உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள் செங்கல் தான்.ஏறக்குறைய கிமு 7000 க்கு முன்பே இதன் பயன்பாடு தொடங்கிவிட்டது.ஏறக்குறைய 9000 ஆண்டுகள் வரலாறு கொண்டது.
ஆனால் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய செங்கல் பயன்பாடு 90 சதம் இல்லை.தமிழ்நாட்டிலும் இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது.என்னுடைய கணக்கு படி அடுத்த 10 வருடங்களுக்கு பிறகு இங்கும் செங்கல் இருக்காது.
காரணம் மத்திய அரசின் கட்டுப்பாடுகள்,மண் கிடைப்பத்தில் சிரமம்,செலவு,போன்ற காரணங்கள் இருக்கிறது.(பெட்ரோல் டீசல் போலத்தான்)
இன்னொரு பக்கம் பார்த்தால் இதன் தயாரிப்பில் பெரும்பங்கு மரம் பயன்படுத்தப்படுவதால் சுற்றுசூழல் சீர்க்கேடையும் என்பதாக கூட இருக்கலாம்.அழிக்கும் வேகத்தில் இங்கு மரம் வைக்க ஆள் இல்லையே…
இதனால் தான் இந்த வருட வெயில் காலத்தை ஆரம்பத்தில் இப்போதே என்ஜாய் பண்ண ஆரம்பித்து இருக்கிறோமே…
தமிழ்நாட்டில் இன்றளவும் செங்கல்லில் கட்டப்பட்ட கட்டிடங்கள் கோட்டைகள் பல நூறு ஆண்டுகளை கடந்து தன்னுடைய தொழிநுட்ப திறனை,பலத்தை கட்டிக்கொண்டுதான் இருக்கிறது.அவற்றை பாதுகாப்பது அரசின் கடமை.
சரி விசயத்திற்கு வருவோம்…
தொழில் நுட்பம் என்றாலே நாம் இயந்திரம் ,கருவிகள்,மின்னணு சாதனங்கள் என தொடர்பு படுத்தியே யோசிக்க பழகியிருக்கிறோம்.ஆனால் அந்த வார்த்தையை பிரித்து பாருங்களேன்.தொழில்+நுட்பம் இது எந்த ஒரு தொழிலுக்கும் செயல்பாடுக்கும் பொருந்திப்போகக்கூடிய சொல்.
பனை நுங்கு சீவுவதை கவனித்திருக்கிறீர்களா ? கொஞ்சம் பிசகினாலும் நுங்குக்கு பதிலாக கை போய்விடும்.கோயிலுக்கு சென்றிருப்பீர்கள் அர்ச்சனைக்கு தேங்காய் உடைப்பவர்களை பார்த்திருப்பீர்கள்.நாம் என்ன தான் கவனமாக உடைத்தாலும் சரிபாதியாக உடைக்க முடியாத தேங்காய் நூற்றுக்கணக்கில் உடைத்துக்கொண்டிருப்பதை எண்ணி வியந்திருக்கிறீர்களா !
குவளைக்கும் வட்டாவுக்கும் ஐந்தடி இடைவேளியில் டீ ஆற்றுவது, ஒரே அளவாக வட்டமாக சப்பாத்தி உருட்டுவது,சர சரவென சமமாக காய்கறிகளை நறுக்குவது என நம்மால் கண்டும் காணாமல் கடந்து போகப்படுபவை அனைத்துமே தொழில் நுட்பம் தான்.
அப்படியான ஒன்று செங்கல் கட்டுமானம்.கருங்கல்லில் கட்டப்படும் கட்டுமானம் வேறு ஆனால் செங்கல்லில் கட்டப்பட்டவைகளில் இடத்திற்கு தக்கவாறு செங்கல்லை வட்டமாக,அறுகோணமாக,எண்கோணமாக என பல வடிவங்களில் உருவாக்கியிருக்கிறார்கள்.அவை தவிர சிற்பங்களை கூட செங்கல்லில் தேய்த்து தேய்த்து உருவாக்கியிருக்கிறார்கள்.
