கால்நடை

Agriwiki.in- Learn Share Collaborate
கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 1

Table of Contents

 

கேள்வி :

ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்?

பதில் :

ஆடு மற்றும் மாடுகள் பக்கத்து வயல்களில் சென்றும் மேயும் போது பிரச்சனை தான். இதனை தவிர்க்கும் விதமாக வீட்டுக்கு பக்கத்திலேயே அகத்தி செடி வளர்க்கலாம். பூவரம் செடி வளர்க்கலாம். கொடுக்கபுளி நன்றாக சாப்பிடும். அதனை எல்லாம் வளர்த்தால் பிரச்சனை இருக்காது. ஆட்டை கொட்டில் மாதிரி வைத்தும் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கும் போது குளம்பை சீவி வளர்க்கும் போது பிரச்சனை இருக்காது.

தற்போது ஆடுகளுக்கு என்று தீவனங்கள் வந்திருக்கின்றன. அவற்றை வாங்கி ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற அளவில் பிரித்துக் கொடுங்கள். மேலும் மூன்று மாதங்களுக்கான இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு என்று மருந்து மாத்திரைகள் கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி கொடுங்கள்.

அதிக ஆடுகள் வளர்க்கும் போது அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. தற்போது விவசாயிகள் ஆடு புழுக்கையை நல்ல உரமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆடு வளர்ப்பிலும் நல்ல லாபம் பெறலாம்.

கேள்வி :

ஆட்டுக்கு வயிறு ஊதி கொள்கிறது. இவ்வாறு வயிறு ஊதி, அசைப்போடாமல் சில ஆடுகள் மாண்டும் இருக்கின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?

பதில் :

ஆடுகளுக்கு வயிறு ஊதிப்போகும் போது கடலை எண்ணெய் 50 மில்லி கொடுங்கள். இந்த அளவு ஆட்டின் அளவை பொறுத்து கூட்டியும் குறைத்துக் கொள்ளலாம். 50 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று வயதுள்ள நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்கானது. சில ஆடுகள் இரவில் கத்திக் கொண்டே இருக்கும். பின்பு இறந்துவிடுவதற்கு காரணம் குடல்புழுவாகவும் இருக்கலாம். ஆகையால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று குடல்புழு நீக்கத்துக்கான மருந்தை பெற்று, ஆட்டுக்கு கொடுங்கள்.

கேள்வி :

ஆடு குட்டி போட்ட பின்பு, வாலில் புண் வருகிறது. அந்த புண்ணில் இருந்து புழுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி தடுப்பது?

பதில் :

புண் உள்ள இடத்தில் டர்பண்டைடு ஆயிலை ஊற்றவும். இரண்டு மூன்று நிமிடங்களில் புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். அதுபின்பு வேப்பண் கொழுந்து, கல் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து வையுங்கள். ஒன்றிரண்டு நாட்களில் நன்றாகி விடும்.

கேள்வி :

மழைக்காலத்தில் ஆடுகளுக்கு நீலநாக்கு நோய் வருகிறது? எவ்வாறு தடுப்பது?

பதில் :

ஆடுகளுக்கு வரும் நீலநாக்கு நோய்க்கு தடுப்பு ஊசி போட்டு தான் தடுக்க வேண்டும். இதற்கு மாற்று வழியே இல்லை.

கேள்வி :

சில ஆட்டுக்கு மூக்கு, ஆசன வாயிலில் ரத்தம் வந்து துடிதுடித்து இறந்து விடுகின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்?

பதில் :

இந்த நோய்க்கு அடைப்பான் நோய் என்று பெயர். இந்த நோய் கண்ட ஆட்டினை விற்கக்கூடாது குழித்தோண்டி புதைத்துவிட வேண்டும். இந்த நோய்க்கண்ட ஆட்டின் மாமிசத்தை உண்ணும் போது மனிதர்களும் பரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், இறந்த ஆட்டினை உடனே புதைத்து விட வேண்டும்.

கேள்வி :

செம்மறிகள் ஆடு குட்டி போடும் போது கஷ்டப்படுகின்றன. சில சமயங்களில் தாய் ஆட்டின் உயிரை காப்பாற்றினால் போதும் என்றாகி விடுகிறது? எதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?

பதில் :

சில தாய் ஆடுகளில் இடுப்பு எலும்பு சரியான முறையில் இல்லை என்றால் இது போல் பிரச்சனை வரும். இன்னும் சில வேளைகளில் கிடா சரியானதாக இல்லாமல் இருந்தாலும் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி :

நல்ல வெள்ளாடு இனத்தை வளர்க்கலாம் என்று இருக்கிறேன். ஒரிஜனல் வெள்ளாட்டு இனம் எங்கு கிடைக்கும்?

பதில் :

சென்னைக்கு செல்லும் வழியில் செங்கல்பட்டுக்கு அடுத்து காட்டாங்குளத்துர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை பண்ணை இருக்கிறது. இங்கு வெள்ளாட்டு ஒரிஜனல் ரகமான சமுனாபாரி ஆட்டை வளர்க்கிறார்கள். இந்த ஆட்டின் குட்டியை நீங்கள் வாங்கி வளர்க்கலாம். இதற்கு, இங்கு உங்களுடைய பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். ஆடு குட்டி போட்டு, சில நாட்களில் தகவல் கொடுப்பார்கள். அப்போது நீங்கள் சென்று வாங்கி சிறப்பாக வளர்க்கலாம்.

கேள்வி :

ஆடுகளுக்கு மார்கழி மாதங்களில் அதிகளவில் துள்ளு நோய் ஏற்படுகிறது. ஆடுகள் திடீரென்று துள்ளி விழுந்து இறந்துவிடுகின்றன. ஏற்கனவே இதனை தடுக்க தடுப்பூசி எல்லாம் போட்டு இருக்கிறோம். இருந்தாப்போதிலும் நோய் தாக்குகிறது. இதனை எப்படி தடுப்பது?

பதில் :

ஆடுகளுக்கு முறையான குடல்புழு நீக்கமும் செய்திருக்கிறீர்கள். கூடுதலாக நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறீர்கள். ஆனால் நோய் தாக்கம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். போட்டிருந்தால் பரவாயில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடல்புழுவுக்கு செய்திருக்கிறீர்கள். இருந்தாலும் வருகிறதா? கால்நடை மருத்துவரை அழைத்து ரத்தம் எடுத்து சோதனை சாலைக்கு அனுப்பி சோதனை செய்ய வேண்டும்.

பதிலளித்தவர் கால்நடை மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ.ஆர். தியாகராஜன்.