கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்

கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்
Agriwiki.in- Learn Share Collaborate

*கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்*

இயற்கை முறையில், மூலிகை பொருள்களை கொண்டு, குடற்புழு நீக்கம் செய்வதின் மூலம், குடலில் உள்ள புழுக்கள் மட்டுமே வெளியேற்றப்படும்.

▪இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள், குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்து அழித்துவிடும்.
அதனால், உண்ணும் உணவை விரைவில் செரிமானமாக்கும் என்சைம்கள் அழிந்து போவதால், உடலின் எடை குறைந்து ,பின் மீண்டும் உடல் எடை கூடும்.

▪இரசாயன குடற்புழு நீக்க மருத்துகளை பயன்படுத்தும் பண்ணைகளில், உணவை நன்கு உட்கிரகிக்க, liver tonic மருந்துகளை, குடற்புழு நீக்கம் செய்த, அடுத்த 3 நாட்கள் தொடர்ந்து அடர்தீவனத்தில் கலந்து கொடுக்கும் நடைமுறை உள்ளது.
இது போல் குடலின் அனைத்து நுண்ணுயிரிகளையும் அழித்து தான், இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள் செயலாற்றுகின்றன.
இதனால் கால்நடைகளில் உடல்எடை இழப்பு, சிறிது ஏற்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு வரும்.

▪இரசாயன குடற்புழு நீக்க மருந்துகளால், குடற்புழுக்கள், அம்மருந்தை தாங்கி வளரும் எதிர்ப்பு திறனை நாளைடைவில் பெற்றுவிடுவதால், வெவ்வேறு மருந்துகளை மாற்றி, மாற்றி தர வேண்டிய நிலைமையும் உள்ளது.

▪கருவுற்ற கால்நடைகளில், சில மருந்துகளால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
அதனால், இயற்கைமுறையிலான குடற்புழு நீக்கம் கருச்சிதைவிலிருந்து பாதுகாப்பானது, உடல் எடை இழப்பு இல்லை, குடல்புழுக்களை மட்டுமே வெளியேற்றுகிறது.

*மூலிகை குடற்புழு நீக்கமருந்து தயாரிக்கும் முறைகள் :*

(வளர்ந்த 1 மாட்டிற்கான அளவுகள் )
☘ சோற்றுகற்றாழை – 2 மடல்
(முட்களை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்)
☘ பிரண்டை ,துளசி, குப்பைமேனி, வேப்பிலை — ஒவ்வொன்றிலும் தலா ஒரு கைப்பிடி
☘ கருஞ்சீரகம் — 10கிராம்.
☘ விரலிமஞ்சள் — 3 இன்ச் நீளமுடையது
(கடைகளில் விற்கப்படும் மஞ்சள் பொடியை தவிர்க்கவும்)

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும், நன்கு இடித்து, கலவையாக்கி, சிறு உருண்டையாக பிடித்து மாட்டிற்கு தரவும்.
மருந்து தயாரித்து, ஒரு மணிநேரத்திற்க்குள் பயன்படுத்துவது சிறப்பான பலனை தரும்.
தயாரித்து, இருப்பு வைக்க கூடாது.
( *குறிப்பு: இதே மருந்தை வளர்ந்த ஆடுகளுக்கு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிலும், குட்டி ஆடுகளுக்கு அதில் பாதியும் கொடுக்கலாம்)*

🐂 குடற்புழு நீக்க மருந்தை முதல் நாள் கொடுத்து, பின் 3 வது நாள் மீண்டும் 1 முறை தருவது நல்ல பலனை தரும்.
🐂 இயற்கை முறையில் செய்யப்படும் குடற்புழு நீக்க மருந்துகளால் உடல் எடை இழப்பு இருப்பதில்லை ஆகையால் மாதம் ஒரு முறை தவறாது கொடுக்கும் போது, கால்நடைகளுக்கு நல்ல பசியை தூண்டும், கொடுக்கப்படும் தீவனங்கள் நன்கு உட்கிரகிக்கிப்படும்.

*குடற்புழு நீக்கம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டியவை :*

🐂 குடற்புழு நீக்கம் செய்வதற்கு, முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் பசுந்தீவனம், வைக்கோல், அடர்தீவனம் என எதுவும் தரகூடாது.
🐂 காலை வெறும் வயிற்றில் மருந்துகளை கொடுத்து, இரண்டு மணிநேரம் கழித்து தீவனம் தரவேண்டும்.
🐂 தீவனம், அடர்தீவனம் மட்டுமே அப்போதைக்கு கொடுத்துவிட்டு, மாலை ஆன பிறகு பசுந்தீவனங்களை தரலாம்.
(இரைப்பையில் உணவு குறைவாக இருக்கும்பட்சத்தில், குடலில் இருக்கும் புழுக்களை முழுவதுமாக வெளியேற்ற, இச்செயல்முறை உதவும்.)

பக்கவிளைவுகள் இல்லா, இயற்கை மரபுவழி செயல்முறைகளை கடைபிடித்து, நம் கால்நடை செல்வங்களை பேணிகாப்போம்.

*நன்றி.*
*அப்துல்காதர், மன்னார்குடி* .