சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்
Agriwiki.in- Learn Share Collaborate

சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள் இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக் காட்டும் இடமாக மாறிவிட்டது. இலட்சங்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், நம் பண்டைய வாழ்வில் கட்டடம், இவ்வளவு தூரம் பணம் உறிஞ்சாது. இன்றைய நிலையில் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது குறித்து, நாம் விழிப்புணர்வு பெற வேண்டும்.

அகமதாபாத் நகரம், கட்டடக் கலையின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான லூயி கான், கபூசியர், சத்தீஸ் குஜரால் (முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜராலின் சகோதரர்), பாலகிருஷ்ண டோஷி போன்றோர் அங்கு மிகச் குறைந்த செலவிலேயே கட்டடங்களை உருவாக்கினர்.

போபாலில் நடைபெற்ற விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயில் பாலகிருஷ்ண டோஷி வீடுகட்டித் தந்தார்.

பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். லண்டன் கட்டடக் கலைஞரான லாரி பேக்கர், இது குறித்துப் பல ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார்.

காந்தியைப் பார்க்க இந்தியா வந்த இவர், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய கட்டடங் களை உருவாக்கத் தொடங்கினார். கேரளத் தலைமைச் செயலகத்தைக் கட்ட, கேரள அரசு, இவரிடம் நான்கு கோடி ரூபாய் கொடுத்தது. ஒரே கோடியில் கட்டி முடித்து, மூன்று கோடியை அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

திருவனந்தபுரத்தில் ஒரு பூசப்படாத வீட்டில் வசிக்கிறார். கட்டடக் கலையின் காந்தி என அழைக்கப்படும் இவரின் கருத்துகள், மிக முக்கியமானவை.

* சுவரை எழுப்பிவிட்டு, அதன்மேல் சிமென்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வண்ணம் (பெயின்ட்) ஆகியவை பூசத் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.

* நகரத்துக் கட்டடங்கள், கனசதுரமாகவே இருக்கும். சமதளமான கூரையைக் கொண்டவை. ஆனால் பழங்காலத்து வீடுகள், சரிவான கூரை கொண்டவை. அதன் மூலம் தண்ணீர் வழிந்து ஓடிவிடும்

* கடைக்காலிடும்போது வெட்டும் மண்ணை, வேறெங்கோ போய்க் கொட்டவேண்டாம். அதே கட்டடத்தின் ஜல்லிக் கலவைக்கே பயன்படுத்திக் கொள்ளலாம்.

* குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது.

* சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில் சுவருக்குப் பெயின்டுக்குப் பதில் தார் அடிக்கலாம்.

* 10 கி.மீ.-இல் என்ன கல் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம். தொலைதூரத்திலிருந் தெல்லாம் வரவழைக்கவேண்டாம். போக்குவரத்துச் செலவு குறையும்.

* மேசை-நாற்காலி போன்ற மரச் சாமான்களை அப்படியே பயன் படுத்தலாம். அதன்மேல் பெயின்ட் அடிக்கவேண்டாம்.

* மூலைச் சுவர்களை அலமாரி வைக்கப்பயன்படுத்தலாம். அங்கு சுவரின் வலிமை அதிகம்.

* வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி மட்டுமே கொத்தனார்கள் கவலைப்படுகிறார்கள். காற்றும் வெளிச்சமும் வரமுடியாமல் எல்லாத் திசையையும் அடைத்து விடுகிறார்கள். வடகிழக்கு-தென் மேற்குப் பருவக்காற்றுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டவேண்டும்.

– இவை அனைத்தும் லாரி பேக்கர் கூறும் யோசனைகள். இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

தொடரும்…….
உங்கள் ஆதரவுடன் ஹரி