சிறுதானியங்கள் – ஓர் அறிமுகம்

இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் எனும் பதிவில் மதிய உணவிற்கு சிறுதானியங்களினால் சமைத்த உணவை உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். சித்த மருத்துவர் திரு.சிவராமன் அவர்கள், ஆனந்த விகடனில் எழுதிய ஆறாம் திணை எனும் கட்டுரைத் தொடரை படிக்கும் வரை, எனக்கும் அதே கருத்து தான் இருந்தது. அந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியதும், வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்து கொண்டேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர்.

ஒரு முக்கியமான விசயத்தை, நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். உலகம் முழுவதிலும் வெவ்வேறு வகையான சிறுதானியங்கள் விளைகின்றன. எனவே உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.

 

சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள், முதலில் அவற்றின் வகைகளையும், ஒவ்வொரு வகையின் சத்துக்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் சிறுதானியங்கள் குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் அதிகம் காணப்படுகின்றது. எனக்குத் தெரிந்தவரை, https://millets.wordpress.com/ எனும் தளத்தில் சிறுதானியங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் தமிழில் முழுமையான தகவல்களுடன் எந்தப் பதிவும் காணப்படவில்லை. எனவே ஒரு சிறு முயற்சியாக, வெவ்வேறு புத்தகங்கள் மற்றும் ஆங்கில இணையதளங்களிலிருந்து, தகவல்களை இந்த வலைப்பூவில் தொகுத்துள்ளேன்.

ஆனந்தவிகடன் மூலம் சிறுதானியங்களின் பலன்களைப் பற்றி அறிந்து கொண்டதும் (2012 ஆம் வருடம்), முதலில் வரகை சமைத்துப் பார்த்தோம். அதன்பிறகு குதிரைவாலி, சாமை போன்ற மற்ற தானியங்களையும் பயன்படுத்தினோம். இருப்பினும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை விடாமல் தொடர்ந்து வந்தோம். சிறுதானியங்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டோம். இதற்கிடையில் 2013ஆம் ஆண்டு மே மாதம், இயற்கை வாழ்வியல் பணிமனையில் கலந்து கொண்டோம். அப்பொழுது, வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதில் எந்த விதமான நன்மையும் இல்லை என்பது புரிந்தது. எனவே, அந்தப் பணிமனைக்குப் பிறகு, வெள்ளை அரிசியை முழுவதுமாக நிறுத்தி விட்டோம். அதன் பின்னர், சிறுதானியங்கள், எங்கள் உணவில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து விட்டன.

நான் இந்த வலைப்பூவில், சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கும், கலவை சாத வகைகள் மற்றும் சிற்றுண்டி வகைகளின் செய்முறைகளை கூறியுள்ளேன். முதன்முதலில் சிறுதானியங்களை வைத்து சமைப்பவர்களுக்கு, உணவின் சுவை மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்த சில தயக்கங்கள் / சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றை நீக்குவதற்காகவே, இந்த உணவு செய்முறைப் பகுதி தரப்பட்டுள்ளது. நான் இந்த செய்முறைகளை, நல்ல சோறு நடத்திய சிறுதானிய சமையல் பயிற்சி முகாம்கள், சில இணையதளங்கள் மற்றும் ஜெயா தொலைக்காட்சியின் ‘ஆரோக்கிய உணவு’ நிகழ்ச்சி, ஆகியவற்றிலிருந்து கற்றுக் கொண்டேன். முதன்முதலில் சிறுதானியங்களை பயன்படுத்த விரும்புபவர்கள், கலவை சாத வகைகள் மற்றும் சிற்றுண்டி வகைகளை, சமைப்பது நல்லது. இதன் மூலம், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், இந்த சுவையை எளிதாக பழகிக் கொள்ள முடியும். பின்னர் வழக்கமான வெள்ளை அரிசி சாதத்திற்கு பதிலாக, சிறுதானியங்களை வைத்து வெறும் சாதமாக சமைக்கலாம்.

இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ள பெரும்பான்மையான சிறுதானிய உணவு செய்முறைகளில், எண்ணை பயன்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை வாழ்வியிலின் கருத்துப்படி, சமையலில் எண்ணை தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் முதன்முதலில் சிறுதானியத்திற்கு மாறுபவர்கள் எளிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வழக்கமாக சமைக்கும் முறைகளிலேயே தந்திருக்கின்றேன்.

