காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு

காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு

 

அறிமுகம்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி, கேண்டலூப் மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்கள் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

தங்கும் நஞ்சுகள்

காய்கறிகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பூச்சிக்கொல்லிகள் காய்கறிகளில் தங்கிவிடும் போது அவற்றை உண்போருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாய்விடுகிறது. எனவே, நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த வேண்டும், ரசாயன வழியில் அல்ல.

உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.

நாற்றழுகல் நோய்

பூஞ்சாணம் முதலில் விதைகளை தாக்கி அழுகச் செய்து அவற்றை முளைக்காமல் செய்யும். இதனால் பாத்திகளில் ஆங்காங்கே நாற்றுக்கள் இன்றி இடைவெளி அதிகமாக காணப்படும். இரண்டாவதாக, இந்த பூஞ்சாணம், முளைத்து வந்த நாற்றுக்களின் தண்டு பகுதியை தாக்கி மடிய செய்கின்றது. இதனால் தண்டுப்பாகம் வலுவிழந்து நாற்றுக்கள் சாயும்.

வாடல் நோய் அறிகுறிகள்

இந்நோய் தாக்கிய செடிகளில் அடிப்புற இலைகள் முதலில் மஞ்சளாகி பின்னர் இளம் இலைகளும் நிறம் மாறி காணப்படும். அதன் பின்னர் இலைகள் வாடி தொங்கத் தொடங்கும். பாதிக்கப்பட்ட செடியின் தண்டின் உட்பகுதி பழுப்பு நிறத்துடன் காணப்படும்.

வேர் அழுகல் நோய் அறிகுறிகள்

இந்நோயுற்ற செடியின் இலைகள் மஞ்சளாகி வாடி தொங்கும். நோய் தாக்கி செடிகளை எளிதில் பிடுங்கி விடலாம். உரிந்த வேர்ப்பட்டையின் மேல் பூசண வித்துக்கள் காணப்படும். சூடேமோனஸ் புளுரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

மண்ணில் இடுதல்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2.5 கிலோ சூடோமோனஸ் புளுரசன்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து கடைசி உழவின் போது மண்ணில் இட்டு பின்னர் நாற்றுக்களை நடவு செய்யலாம். நன்மை செய்யும் இந்த எதிர் உயிரிகள் மண்ணில் பெருக்கம் அடைந்து நோய்க்கிருமிகளுடன் போட்டியிட்டு அழிக்கின்றன.

நாற்றுகளை நனைத்து நடுதல்

நாற்றுகளை நடும் முன்பு சூடோமோனஸ புளுரசன்ஸ் 5 சத கரைசலில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து நடும்போது நாற்றுக்களின் வளர்ச்சி சீராகவும், நோய்களுக்கு எதிராகவும் உள்ளது.

இலைவழி தெளித்தல்

சூடோமோனஸ் பவுடர் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைப்பரப்பின் மீது தெளிப்பதால் இலைகளில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் மிளகாய் பழ அழுகல் ஆகிய நோய்களை தடுக்கலாம். எனவே, விவசாயிகள் மேற்கண்ட முறைகளில் காய்கறி பயிர்களில் நோய் மேலாண்மையை கடைப்பிடித்து சுற்றுச்சூழலை காப்பதுடன் அதிக லாபம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *