உயிர்ப்பான உயிர்வேலி 

Agriwiki.in- Learn Share Collaborate
 உயிர்ப்பான  உயிர்வேலி

வானகம் இதழில் (வெற்றிமாறன்.இரா)  எழுதிய உயிர்வேலி கட்டுரை..
நண்பர்களே.. இயற்கை வழி வேளாண்மையின் உயிர்நாடியான உயிர்வேலி அமைப்பதற்கான தக்க காலம் இது , பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை யுத்திகளை கையாள வேண்டும் என்பதுதான். இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் கூட்டுவதில் முதன்மையானது வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையான முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம்.

ஐயா நம்மாழ்வார் அவர்கள் பண்ணை வடிவமைப்பு மற்றும் உயிர்வேலி பற்றி பேசும் போது 9F என்ற வார்த்தையை உச்சரிக்கத் தவறுவதில்லை.. ஏனெனில் உயிரவேலி என்பது ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்குவார்.

9F என்பதன் விளக்கம்

மனித உணவு(food), கால்நடை உணவு(fodder), உடை(fabric), உற்பத்திக் கூடம்(factory), மரச்சாமான்கள்(furniture), வேலி(fenching), விறகு(fire wood), பசுந்தாள் எரு(fertilizer), ஈமச்சடங்கு(funeral). என இவையனைத்தும் பண்ணையிலும் பெரும்பகுதியாய் உயிர்வேலியிலிருந்தும் மனித வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளதை உணரலாம்.

ஏக்கர் ஒன்றுக்கு செயற்கையான கம்பிவேலிகள் அமைப்பது ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வகைக்கு ஏற்றாற் போல் அமைகிறது.

இது சிறு குறு விவசாயியின் கனவிலும் சாத்தியமற்றது, இவ்வளவு ஏன் பெரு விவசாயிகளுக்கும் பெரிய பொருளாதார இழப்பாக அமைகிறது.

அத்தோடு கம்பிவேலி முறையில் பராமரிப்புச் செலவுகள் உள்ளன, இவை நீடித்த பலனை தருவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் பெரும் தீர்வாக உயிர்வேலி அமைகிறது .

உயிர்வேலி என்பது ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும். அந்தந்த மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்த உயிர்வேலி அமைப்பது அவசியமானது.

உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும்.

உயிர்வேலியில் முள்வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மரவேலி, புதர்வேலி என சூழலுக்கு ஏற்றாற் போல் அமைக்கப்படுகிறது.

உயிர்வேலி அமைக்கும் முறை

உயிர்வேலி அமைக்கும் முறையானது நிலத்தின் எல்லையிலிருந்து நிலத்தின் உட்பக்கமாக எட்டடி வரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லையிலிருந்து நான்கு அடி இடைவெளி விட்டு மூன்று அடி அகலத்திற்க்கு அகழி அமைப்பது அவசியமாகும். அகழிக்காகத் தோண்டப்படும் மண் எல்லைப் பக்கமாக கொட்டப்பட்டு அதில் உயிர்வேலி கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் கொட்டப்பட்ட மண்ணில் எளிதாக வேர்கள் ஓடி வளரச் செய்யும்.

இதில் அமைக்கப்பட்ட அகழியானது அருகில் இருக்கும் நிலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன நஞ்சுகளை காற்றின் மூலமாகவோ மழைநீர் மூலமாகவோ நிலத்திற்குள் வருவதைத் தடுக்கிறது. அத்தோடு மழைநீரை அறுவடை செய்து நிலத்தடிநீரை உயர்த்தவும் பண்ணைக் குட்டை அமைக்கும் போது மழைநீரை கொண்டு செல்லும் வாய்க்காலாகவும் அமைத்துக் கொள்வது என பல்வேறு பயன்களைத் தரவல்லதாக அமைகிறது.

பெரும்பாலும் உயிர்வேலியில் முள்மரங்களும் கால்நடைத் தீவன மரங்களுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றால் விவசாயிகள் தங்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.