புதிதாக சிறுதானியங்கள் வாங்குபவர்கள், பட்டைத் தீட்டப்படாத தானியங்களை மட்டுமே வாங்கவும். இது எனது பணிவான வேண்டுகோள். இத்தகைய பட்டைத் தீட்டப்பட்ட சிறுதானியங்கள் பெரிய கடைகள் மற்றும் ஒரு சில இயற்கை அங்காடிகளிலும் விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இவை அரசாங்கத்தினால் இயற்கை விவசாய சான்று தரப்பட்டுள்ள கம்பெனிகளிடமிருந்து விற்பனைக்கு வருகின்றன. இருப்பினும், பட்டை தீட்டப்பட்ட தானியங்களை உண்பது, அதே போன்ற வெள்ளை அரிசி சாப்பிடுவதற்கு சமம். எந்த பலனும் கிடைக்காது. எனவே, மிகவும் கவனமாக ஆராய்ந்து, உங்கள் பகுதியில் இருக்கும் நம்பிக்கை வாய்ந்த இயற்கை அங்காடிகளில் மட்டும் சிறுதானியங்களை வாங்கவும்.

சிறுதானியங்கள் என்றால் என்ன?

உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. மேலும் சிறுதானியங்கள், மிகவும் பழங்காலத்திலிருந்தே, மனிதர்கள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்றாகவும், தானிய வகைகளில் முதன்மையானதாகவும் உள்ளது.

சிறுதானியங்கள் குறுகிய காலப் பயிராகும். நிலத்தில் விதையைத் தூவியதிலிருந்து, குறைந்தது 65 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். இது அவற்றின் மற்றொரு தனிச்சிறப்பு. இத்தன்மை மக்கள் தொகை அதிகமுள்ள நிலப்பகுதிகளில் பயனளிக்கக் கூடியது. சிறுதானியங்களை, சரியான முறையில் சேமித்து வைக்கும் பொழுது, அவை இரண்டு அல்லது அதற்கு அதிகமான வருடங்களும் கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஏன் சிறுதானியங்களை உண்ண வேண்டும்?

  • ஊட்டச்சத்துக்கள்: இவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியவை. குளுட்டன் தன்மை அற்றவை. அமிலத்தன்மை அற்றவை. இவை எளிதில் செரிமானம் ஆகக்கூடியவை. இவற்றில், வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. பட்டைதீட்டப்பட்ட அரிசியைப் போல் அல்லாமல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் சீராக வெளியிடுவதால், சர்க்கரை நோய் உண்டாவதை குறைக்கிறது. அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதைக் காட்டிலும், பத்து மடங்கு அதிக அளவு கால்சியம் ராகியில் உள்ளது. மேலும்தகவல்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.

 

நெல், கோதுமை மற்றும் சிறுதானியங்களின் ஊட்டச்சத்துக்கள் கட்டமைப்பு அட்டவணை (100 கிராம்)

தானியம் புரதம் (கி) சர்க்கரை (கி) கொழுப்பு (கி) மினரல் (கி) நார்ச்சத்து (கி) கால்சியம் (மி.கி) பாஸ்பரஸ் (மி.கி) இரும்பு (மி.கி) தையமின் (மி.கி) நையசின் (மி.கி)
கேழ்வரகு 7.3 7.2 1.3 2.7 3.6 344 283 3.9 0.42 1.1
சோளம் 10.4 70.7 3.1 1.2 2.0 25 222 5.4 0.38 4.3
கம்பு 11.8 67.0 4.8 2.2 2.3 42 11.0 0.38 2.8
திணை 12.3 60.2 4.3 4.0 6.7 31 290 2.8 0.59 3.2
சாமை 7.7 67.0 4.7 1.7 7.6 17 220 9.3 0.3 3.2
வரகு 8.3 65.9 1.4 2.6 5.2 35 188 1.7 0.15 2.0
பனிவரகு 12.5 70.4 1.1 1.9 5.2 8 206 2.9 0.41 4.5
குதிரைவாலி 6.2 65.5 4.8 3.7 13.6 22 280 18.6 0.33 4.2
நெல் அரிசி 6.8 78.2 0.5 0.6 1.0 33 160 1.8 0.41 4.3
கோதுமை 11.8 71.2 1.5 1.5 2.0 30 306 3.5 0.41 5.1
  • சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு: சாகுபடிக்கு மிக குறைந்த நீராதாரமே போதுமானது. வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. விளைவிக்க எவ்விதமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்கள் தேவையில்லை. எனவே மண்ணும், உண்ணும் உடலும் மலடாவதில்லை. உற்பத்தி செலவு மற்றும் மின்சார உபயோகம் குறையும். அத்தகைய மானாவாரிப் பகுதிகளில் வாழும் விவசாயிகள், நீர் மற்றும் இரசாயனங்களை அதிகம் உறிஞ்சக்கூடிய  நெல் மற்றும் கோதுமை பயிர்களை, மிகவும் கஷ்டப்பட்டு விளைவிக்க வேண்டிய தேவை இருக்காது. பலவிதமான சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மண்ணின் பன்மயத்தன்மை (Bio-diversity) பாதுகாக்கப்படும். அரிசி, கோதுமை போன்ற பயிர்களை வலுக்கட்டாயமாக எல்லாவிதமான நிலத்திலும், காலநிலையிலும் பயிரிடத் தேவையில்லை.
  • சிறு விவசாயிகளின் நலன்: ஒட்டு ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள், நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் சிறுதானியங்களின் விதைகள் விவசாயிக்கே சொந்தம். இதனால், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