செங்கல்லால் கட்டப்பட்ட ஆயிரத்து இருநூறு வருட கட்டிடங்கள்,ஆயிரம் வருட சோழர்கால கட்டிடங்கள்,சில இருப்பினும் செங்கல் கட்டிடங்கள் நாம் காணக்கிடைப்பவை விஜய நகரப்பேரரசின் வழி வந்த நாயக்க மன்னர்களின் கட்டிடங்களே.கூம்பு வடிவமாக மிக நீண்ட வடிவில் கட்டப்பட்டு கோயில்களில் வௌவால் நெத்தி மண்டபம் என அழைக்கப்படுபவை பெரும்பாலும் அவர்கள் காலத்தியதே.நாயக்கர்களுக்கு பின் அந்த கலையை ,அந்த செங்கல் கட்டுமான தொழில் நுட்பத்தை கைக்கொண்டவர்கள் மராட்டியர்கள்.
மராட்டியர்கள் காலத்தில் பல அரண்மனைகளும் ,கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழிப்போக்கர் சத்திரங்களும் அன்றைக்கு இருந்த பெருவழியில் கட்டப்பட்டன. அவர்கள் காலத்தில் கோயில்களின் தரைத்தளம் நல்ல சப்பைக்கற்களால் (தட்டையாக அகலமாக இருப்பவை ) பாவப்பட்டன.தஞ்சை பெரிய கோயிலின் தளம் சரபோஜி காலத்தில் போடப்பட்டதாக தகவல்.
.
செங்கல் கட்டிடங்களின் இணைப்புக்கலவையின் வீரியமும்,தரமும் குறைந்தது நானூறு ஆண்டுகள். சலித்த மணல்,சுண்ணாம்பு,வஜ்ஜிரம்,பனைவெல்லம்,இவற்றை கடுக்காய் ,தான்றிக்காய் ஊற வைத்த நீரோடு சேர்த்து கலவையாக்கி கட்டப்பட்டவை.கட்டிடங்களின் உட்பக்க பூச்சு வழவழப்புக்கு முட்டையின் வெண்கருவும் சேர்க்கப்பட்டது.
சுனாமியால் பெயர்க்க முடியாத கோட்டைச்சுவர்கள் இன்னும் தரங்கம் பாடியில் இருக்கின்றன்.அது நாயக்கர் கால கட்டுமானம் தான்..
தஞ்சாவூர் அரண்மனை,பள்ளியக்ரகாரம் நீர்த்துறை மண்டபம்,திருவிடைம்ருதூர் அரண்மனை,திருவிடைமருதூர் காவிரி படித்துறை ,திருக்குறுக்கை கோயில் கோபுரம்,கரவீரம் உற்சவ மண்டபம்,திருவாரூர் கமலாலயம் படித்துறை,வீதியுலா மண்டபங்கள்,நீடாமங்கலம் யமுனாம்பாள் சத்திரம் ,புன்னை நல்லூர் மாளிகை என மிக நீண்ட பட்டியல்.
நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவற்றுள் நீடாமங்கலம் யமுனாம்பாள் சத்திரமும் ஒன்று.
பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட மன்னர் பிரதாப் சிங் தனது மனைவி யமுனாபாய் பெயரில் வழிப்போக்கர்களின் தங்குமிடமாகவும்,அன்ன தான கூடமாகவும் ,மன்னர் வருகையின் போது மக்கள் சந்திப்பிற்காகவும் கட்டப்பட்ட மண்டபம்
பொருளானாலும்,மனிதர்களானாலும் உபயோகப்படுத்தி தூக்கி எறியும் காலத்திற்கு வந்து விட்டோம்.
இது தெரியாமல் இவை இன்னும் இடியாமல் தன்னை கட்டியவர்களின் தரத்தை ,நமது முன்னோர்களின் கட்டிட தொழில் நுட்பத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது…
நன்றி…
பொறியாளன். ஹரிபிரசாத்.