கஙசஞ: எத்திசைச் செல்லினும்

Anand chellaiah

கஙசஞ: எத்திசைச் செல்லினும்

‘தமிழனுக்குத் தமிழே துணை’ என்று எழுதி விருப்பக் கையொப்பமிடுவது இரசிகமணி டி.கே.சியின் வழக்கம். இந்தச் சொற்றொடர் வெகு நாட்களாகவே என் மனத்தில் உருண்டுகொண்டிருந்தது. கடந்த மரபுக்கூடல் அன்று நான் எழுதிய‘கஙசஞ – சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்’ நூல் வெளியானது. சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு, அதில் கையொப்பமிட்டுத் தரச் சொன்னார்கள். ’தமிழே துணை’ என்று எழுதி கையொப்பமிட்டேன். தமிழின் தயவில் எனக்கும் ஓர் அடையாளம் 🙂

‘ஊடகத்துறை வேலையை நம்பிக்கொண்டு காலம் தள்ள முடியாது, என்றைக்கானாலும் சொந்தத் தொழிலே கைகொடுக்கும்‘ என நான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தேன். ஒரு தொழில் என் மனத்தில் தோன்றியது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களிடம் அதை பற்றி ஆர்வத்துடன் உரையாடுவேன். பெரியவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுப்பதற்கான வகுப்புகளை நடத்துவதுதான் அத்தொழில். எனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. ஆனால் ஆங்கில மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் 🙂 இத்தனைக்கும் தமிழ் அடையாளம், தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளனாக அறியப்படுபவனாகவே அப்போது இருந்தேன். வேறொன்றுமில்லை. சமூகத்தில் எதற்குத் தேவை இருக்கிறதோ, அதன் பின்னால் ஓடும் வழக்கமான வணிகப்பார்வைதான் என்னையும் அப்படி திட்டமிட வைத்தது. நல்ல வேளை, திட்டம் கைகூடவில்லை. 🙂

தமிழில் எனக்கு ஓரளவு தேர்ச்சி உண்டு. தமிழ் அறிவு குறித்த பெருமிதத்தைக் காட்டிலும், அது என் மனத்துக்கு மிக நெருக்கமான பாடம் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் என் பள்ளி ஆசிரியர் கயத்தாறு மீனாட்சி சுந்தரம். தேர்ச்சியைக் காட்டிலும், அந்த உணர்வே என்னைப் பல இடங்களில் வழிந்டத்தியிருக்கிறது. ஆசிரியர் என்ற வகையில் ஒருவருக்கு இதுவே இன்றியமையாத பணி எனக் கருதுகிறேன்.

முதுகலைக் கல்விக்கான பருவத்தில் பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியைச் சந்திக்க நேர்ந்தது என் வாழ்வில் முக்கியமானதொரு திருப்புமுனை. பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பின்னால் அலைந்த
மாணவர்களில் நானும் ஒருவன். என்னைப் போன்ற சில மாணவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று உரையாடுவோம். எங்களுக்கு உணவும் கொடுத்து, தமிழ், இலக்கியம், திரைப்படம், வரலாறு எனப் பல தளங்களைச் சார்ந்த செய்திகளையும் அறிமுகப்படுத்துவார். அப்போது அவர் ஒரு விரிவுரையாளர். பணியில் புதிதாகச் சேர்ந்திருந்தார். அக்காலத்தில் தான் பெற்ற குறைவான ஊதியத்தில்தான் இதையெல்லாம் செய்தார் என்பதை மிக மிக தாமதமாகவே அறிந்துகொண்டேன். ‘ப்ளேடு உறை மேல ‘Do not wipe out’ன்னு எழுதிருப்பாங்க. துணியை வச்சு துடைச்சாக் கூட, ப்ளேடோட கூர்மை போய்டும். அதைத் தவிர்க்கத்தான் இந்தச் செய்தி. அதே மாதிரிதான் மொழியும். சொற்களைக் கவனமா கையாளணும். இல்லைனா மொழியின் கூர்மை போய்டும்’ என்று அவர் சொன்னது என் மனதில் நிலைத்திருக்கும் கூற்றுகளில் ஒன்றாகிவிட்டது.

என் மகளுக்கு ஆதிரா என்று பெயரிட்டேன். ரொம்பவும் மெனக்கெடாமல் தமிழ்ப்பெயர் வைத்துவிட்ட பெருமையில் அலைந்த என்னை சலபதியின் குட்டு தட்டி வைத்தது. ‘ஆதிரை எப்படி இருக்கா…மன்னிக்கணும்…ஆதிரா எப்படிருக்கா?’ என்று விளையாட்டாக மின்னஞ்சலில் நலம் விசாரிப்பார். ‘இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைக் கூர்மையா பார்க்கணுமா என்ன?’ என்று நான் அலுத்துக்கொள்வேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம், ‘ஆதிரா வேறு, ஆதிரை வேறு’ என்று எனக்குப் புரிய வைத்தது.

