உழவு – அதிகாரம் 104
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -1031.
———-
சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப் பாட்டுக்கு உணவையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.
எத்தகைய தொழில் நடக்காமல் நின்று போனாலும் யாரும் பசியில் வாடமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் ஒன்று மட்டும் நின்று போனால் உலகம் சுற்றுவதே நின்றது போலாகிவிடும்.
எத்தகைய தொழில் செய்வோரும் உழவினால் வரக்கூடிய உணவை உன்பவரே.
இதனை அறிந்தவர்கள் உழவுத்தொழிலில் எத்தனை பாடுகள் இருந்தாலும், அதுவே எக்காலத்திலும் உயிர்களைக் காக்கும் என்றறிந்து உழவைவே மேற்கொள்கிறார்கள்.
———–
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – 1032.
எத்தகைய மேன்மை பொருந்திய வேலைகளை செய்வோராக இருந்தாலும், உழவுத்தொழிலாகிய உலகத்திற்கு அச்சாணியாக விளங்கும் உழவர்களை சுற்றியே வரவேண்டும்.
அதைவிடுத்து வேறு வேளைகளில் நேரத்தை கழிப்பது அவரவர் அறிவை பொருத்து அமையும்.
————
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.1033.
உழவு தொழில் செய்து அதிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்கிறவர்களே வாழ்க்கையை வாழ்கிறவர்கள். பிழைப்பு வேறு வாழ்வு வேறு என்பதை மறைத்து விளக்குகிறார்.
உழவு தொழில் செய்யாமல் வேறு தொழில் செய்து உணவை வாங்கி உண்போர் எல்லோரும் வேறு வழியின்றி உழவர்களை நம்பியே பிழைக்கிறார்கள். ஆகையால் உணவு உற்பத்தி செய்யாமல் உணவு உண்ணும் அனைவரும் உழுவோரை “தொழுது” அவர்களிடம் இருந்து வரும் உணவுக்காக காத்து கிடக்கிறார்கள். இவர்கள் செய்யும் தொழில் எத்தகையானதானலும் அது உழவுத் தொழிலுக்கு பின்னே தான் மதிக்கப்படும் .
———–
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் – 1034.
உணவு உற்பத்தி இல்லாமல், அரசனைப்போன்ற செல்வ செழிப்பான வாழ்வை வாழக்கூடியவராக இருந்தாலும், பொன்னும், பொருளும் உடையவராக இருந்தாலும் உழவர்கள் அவர்களை மேன்மையானவர்களாக நினைப்பதில்லை.
உலகம் செழிக்க, மக்கள் முகத்தில் பசிவாட்டம் தெரியாமல் செய்யும் உயரியத் தொழிலான உணவு உற்பத்தி செய்வோராக இருக்கக்கூடியவர்களாகவும், மற்றையவர்களுக்கு படி அளக்கக் கூடியவர்களாகவும் உள்ள உழவர்கள் வேறு தொழில் செய்யக்கூடியவர்களை தன்னுடைய தகுதிக்கு கீழான தகுதியில் வைத்துத் தான் பார்ப்பார்கள்.
————
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் -1035.
யாரிடமும் எதற்காகவும் கையேந்த மாட்டார். தன்னிடம் கையேந்தி நிற்பவருக்கு தன்னிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் பிரதிபலனை பாராமல் தானமாகக் கொடுப்பதையே வாழ்க்கை என்று வாழ்கிறவர்கள்.
————-
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை – 1036.
உழுவோர்கள், நாங்கள் இனி உழப்போவதில்லை என்று உழவையும் , உணவு உற்பத்தி செய்வதையும் திட்டமாக நிறுத்தி விட்டார்களேயானால்,
இந்த பொருளுலக வாழ்க்கை வேண்டாம் என்று துறவறம் மேற்கொண்ட துறவியர்கள் கூட பசியில் வாடி தம் தவத்தை தொடர முடியாமல் நற்கதியற்று போவார்கள்.
