இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம்

Agriwiki.in- Learn Share Collaborate

இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம்

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம்

மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.

*மண்புழு உரத்தின் பயன்கள்*

மண்புழு உரம் இடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகிறது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது. மேலும் மண் அரிப்பு, கோடைக் காலத்தில் மண்ணின் வெப்பநிலை ஆகியவற்றைக் குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

வாழை, தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப் பயிர்கள் கோடையில் முழுமையாகப் பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.

மேலும் மழைக் காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக மண்புழு உரம் பயன்படுகிறது. இதனால் பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்- டை- ஆக்சைடு வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது.
மண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்தாக மாற்றுகிறது. மண்ணிற்கு பேரூட்டச் சத்துக்கள் அளிப்பதுடன் தாவரங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும் சீரான அளவில் வழங்குகிறது.

மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கன உலோகங்களை தாற்காலிகமாக ஈர்த்து வைத்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீர், பயிர்களுக்கான ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் அளித்து மண்வள மேம்பாட்டிற்கு வித்திடுகிறது.
மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதால் பயிர் கோடையிலும், நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது.

மண்புழு உரத்தில், அதிகப்படியாக அங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது. இது மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிருக்கு தேவையான சத்துப் பொருள்களை தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது.
குறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன. இதனால் பூக்கள், காய்கனிகள், தானியங்கள், நல்ல விலைக்கு விற்பனை செய்ய வழி வகுக்கிறது, ரசாயன உரங்களைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணின் இயற்கைத் தன்மை கெட்டு விடுகிறது.
ஆனால் மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.
பூச்சி நோய் தாக்குதலை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. நச்சுத்தன்மை இல்லாத உணவை உற்பத்தி செய்ய மிகவும் உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.
மண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச் செய்கிறது. ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது. மண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இதனால் பயிருக்குத் தேவையான உரங்களை மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது. மண்புழு உரம் இடுவதால் மக்காச்சோளம், கம்பு, சோளம், பருத்தி, சிறுதானியப் பயிர்களின் மகசூல் அதிகரித்து வறட்சியைத் தாங்கி வளர உதவுகிறது.
பயறு நடவு செய்த பின்னர், கடைசி உழவில் நெல் ஏக்கருக்கு ஒரு டன்னும், கரும்புக்கு ஒன்றரை டன்னும், பருத்திக்கு ஒரு டன்னும், மிளகாய்க்கு ஒரு டன்னும், சூரியகாந்திக்கு ஒன்றரை டன்னும், மக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் பயன்படுத்த வேண்டும்.
விவசாயிகள் மண்பரிசோதனை செய்து பயிருக்கு ஏற்ற உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட்டு, செலவைக் குறைத்து மகசூல் எடுக்ககலாம்.
மண்புழு உரத்தில் உள்ள சத்துகள்

மண்புழு உரத்தில் உள்ள சத்துகளானது மண்புழு உரம் தயாரிக்க நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து அமையும். பல்வேறு வகையான கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தும் போது மண்புழு உரத்தில் பல்வேறு வகையான சத்துகளும் அடங்கி இருக்கும்.

*சாதாரணமாக மண்புழு உரத்தில் உள்ள சத்துகளாவன:*

1) கார்பன் – 9.5 – 17.98%

2) நைட்ரஜன் – 0.5 – 1.50%

3) பாஸ்பரஸ் – 0.1 – 0.30%

4) பொட்டாசியம் – 0.15 – 0.56%

5) சோடியம் – 0.06 – 0.30%

6) கால்சியம் மற்றும் மெக்னீசியம் – 22.67 – 47.60meq/100g

7) தாமிரம் – 2 – 9.50 மி.கி./கி.கி.

8) இரும்பு – 2 – 9.30 மி.கி./கி.கி.

9) துத்தநாகம் – 5.70 – 11.50 மி.கி./கி.கி

10) கந்தகம் – 128 – 548 மி.கி./கி.கி

சேகரிக்கப்பட்ட மண்புழு உரத்தைக் குளிர்ச்சியான இருட்டறையில் வைக்க வேண்டும். அதில் 40 விழுக்காடு ஈரப்பதம் இருக்க வேண்டும். சூரிய ஒளி படாதவாறு பாதுகாக்க வேண்டும். சூரிய ஒளி படும்போது ஈரப்பதம் மற்றும் சத்துகள் குறைந்துவிடும். எனவே மண்புழு உரத்தை ஒரு அறையில் திறந்த நிலையில் குவித்து வைக்க வேண்டும். விற்பனை செய்யும் போது மட்டும் பைகளில் அடைத்து விற்பனை செய்யலாம். மண்புழு உரத்தைத் திறந்த வெளியில் சேமித்து வைக்கும் போது அதன் மீது அடிக்கடி தண்ணீரைத் தெளிப்பதன் மூலம் ஈரப்பதத்தை நிலை நிறுத்தி நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை வளரச் செய்யலாம். 40 விழுக்காடு ஈரப்பதம் கொண்ட மண்புழு உரத்தினைச் சத்துகள் வீணாகாமல் ஒரு ஆண்டு வரை சேமித்து வைக்கலாம்.

மண்புழு உரம் பரிந்துரைகள்

நெல், கரும்பு, வாழை – 2000 கிலோ /ஏக்கர்

மிளகாய், கத்தரி, தக்காளி – 1000 கிலோ /ஏக்கர்

நிலக்கடலை, பயறுவகைகள் – 600 கிலோ /ஏக்கர்

மக்காச்சோளம், சூரியகாந்தி – 1000 கிலோ/ ஏக்கர்

தென்னைமரம், பழமரங்கள் – ஒரு மரத்துக்கு 10 கிலோ

மரங்கள் – மரம் ஒன்றுக்கு 5 கிலோ

மாடித் தோட்டம்- செடி ஒன்றுக்கு 2 கிலோ

மல்லிகை, முல்லை, ரோஜா மற்றும் அலங்கார செடிகள் – 500 கிராம் /செடி (3 மாதங்களுக்கு ஒரு முறை)

நன்றி : Krish Jagran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.