தமிழ்ச்சான்றோர் பலருண்டு. அதை ஒரு வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டவர் யாரேனும் இருக்கிறாரா எனில் நண்பர் செந்தமிழனின் பெயரையே சொல்வேன். வேளாண்மை, மருத்துவம், கட்டுமானம், உறவுகள், குடும்பம் என வாழ்வின் அனைத்துத் தேவைகளுக்குமான வழிகாட்டல் தமிழில் இருக்கிறது என்பதை என்னைப் போல பலருக்கு உணர்த்திவருபவர். தமிழை உணர்ந்து பயின்றவர்கள்
எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்பவர். அவர் சொல்லவில்லை எனில், இந்நூலை நான் எழுதியிருக்க மாட்டேன்.
நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், இது சரியானதொரு நூலாக வருவதற்குத் தனது வழிகாட்டலையும் வழங்கினார். அவருடைய மனைவி காந்திமதி மெய்ப்பு பார்த்ததுடன், உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இவர்களுக்கெல்லாம் நான் உளமாரக் கூறும் நன்றிகள் நான் தொடர்ந்து செய்ய விரும்பும் நற்பணிகளாக உருமாறட்டும் என இறையை வேண்டுகிறேன். நூல் கூறும் செய்தியை அட்டை வடிவமைப்பில் ஒரு சின்ன விளையாட்டு மூலம் அழுத்தமாகக் கூறிவிடுவது நண்பன் சந்தோஷ் நாராயணனின் பாணி. அதை ‘கஙசஞ’விலும் நிகழ்த்தியுள்ளான். அவனுக்கு நன்றி சொன்னால், ‘லேசா கண்ணு கலங்குற மாதிரி இருக்குது. அழுறியோ?’ என்றெல்லாம் கேட்டு பீதியைக் கிளப்புவான். 🙂 எதுக்கு வம்பு?

தமிழ் இலக்கணத்தை இறுக்கமற்ற தன்மையில், நட்பார்ந்த தொனியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்தது. செம்மை மரபுப்பள்ளி மூலமாக அது் செயல்வடிவம் பெற்றது. ‘கஙசஞ’ மூலமாக என் விருப்பம் நூல் வடிவம் பெற்றுள்ளது. என் முதல் நூல் தமிழ் இலக்கணத்தை மக்களிடம் பேசும் ஒரு முயற்சியாக இருக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

செம்மை மரபுப்பள்ளியில் மாணவர்கள் வகுப்புதோறும் ஒரு தூய தமிழ்ச் சொல்லை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு விளையாட்டை நடத்துவேன். குறிப்புகளின் துணையுடன் புதையலைக் கண்டுபிடிக்கும் வேலைதான் அந்த விளையாட்டின் வடிவம். மரமும் செடி கொடிகளும் நிறைந்த வளாகத்தில் அங்கங்கே குறிப்புகள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பு இன்னொன்றுக்கு வழிகாட்டும். இறுதியில் ஒரு புதையலைப் போல ஒரு நல்ல தமிழ்ச்சொல் காகிதத்தில் எழுதப்பட்டு மண்ணுக்கடியில் காத்திருக்கும். ஆழி, கயல், களிறு போன்ற சொற்கள் புதையல் விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கற்பித்தல் பணி குறித்து நிறைவு எனக்கு இல்லை. இத்தகைய சோர்வில் நான் பேச்சற்று இருந்த ஒரு நாள் அது. மீள்பார்வைப் பயிற்சியாக ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் புதையல் விளையாட்டு மூலமாக அவர்களுக்கு அறிமுகமான சொற்களை நினைவுகூரச் சொன்னேன். ‘டால்பினுக்குத் தமிழில் என்ன பேருன்னு ஞாபகம் இருக்கா?’ என்ற வினாவுக்கு என் முன்னால் நின்று கொண்டிருந்த மாணவர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எங்களுடன் தொடர்பே இன்றி சிலம்பக் கம்புடன் சுற்றிக்கொண்டிருந்த நித்திக்கிடமிருந்து விடை வந்தது, ‘ஓங்கில்!’

நித்திக் ஒரு ‘பால்கனி’ மாணவன். பெரும்பாலும் வகுப்பில் அமர மாட்டான். அருகில் உள்ள வாகை மரத்தின் கிளை மீது அமர்ந்தபடிதான் பாடத்தைக் கவனிப்பான். கோபத்தை அடக்கிக்கொண்டுதான் அவனிடம் உரையாடுவேன். அவன் இச்செய்திகளை நினைவில் வைத்திருப்பான் என நான் எதிர்பார்க்கவில்லை.

அப்படி ஒன்றும் நம் கைகள் வெறுமையாக இல்லை; சில பிஞ்சு மனங்களையாவது உள்ளே கொண்டு வந்திருக்கிறோம் என்ற நிறைவு எனக்கு அன்று ஏற்பட்டது. ‘கஙசஞ’ வழியாக அத்தகைய சிறு மாற்றம் நிகழ்ந்தாலும், மகிழ்ச்சி கொள்வேன்