 

சிறுதானிய வகைகளும் அவற்றின் பிற மொழிப் பெயர்களும்:

ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு கன்னடம் மலையாளம்
குதிரைவாலி ஜங்கோரா பேர்ன்யார்ட் ஒடலு
கேழ்வரகு மண்டுவா ஃபிங்கர் ராகுலு ராகி கூவரகு
திணை கங்னி ஃபாக்ஸ்டைல் கோரா நவணே திணா
வரகு கொத்ரா கோடோ அரிக்கேலு ஹர்கா
சாமை குட்கி லிட்டில் சாம சாமே ச்சாம
கம்பு பாஜ்ரா பேர்ல் கண்டிலு சஜ்ஜே
பனிவரகு பாரி ப்ரஸோ வரிகுலு பரகு
சோளம் ஜோவர் சொர்கம் ஜொன்னா ஜோளா சோளும்

 

சிறுதானியங்கள் குறித்து எழும் பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்களும்:

சிறுதானியத்தை எப்படி சமைப்பது?

வழக்கமாக அரிசி, கோதுமையைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவுப் பதார்த்தங்களைப் போன்றே, வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை, கேழ்வரகு, கம்பு மற்றும் சோளம் தானியங்களிலும், உமியை நீக்கி விட்டு, அனைத்து விதமான பதார்த்தங்களையும் சமைக்கலாம். வெறும் சாதமாக சமைத்து, சாம்பார், குழம்பு, ரசம், மோர் ஊற்றியும் சாப்பிடலாம்.

சிறுதானியத்தை சமைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

சிறுதானியங்களை சாதமாக சமைக்கும் முன்னர், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும். சாதம் நன்கு குழைவாக வேண்டும் எனில், குக்கரில் சமைக்கவும். உதிரியாக வேண்டுமெனில், பாத்திரத்தில் சமைக்கவும். வரகு, குதிரைவாலி, பனிவரகு, சாமை, திணை முதலிய தானியங்களை சமைக்க, அவற்றின் அளவைப் போன்று 2 1/4 முதல் 2 1/2 மடங்கு நீர் தேவைப்படும். குக்கரில் சமைக்க 8 நிமிடங்களும், பாத்திரம் எனில் 10 நிமிடங்களும் ஆகும்.

கம்பு மற்றும் சோளத்தில் சாதம் செய்ய, குறைந்த பட்சம் 15 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். சமைப்பதற்கு 3 முதல் 4 மடங்கு வரை தண்ணீர் தேவைப்படும். சாதம் குக்கரில் வேக 20 முதல் 25 நிமிடங்கள் ஆகும். பாத்திரம் எனில், 40 அல்லது 45 நிமிடங்கள் ஆகும்.

மற்ற உணவு வகைகளான, ரொட்டி, இடியாப்பம், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை, சிறுதானிய மாவில் தயாரிப்பதனால், சமைக்க அதிக நேரம் தேவைப்படாது.

சிறுதானியங்களை யார் சாப்பிடலாம்?

