சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்

சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்
Agriwiki.in- Learn Share Collaborate
சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்

சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பண்ணைக்குட்டை அமைப்பதால் உள்ள நன்மைகள்

இப்பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் உள்ள நன்மைகள் பின்வருமாறு:


1. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான லிட்டர்கள் கொள்ளளவுடன் அமைக்கப்படும் இக்குட்டைகளால் அவ்வப்போது கிடைக்கும் குறைந்த மழையின் மூலம் கிடைக்கும் நீரையும் சேமிக்க முடியும்.


2. பருவ மழைக்காலங்களில் அதிக அளவில் நீர்த் தேக்கப்படும்போது நீலத்தடிநீர் உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு நீண்ட காலத்திற்கு உறுதி செய்யப்படுவதால் முறையான பயிர் விளைச்சல் உறுதிப்படுத்தப்படுகிறது.


3. பெரும்பாலும் களிமண் உள்ள இம்மாவட்டங்களில் மண்ணில் ஈரப்பதம் நிலைத்திருக்கவும் அதனால் முறையான வேர் வளர்ச்சியுடன் வருமானம் கிடைக்க ஏதுவாகிறது.


4. நீண்ட வறட்சியால் உப்பாக நிலங்களும், நிலத்தடிநீரும் உப்பாக மாறிவரும் நிலையில் படிந்திருக்கும் உப்பைக் கரைத்து நகர்த்தி மண்வளம் காத்து விளைச்சல் பெருக வழியாகிறது.


5. முறையான அளவுள்ள இக்குட்டைகளை மீன்வளர்ப்புக்கு விவசாய பெருமக்கள் பயன்படுத்தி இரண்டாம் கட்ட உபரி வருமானம் பெருக வழி உண்டு.


6. கால்நடைகளுக்குத் தேவையான நீரினை வழங்குவதிலும் அதனால் கால்நடைப் பெருக்கத்தை உயர்த்தவும் செய்யலாம்.


7, ஆறுகளில் திறந்துவிடப்படும் உரி நீரை சேமிக்கவும் புயல் போன்ற சீற்றங்களின் போதும் ஆங்காங்கே பண்ணைக்குட்டைகளில் சேமிப்பதால் இயற்கை பேரழிவுகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.


8. இம்மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மரம் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில் இப்பண்ணைக்குட்டைகள் அதன் நிலைத்த வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.


9. அதிகப்பரப்பில் தரிசாக உள்ள பயனற்று விவசாயமின்றி உள்ள நிலங்களில் இப்பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் போது நல்ல விளைநிலங்களாக மாற வாய்ப்பு கிடைக்கிறது.


10. அனைத்துக்கும் மேலாக இக்குட்டையில் தேங்கி வைக்கப்படும் பல லட்சமுள்ள மழைநீர் விவசாயம் தொடர்ந்து செய்ய நம்பிக்கை அளிக்கும்.

இவ்வாறாக அதிகப்பலன் தரும் இப்பண்ணைக்குட்டைகளைப் பெற அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையை இன்றே அணுகவும்.

Sebastian Britto