எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்?

எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்
Agriwiki.in- Learn Share Collaborate
எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்?

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கையே இல்லாத முழுமையாக இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு விளைவித்த பொருட்கள் மட்டுமே உட்கொண்டு பல ஆயிரம் வருடங்கள் வாழவேண்டும் என்று தற்சமயம் ஆசைப்படுகிறார்கள்..

தொடர் விவசாய சங்கிலி அறுந்தபின்பு அதாவது அனுபவ விவசாயம் படுத்துவிட்டபின்பு
புதிய தலைமுறை விவசாயிகள் இயற்கை விவசாயத்தினை அனுபவம் இல்லாமல் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பசுந்தழை உரமிடல் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை வயலுக்கு உபயோகித்தல் ஆகும். பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும்.

ஆனால் இயற்கையான மண்வளமூட்டும் பசுந்தழை கனிம பொருட்கள் அதிக விலையேற்றமாகி விட்டதாலும் அதனை வயலுக்கு இட வேலை ஆட்கள் கிடைக்காததாலும், கிடைத்தாலும் பண்ணையம் செய்ய கட்டுபடியாகாத கூலி கேட்பதாலும் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது.

அதனால் விவசாயிகளுக்கு தெரிந்த ஒரு வைத்தியம் ….

பசுந்தாள் தாவரங்களான அவுரி, சணப்பு,தக்கைப்பூண்டு ஆகியவற்றை விதைத்து, சில காலம் வளர்த்து மண்ணில் அப்படியே மடக்கி உழவு செய்துவிடுவது வழக்கமாக உள்ளது.

ஆனால் இதனால் அதிக பலன் கிடைக்கும் என்று
அதீத கற்பனை செய்வது தவறானதாகவே முடியும் .“

காரணம் தான் என்ன?

மண்ணில் இடப்படும் கரிம சத்துக்கள் நுண்ணுயிரிகளால் மாற்றம் செய்யப்படும் போது இருவேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன.

.
1.கரிமச்சத்தை கனிமப்படுத்தல்(Mineralization )

நன்கு முற்றாதஅதாவது அதிக அளவு புரோட்டீன்களைக் கொண்ட தாவரப்பகுதிகள் அதிக அளவு பாக்டீரியாக்களால் குறைந்த கால அளவில் நொறுக்கப்பட்டு அதனது சத்துக்கள் தழைச்சத்துக்களாகவும் தனித்தனி அயனிகளாகவும் பிரிக்கப்பட்டு உடனடியாக பயிருக்கு கிட்டும் வகையில் மண்ணில் சேர்க்கப்படுகிறது.
இது ஒருவகையில் செயற்கை உரவிடுவது போன்றதே காரணம் மண்ணிணை உடனடி சத்து செறிவூட்டும் செயலாகவே கருதப்படுகிறது.

கரிமச்சத்தை கனிமப்படுத்தும் செயலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் பெருகுவதால் அதற்கான உணவு பற்றாக்குறை எற்படும்நிலையில் மண்ணில் மீதம் உள்ள சத்துக்களை உட்கொண்ட பயிருக்கு போதிய சத்தில்லாத நிலையை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கரிமச்சத்தை கனிமப்படுத்தி விவசாயம் செய்வதற்கும், செயற்கை உரமிட்டு விவசாயம் செய்வதற்கும் பெரிய வேறுபாடு இல்லை
மேலும் மிகச் சிறு இடைவெளி மட்டுமே இரண்டையையும் பிரிக்கிறது

2.கரிமச்சத்தை மண்மட்கு ஆக்கப்படுதல்.(Humification)

நன்கு முற்றிய / விளைந்து முடித்த தாவரப்பகுதிகள் , அதாவது அதிக அளவு நார்ச்சத்து மற்றும் லிப்பிட்ஸ் (அ) கொழுப்பு ( Lipids)கொண்ட/ புரோட்டீன்கள் அளவு குறைந்த தன்மை கொண்ட தாவரப்பகுதிகள் அதிக அளவு பூஞ்சாளங்களால் மட்டும் அதிக கால அளவில் சிறிது சிறிதாக சிதைக்கப்பட்டு அதனது சத்துக்கள் மண்மட்காக சிதைக்கப்பட்டு நெடுநாட்களுக்கு பயிருக்கு கிட்டும் வகையில் மண்ணில் சேர்க்கப்படுகிறது.
.
கரிமச்சத்தை மண்மட்கு ஆக்கப்படும் செயலில் கோடிக்கணக்கான பூஞ்சாளங்களால் கரிமச்சத்து தொடர்ச்சியாக மண்மட்கு ஆக்கப்பட்டு குறைந்த அளவு சத்துக்களை மட்டும் உறிஞ்சப்படுகிறது. அதன்பின் தோதான சூழ்நிலைகளில் மீதமுள்ள நார்ச்சத்து மற்றும் லிப்பிட்ஸ் (அ) கொழுப்பு ( Lipids) மண்மட்கு ஆக்கப்படும் நிகழ்வு பூஞ்சாளங்களால் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இதனால் தொடர்ச்சியாக மண்வளமும் பயிர் வளமும் பெரும் நிலை ஏற்படுகிறது

மேற்கண்ட இருவகை கரிம மாற்றங்களில் பின்னது மட்டுமே நீடித்த மண்வளமும் நிலைத்த பயிர் விளைச்சலும் பெற்றிட மிகவும் ஏற்றதாக இருக்க வாய்ப்புள்ளது.

எனவே விவசாயிகள் இளம் பயிர்களை மண்ணுக்கு இடுவதைத் தவித்து மக்காச்சோளத்தட்டைகள் பருத்திமார்கள், வாழை தண்டுகள் ஆகியற்றை வயலுக்கு பாரமாக கருதி அப்பறப்படுத்தாமலும் எரிக்காமலும் மண்ணில் நறுக்கி இட்டு வளம் பெற்றிடலாமே?