சிறுதானியங்களை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நமது வீடுகளில் குழந்தைக்கு 6 மாதம் ஆன பிறகு, பொதுவாக கேழ்வரகு மாவில் இனிப்புக் கூழ் செய்து சாப்பிடக் கொடுப்பது வழக்கம். அந்த வழக்கம் குழந்தை சற்று வளர்ந்ததும், தாய்மார்களால் நிறுத்தப்பட்டு விடுகிறது. அதேபோன்று, வயதான பின்பு மருத்துவர்களின் அறிவுரையின் படி, சர்க்கரை நோயாளிகள் மட்டும், (விருப்பமில்லாமல் / வேறு வழியில்லாமல் / வேண்டாவெறுப்பாக) அவ்வப்போது உண்ணக்கூடிய ஒரு தானியமாக கேழ்வரகு மாறிவிட்டது. மற்ற அனைத்து சிறுதானியங்களையும் நாம் முற்றிலும் ஒதுக்கி (கிட்டத்தட்ட மறந்து) விட்டோம். சிறுதானியங்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பறவைகளுக்கான உணவாக மட்டும் ஆகி விட்டது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் ஒன்றாகக் கலந்து விட்டமையால், இன்றைக்கும் அவர்கள் கேழ்வரகு, கம்பு மற்றும் சோள தானியங்களை மட்டும் அன்றாட உணவில் சேர்த்து வருகின்றனர்.  இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். மேலேக் குறிப்பிட்டது போல, சிறுதானியங்கள் எல்லா வயதினரும், எல்லா பருவகால நிலைகளிலும் உண்ணக் கூடியதே. அவரவர் வசிக்கும் நிலப்பரப்பில் விளையக்கூடிய தானியங்களை உண்பதே சிறந்தது. நம்மில் பலருக்கும் கம்பு உடலுக்கு குளிர்ச்சி, கேழ்வரகு சூடு என்கின்ற கருத்து உள்ளது. எனவே நமது பகுதிகளில் கம்பை வெயில் காலத்திலும், கேழ்வரகை குளிர் காலத்திலும் மட்டுமே அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் வட மாநிலங்களில், கம்பு உடலுக்கு சூடு தரும் என்று குளிர் காலங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையானது, ஒவ்வொரு பருவ நிலைக்கும், மனிதர்களின் உடல் நலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வகையிலான பயிர்களை மட்டுமே, அவரவர் வாழும் பகுதிகளில் விளைவிக்கின்றது. எனவே இந்தப் பொருள் குளிர்ச்சி, அந்தப் பொருள் சூடு என்று எந்த தானியத்தையும், காய்கறிகளையும், பழங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. ஒருவேளை உங்களில் சிலருக்கு, அந்தந்த பருவகாலத்தில் விளையும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடல் நலத்தில் மாற்றம் ஏற்படலாம். இதற்கான காரணத்தை இயற்கை வாழ்வியல் கருத்துக்களின் மூலம் அறிந்து கொள்ளவும்.

குழந்தைகளை எப்படி சிறுதானிய உணவுகளுக்குப் பழக்கப்படுத்துவது?

குழந்தைளுக்கு சிறுதானிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த வேண்டுமெனில், முதலில் வீட்டில் உள்ள பெரியவர்கள் அதனை சுவைத்துப் பழக வேண்டும். தற்சமயம் வீடுகளில், பெரும்பாலானத் தின்பண்டங்கள் அரிசி அல்லது மைதா மாவுகளைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அதனால் நாம் அனைவரும் வெள்ளை நிற உணவுகளையே சாப்பிட்டுப் பழகி விட்டோம். ஆனால் சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதால், நம் மனங்களால் அவற்றை உடனடியாக உண்பதற்கான ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆதலால் சிறுதானிய உணவுக்கு மாற விரும்புபவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஒருநாளில் ஏதாவது ஒருவேளை உணவில் மட்டும் என்று சிறுதானியத்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு முதலில் சிறுதானிய தின்பண்டங்களை சாப்பிடக் கொடுப்பது நல்லது. அவர்களுக்கு அந்தச் சுவை பிடித்தமானதாகி விட்டால், பின்னர் கலவை சாதங்களை அறிமுகப்படுத்தலாம். குழந்தைகள் ஒருமுறை சாப்பிட்டு விட்டு, அவர்களுக்குப் பிடிக்காமல் போனால், அதற்காக முற்றிலுமாக சிறுதானியத்தை நிறுத்தி விடுவது நன்மை தராது. குறைந்த பட்சம் பெரியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளும் சிறிது சிறிதாக அவற்றின் மீது விருப்பம் கொள்வார்கள். சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்கள் மட்டுமன்றி தனித்தன்மையான சுவையும் கொண்டவை. ஒருமுறை இவற்றை சுவைத்துப் பார்த்த பின்னர் வெள்ளை நிற அரிசி மற்றும் மைதாவினால் ஆன உணவுப் பண்டங்களின் மீது நமக்குள்ளப் பற்றுத் தானாகவே குறைந்து விடும்.