வேலியில் பயன்படுத்தப்படும் முள்மரங்களாக முள்கிழுவை, பரம்பை மரம், இலந்தை மரம், யானைக்கற்றாழை, ஒத்தக்கள்ளி, காக்காமுள், காரை, சூரை, சங்கமுள், கொடுக்காப்புளி, வெள்வேல், குடைவேல், வாதமடக்கி, பனைமரம் போன்ற உயிர்வேலிகள் உழவர்களுக்கு மட்டுமன்றி பறவை மற்றும் பிற உயிரினங்கள் வாழ வழி செய்கிறது.

இதனால் வேளாண் நிலத்தின் ஓர் பன்மயச் சூழலை உருவாக்க முடிகிறது.

ஆகியவற்றுடன் சவுண்டல், மலைவேம்பு, சவுக்கு, பீநாறி, நுனா ஆகிய நீள்குடை மரங்கள் காற்றின் வேகத்தைத் தடுத்து நிலத்தின் ஈரப்பதத்தை அதிகரிப்பதுடன் சாகுபடி செய்த பயிர்களை காக்கவும் செய்கிறது.

இத்துடன் உயிர்வேலிகளில் பிறண்டை, முசுமுசுக்கை, வேலிப்பருத்தி, கோவக்கொடி, குறிஞ்சா கொடி, முடக்கத்தான், நொச்சி, சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் இயற்கையாகவே வளர்ந்து பலன் தரும்.

அதோடு சுரை, பீர்க்கு, பாகற்காய் என விவசாயிகள் தம் தேவைகளுக்கும் பயிரிட்டு பயனடைய முடியும்.

மண் அரிப்பை தடுக்கும் பனைமரம், வெள்வேல், குடைவேல், கொடுக்காப்புளி, போன்ற மரவேலிகளால் உயிர்மண் என்றழைக்கப்படும் நிலத்தின் மேல்மண் பெரும் மழையால் காற்றால் அடித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது எனவே நிலம் தன் வளத்தை இழக்காது.

சவுண்டல், அகத்தி, முள்முருங்கை, கிளாரிசெடியா (உரக்கொன்றை), மலைக்கிழுவை, ஆமணக்கு ஆடாதொடை, நெய்வேலி காட்டாமணக்கு போன்றவை வேலிகளில் அமைப்பதன் மூலம் கால்நடைத் தீவனமாகவும் நிலத்திற்கான உரச்செடிகளாகவும் எண்ணற்ற வகைகளில் பயனளிக்கிறது.

சமீப காலங்களில் உழவர்கள் தமக்கான உயிர்வேலிகளைத் தவிர்த்து சீமைக்கருவேல் மரத்தை வேலியாக அமைத்தனர். அவை நிலத்தடி நீரை உறிஞ்சியும் காற்றின் ஈரப்பத்தை உறிஞ்சியும் மழை பெய்யா சூழலை உருவாக்கி பெரும் வறட்சியை உண்டாக்கிவிட்டது. எனவே நம் மண்ணுக்கேற்ற சூழலுக்கேற்ற உயிர்வேலிகள் அமைப்பது அவசியமாகிறது.

சரியாக மழைக்காலங்களில் உயிர்வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்துப் பின்னர் வறட்சி தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமைகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் நம் வானகத்தில் மேற்கூறிய படி உயிர்ப்பான உயிர்வேலியை அமைத்துள்ளார். அதில் பரம்பை, பனை, சப்பாத்திக் கள்ளி, முள்ளு கற்றாழை, நெய்வேலி காட்டாமணக்கு ஆகியவற்றையும் கால்நடைத் தீவனமாக உரக்கொண்றை (கிளரிசெடியா), கிழுவை, இலந்தை,, காரை என வறட்சியைத் தாங்கி வரும் அரணாக உயிர்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

“வானகம்” இரா.வெற்றிமாறன் 9566667708