காயா மகோகனி – Khaya senegalensis
*கயா* வகை மரங்கள் மகோகனி மரங்களை போன்ற வண்ணம் உடையதால் இவை ஆப்ரிக்கன் மகோகனி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறது. அதில் முக்கியமான மரம் காயா செனெகலென்சிஸ் ஆகும். தற்போது வணிக ரீதியில் தமிழகம் முழுவதும் பரவலாகப் வளர்க்கப்படுகிறது. காயா மகோகனி மரங்களை போதுமான இடைவெளியில் நட்டு வளர்க்கும்போது அகலக்குடை விரிக்கும், ஆண்டு முழுவதும் பசுமையான மரம். வறட்சி ஏற்பட்டால் மட்டும் இலை உதிர்க்கும். இது 15-30 மீட்டர் உயரம் வளரும், 10 வருடங்களிலேயே 1 மீட்டர் சுற்றளவு வளரும். காயா பேரினத்தில் K.senegalensis தரமான மரம், ஓரளவு கடினமானது. இதன் பூர்வீகமான மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிழல் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
*காயா வகைகள்*
Khaya senegalensis – ஆப்ரிக்கன் மகோகனி
Khaya anthotheca – வெள்ளை மகோகனி (கிழக்கு ஆப்பிரிக்க மகோகனி)
Khaya grandifoliola – செனேகல் மகோகனி
Khaya ivorensis – லாகோஸ் மகோகனி
*பூர்வீகம்:* காயா வகை மரங்களில் நான்கு சிற்றினங்கள் உள்ளது. இவற்றின் தாயகம் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆகும். இயற்கையாக ஆப்பிரிக்க சவான்னா காடுகளில் காணப்படுகிறது. இது அமெரிக்க வகை மஹோகனியின் (Swietenia mahogany) குணங்களை ஒத்திருப்பதால் பொதுவாக மகோகனி என்றே அழைக்கப்படுகிறது. ஸ்வீடீனியா மகோகனி என்பது “உண்மை மகோகனி” என்றும் காயா மரங்கள் “காயா மகோகனி” என்றும் சந்தைப் படுத்தப்படுகிறது.
வளரியல்பு: உயரமாகவும் அதிக கிளைகள் பரப்பாமல் வளரக்கூடிய மரம், கூட்டிலைகள், 4-6 ஜோடி சிற்றிலைகள் கொண்டது, ஒவ்வொரு சிற்றிலைகள் 10-15 செ.மீ. நீளமானது, வறட்சி இருந்தால் மட்டும் இலை உதிர்க்கும். மரத்தின் பட்டை அடர் சாம்பல் – சாம்பல்-பழுப்பு நிறமுடையது. விதைகள் எண்ணெய் சத்து நிறைந்தவை. மரம் சுமார் 30-35 மீ உயரம் வரை வளரும், காடுகளில் 45 மீட்டர் உயரம் உள்ள காயா மரங்களை காணமுடியும். பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவில் 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காயா மகோகனி மரங்கள் உள்ளது.
*காயா டிம்பர் குணங்கள்:* காயா மரம் 15 வருடங்களில் 5 – 6 அடி சுற்றளவு வரை வேகமாக வளரக்கூடியது, நேராக வளரும், கிளை பிரியாது. வேகமாக பருத்து வளரும் எனினும் மரத்தின் உலர் எடை குறைவானது (35-37 lbs/ft3), மரத்தின் இறுக்கம் குறைவாக இருக்கும். நன்கு முற்றிய மரங்களின் உலர் எடை சற்று அதிகம் இருக்கும். மரத்தின் இதயக் கட்டை சிவப்பு-பழுப்பு நிறமுடையது. இதயக்கட்டை நிறம் மரத்தின் வயதுக்கேற்பவும், சூரிய ஒளியில் உலர்வதாலும் மாறுபடும், மிகவும் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் நல்ல சிவப்பு-பழுப்பு நிறத்திலும், நடுத்தர முதல் அடர் சிவப்பு-பழுப்பு வரையிலான கோடுகளுடன், வயதுக்கு ஏற்ப நிறம் கருமை நிறம் கலந்து காணப்படும். இம்மரத்தில் தச்சு வேலைகள் செய்வது எளிது, இருப்பினும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மர இழைகளால் (Grains) காரணமாக இழைப்பில் சிறிது சொரசொரப்பு இருக்கும். தேக்கைப் போல் எளிதாக இருக்காது. ஈரமான நிலையில் இரும்பு உளிகளில் கரை ஏற்படுத்தும்.