துறவியர்கள் கிடைக்கும் போது உண்டு கிடைக்காத போது வருத்தமின்றி தத்தம் தவத்தை மேற்கொள்ளுபவர்கள். எல்லோரும் உணவைத்தேடி உண்ணும் உலகில், உணவுக்கு முக்கித்துவம் கொடுக்காத துறவர்களுக்கே இந்நிலை என்றால் மற்றவர்கள் நிலை என்னவோ?
———-
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும் -1037.
புழுதி என்பது மணலைவிட பல மடங்கு துகளானது. அப்படி புழுதியாகும் படியாக உழவை செய்தால் மண்ணில் இருக்கும் இறுக்கம் தளர்ந்து பொலபொலப்பு உண்டாகி தாவர இனங்களின் வேர் எளிதாகவும். ஆழ,அகலமாகவும் பரவி நிற்பதால் அதிக விளைச்சல் கிடைக்கும் .
இவ்வாறு செய்வது நிறைய எருவிடுவதால் ஏற்படும் நன்மையை விட மிக அதிக நன்மையை நிலத்தில் செய்து பயிர்களில் வெளிப்படும்..
————-
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு – 1038.
பெத்த தாய்க்கு சோறு போடாதே!
கொடுத்தக் கடனைத் திரும்ப கேளாதே!
நட்டப் பயிருக்கு வேலி போடாதே? என்பது பழமொழி.
பயிர் சிறக்க, உழுவதை விட எருவிடுதல் தான் சிறப்பென்று கூட சொல்லக்கூடும்.
பயிர்களுக்கு செய்ய வேண்டியவைகளான களை எடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல் போன்றவைகள் முக்கியமான தென்றாலும், இவை எல்லாவற்றையும் விட, விளைந்த பொருளை மழை, பனி, வெயில், காற்று இவைகளினால் கெடாமல் விளைந்ததை வீணாகாமல் வீடு வந்து சேர்ப்பதே முக்கியமானது.
———–
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் -1039.
நிலத்திற்கு உரியவன் தினசரி பலமுறை சென்று நிலத்தைப் பார்த்து அதனோடு உறவாடி, தன்னுடைய குடுப்பத்தில் ஒருவராக பார்க்காதிருந்தால், மனைவியின் மனமறிந்து செயல்படாத கணவனிடம் மனைவி எப்படி தன்னுடைய வளமையையெல்லாம், ஆசையையெல்லாம் வெளிக்காட்டாமல் மறைத்து, மரத்துப் போய் இருப்பாலோ,அதே போல், நிலம் தன்னை வந்து கவனிக்காத உரிமையாளருக்கு கொடுப்பதற்கு நிறையவும், எல்லாமும் இருந்தாலும் மனைவியைப் போல் வெறுத்துப் போய் பிணங்கிவிடும்.
நிலத்தை மனைவிக்கு இணை வைக்கிறார்கள் .
———–
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் -1040.
நிலத்தை பெண்ணாகவும், விதையை ஆணாகவும் பார்ப்பது வழக்கம்.
வளமிகுந்த நிலம் இருக்கும் போது அதில் விதை விதைக்காமல் சோம்பி இருந்து காரணங்கள் சொல்லித் திரிவோரை கண்டால், கொடுப்பதற்காகவே காத்திருக்கும் நிலம் அவனைப் பார்த்து இப்படிக் காத்திருக்கும் என்னை பாராமல் திரியும் இவன் எத்தகையவனென்று சொல்ல என்றெண்ணி நகைக்கும்.
தன்னை ஒரு பெண் தீர்க்கமாக விருப்புகிறாள் என்பதை அறியாமல் குடும்பம் நடத்த துணையில்லை என்று சொல்லி திரிவது போல்.
————————-
குறளுக்கு விளக்கம்
லெ.ஏங்கல்ஸ் ராஜா.