சிறுதானியங்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகுமா?

சிறுதானியங்களில், பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் கோதுமையைக் காட்டிலும், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவற்றை உண்டபின், மிக சீரான அளவில் இரத்தத்தில் சர்க்கரையை வெளியிடுகின்றன. குறைந்த அளவே அமிலத் தன்மை உள்ளதால், உடனடியாக பசிக்காது. எனவே சாதாரணமாக வெள்ளை அரிசி சாதம் சாப்பிடும் அளவைக் காட்டிலும், அதில் பாதி அளவு சிறுதானிய உணவு உண்டாலே போதுமானது. அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடியத் தேவை இல்லை. இந்த அடிப்படையான கருத்தைத் தவறாகப் புரிந்து கொள்வதனால், நம்மில் பலர் சிறுதானியங்கள் செரிமானம் ஆவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதாக நம்புகின்றோம்.

சிறுதானியங்கள் ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன?

தற்பொழுதுக் கடைகளில் விற்கப்படும் சிறுதானியங்களின் (கம்பு, சோளம் மற்றும் கேழ்வரகு தவிர) விலை, பட்டைதீட்டப்பட்ட அரிசி, கோதுமை இவற்றின் விலைகளைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருப்பது உண்மை. இதற்கு முக்கியமான காரணம், பசுமைப் புரட்சி விவசாயிகளிடத்தில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். இந்தியா தனது பாரம்பரிய உணவு தானியங்களை விளைவிப்பதை நிறுத்தி விட்டு, ஒட்டு ரக நெல், கோதுமை உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட சிறுதானியங்களை மறந்து விட்ட நிலையில், தற்பொழுது அவற்றின் சிறப்புகளை மீண்டும் உணர ஆரம்பித்துள்ளனர். நமது பாரம்பரிய தானியங்கள் வெகு சில விவசாயிகளால் மட்டும் விளைவிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி குறைவாக இருப்பதினால், அவற்றின் விலை சற்று அதிகமாக உள்ளது. நுகர்வோர்களாகிய நாம் நம் அன்றாட உணவில் அதிக அளவில் சிறுதானியங்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டால், அவற்றின் உற்பத்தி அதிகரிக்கும். அவற்றின் விலையும் தானாகவே குறைந்து விடும்.

அரிசி உணவில் பாதி அளவு சிறுதானிய உணவு உண்பதே போதுமானது. அவ்வகையில் பார்க்கப் போனால், 2 கிலோ பட்டை தீட்டப்பட்ட அரிசியின் விலைக்கு, 1 கிலோ சத்தும் சுவையும் மிகுந்த சிறுதானியத்தை வாங்கினால் போதும். மேலும் பட்டை தீட்டப்பட்ட அரிசியை உண்பதனால் ஏற்படும் சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற விளைவுகளுக்கு செய்யப்படும் மருத்துவ செலவு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. எனவே சிறுதானியங்களின் விலை தற்சமயம் அதிகமாக இருந்தாலும், அவற்றால் நமக்கு ஏற்படும் பலன்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உண்மையில் நாம் பணத்தை மிச்சப்படுத்தவே செய்கிறோம்.

பாரம்பரிய அரிசி வகைகள்:

சிறுதானியங்களைப் போலவே, அதிக சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த, நம் அனைவராலும் மறக்கடிக்கப்பட்ட தானியங்கள் தான் நமது பாரம்பரிய அரிசி வகைகள். இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இப்பொழுது அழிக்கப்பட்டு விட்டன. திருமதி.சங்கீதா ஶ்ரீராம் எழுதிய பசுமைப் புரட்சியின் கதை எனும் புத்தகத்தில் இது குறித்த முழுமையானத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

 

நாம் இதுவரை சிறிதானியங்கள் குறித்து மேலேப் படித்த அனைத்துக் கருத்துக்களும், பாரம்பரிய அரிசி வகைகளுக்கும் பொருந்தும். தற்பொழுது தன்னார்வமிக்க விவசாயிகள் சிலரால் நாடு முழுவதிலும் உள்ள, பாரம்பரிய அரிசி ரகங்களின் விதைகள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

compiled from : https://passionsandpractices.blogspot.in/2015/03/sirudhaaniangal-arimugam.html