*காயா அந்தோதீக்கா:* மற்றொரு காயா வகையான காயா அந்தோதீக்கா (Khaya anthotheca) மரமும் தற்போது தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகிறது. இம்மரம் காயா செனேகலன்சிஸ் மரத்தைவிட சிறிது தரம் குறைந்ததாக கருதப்படுகிறது, எனினும் அனைத்து வகையான மரவேலைகளுக்கும் காயா அந்தோதீக்கா மரம் உகந்தது.
*தொழிற்சலை பயன்பாடு:* ஆப்பிரிக்க மஹோகனிகளில் காயா செனேகலென்சிஸ் கடினமானது. இது வணிக அளவில், குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் அடர்த்தி 0.6 முதல் 0.85 வரை இருக்கும், இது மரச்சாமான்கள், உயர்தர வேலைப்பாடுகள், படகு மற்றும் கட்டிடம் ஆகியவற்றிற்கு பயனுள்ளதாக உள்ளது. தரையமைப்புகள், வெனீர் ஆகியவற்றிற்கும் இந்த மரம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கருவிகள் செய்யவும் பயன்படுகிறது.
*காலநிலை:* ஈரப்பதமான, வெப்ப மண்டல காலநிலையை விரும்புகிறது. வெப்ப நிலையை தாங்கி வளரும். உகந்த வெப்பநிலை வரம்பு 25°c முதல் 40°c வரை.
*மரக்கன்றின் உயரம்:* 1 அடி முதல் 1.5 அடி வரை உகந்தது.
*சாதகமான மண் நிலைகள்:* செம்மண், செம்பொறை மண் உகந்தது. ஆழமான, வளமிக்க மண்ணில் செழித்து வளரும். ஓரளவு நீர் தாங்கி வளரும், வடிகால் வசதியும் அவசியமாகும். கடினமான இறுக்கமான மண்ணில் வளர்வதில்லை. மண்ணின் கார அமில நிலை (pH vallue) 6 முதல் 7 வரையில் ஏற்புடையது, 5.5 – 8 வரையிலும் தாங்கிவளரும். கோடை காலத்தில் நீர் கொடுப்பது அவசியம். ஓரளவு நீர் தேங்கிய நிலத்திலும் சில வாரங்கள் தாக்குபிடிக்கும்.
*சாதகமற்ற மண் நிலைகள்:* ஆழமற்ற மண், நீர் தேங்கக்கூடிய களி மண்ணில் வளராது. மானாவாரி உகந்ததல்ல. தண்ணீர் இல்லை என்றால் வாடிவிடும்.
*நீர் தேவைகள்:* நட்டு முதல் இரு வாரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்ச வேண்டும். மண் மற்றும் காலநிலையை பொருத்து 3 – 4 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் தேவையிருக்கும். பெரும்பாலும் வறட்சிக்கு தாங்குவதில்லை. நிலத்தில் சற்று நீர் அதிகம் இருந்தாலும் பாதிக்கப்படாது, மரங்கள் உயிர் வாழ்வதை உறுதி செய்ய மூடாக்கு அவசியம்.
*தொகுப்பாக மரம் நடுதலில் இடைவெளி:* ஆப்பிரிக்கன் மகாகனி மரங்களை 12 x 15,
12 x 12 இடைவெளியில் மற்ற மரங்களுடன் கலந்து நடவு செய்யலாம். ஆ.மகாகனி வேகமாக பருத்து வளர்வதால் 12 x 15 உகந்தது. விரும்பினால் 15 x 15 அடி இடைவெளியும் விடலாம்.
*உத்தேச மகசூல் மற்றும் வருவாய்:* மரங்களை 20 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம், ஒரு மரத்திற்கு ரூ.20,000 முதல் 25,000 வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில்
12 x 15 இடைவெளியில் 242 மரங்களை நட இயலும். தற்போது (2024) மரக்கடைகளில் மகோகனி ஒரு கன அடி 1000-1200 ரூபாயில் கிடைக்கிறது.
*காயாவுடன் வளரக்கூடிய பயிர்கள்: ஜாதிக்காய் மற்றும் தென்னை வளர்க்கலாம். ஆ.மகோகனி உடன் மரவள்ளிக்கிழங்கு ஊடுபயிர் செய்யலாம். தொகுப்பு நடவில் தேக்கு, கருமருது, ஈட்டி, மஞ்சள் கடம்பு போன்ற மரங்களை காயா மகோகனியுடன் வளர்க்கலாம்.