாடல் நோயின் தீவிரத்தைக் குறைக்க மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

இதைத் தவிர கருவேல இலைப் பொடிச் சாறு 5 சதவிகிதம், நெய்வேலி காட்டாமணக்கு இலைச்சாறு 5 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் நெல் கதிர் உறை அழுகல் நோயின் தீவிரத்தையும்,

தென்னை அல்லது சோள இலைப் பொடிச் சாறு 10 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் நிலக்கடலை மொட்டுக் கருகல் அல்லது வளையத் தேமல் நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.

இதுபோன்ற இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் நோய்களை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதுடன் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களைக் பெறுவதோடு அதிக லாபம் ஈட்ட முடியும் என்றனர்.