சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்

சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்
Agriwiki.in- Learn Share Collaborate
சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்:

2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம்..
காரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று..

சரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம்..

ரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம். (ஹைட்ரோ அல்லது சல்பூரிக்)
ஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை..

காரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று..

2010 லிருந்து அமிலம் விட்டு சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்வதை நிறுத்தி
சுத்தமான நாட்டு கோமியம், EM திரமி என்று பாசன நீரில் கலந்து விட ஆரம்பித்தேன்..
ஏற்கனவே ரசாயன உரங்களை தண்ணீரில் விட்டதாலும் கிணற்று நீரின் உப்பு தன்மை அதிகமானதாலும் குழாய் ஓட்டைகள் அவ்வளவாக சுத்தமாவில்லை..

ஒரு கட்டத்தில் சொட்டுநீர் குழாய் கம்பெனிகாரர்களை அழைத்து பார்த்த போது “இதை நீங்க அமைத்து பணிரெண்டு வருஷம் ஆனதால் பெரும்பாலான தூவரங்களும் அடைச்சிடுசுங்க,
அதனால இதை கழட்டி வீசிவிட்டு புது டியூப் போடறதை தவிர வேறு வழி
இல்லை “என்றனர்..

“சரி எவ்வளவு ஆகும்ங்க?

கணக்கு போட்டார்கள்..
மீட்டருக்கு ஒரு டியூப் என்பதால் ஏக்கருக்கு முப்பதாயிரம் வரும் ங்க ..
அப்போ இரண்டு ஏக்கருக்கு அறுபதாயிரம்

சரி நான் யோசித்து சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டேன்..

உட்புறமும், வெளிபுறமும் சொட்டுநீர் குழாயில் உள்ள உப்பு படிவத்தை நீக்க வேண்டுமென்றால் ஆசிட் விடுவதை தவிர வேறு வழியில்லை ..
ஆசிட் விட்டால் நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு அதிகம் ..

இதை செய்யலாம்னா அறுபதாயிரம் ரூபாய் செலவு செய்து குழாயை மாற்ற வேண்டும்
என்று சிந்தித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன்..

சரி இன்னொரு முறை ஆசிட் வாங்கி வேறு வழியில் சுத்தம் செய்யலாம் என்ற பல நண்பர்களின் ஆலோசனை கேட்டேன்..

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள்..

சரி நாமே ஒரு புது முயற்சியில் இறங்கலாம் என்று சொட்டுநீர் குழாய்களை சுருட்டி ஓர் இடத்தில் அடுக்கினேன் வெள்ளாமை இல்லாத நிலத்தில்..

காடு ஏகமும் அமிலம் போனால்தானே மண்ணுக்கு கெடுதல் என்று..

2” (2 இஞ்ச்) PVC குழாய் இருபது அடி (ஒரு லென்த்)
PVC குழாய் முடியும் இடத்தில் இரண்டு பக்கமும் மூன்று அடி உயரம் கொண்ட
“V “வடிவ கால்களை நட்டி அதில் இரண்டு இஞ்ச் பைப்பை கயிற்றால் கட்டி அதில் முக்கால் பங்கு நிறையும் அளவுக்கு (ஹைட்ரோ) ஆசிட்டை ஊற்றினேன்..

ஐந்து ஐந்து சொட்டு நீர் குழாய்களை எடுத்து ஒரே நேரத்தில் PVC பைப்புக்குள் உள்ளே விட்டு மெதுவாக மறுபுறம் உறுவி அதை அப்படியே இரண்டு நாள் வெயிலில் உலர விட்டேன்..

இப்படி செய்யும் போது ஆசிட் சொட்டு நீர் குழாய் முழுவதும் நனைந்து வெளியே வந்தது..
இரண்டு முறை அதாவது பத்து குழாய்களை ஆசிடில் நனைத்து விட்டால் அடுத்த முறை குழாயை நனைக்கும்  போது குறைந்துள்ள ஆசிட்டை கொஞ்சம் PVC ல் ஊற்றி விட்டேன்..

இப்படி செய்ததில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கேன் (சுமார் முப்பத்தி ஐந்து லிட்டர்) ஹைட்ரோ ஆசிட், பத்து ஆண் ஆட்கள் தேவைபட்டது..

எல்லா பணியும் முடித்து இரண்டு நாள் கழித்து சொட்டு நீர் குழாயை வெள்ளாமை காட்டில் பொருத்தி தண்ணீரை எடுத்து விட்டு ஒரு மணி நேரம் ஓடவிட்டு
(End cap) கழட்டிவிட்டு பார்த்த போது படிந்திருந்த உப்பு படிவங்கள் வெளியே வந்தது..

பிறகு End cap யை அடைத்து நீர் பாய்ச்சிய போது எல்லா தூவரங்களிலும் சீராக நீர் வடிந்தது..

ஆக, ஒரு ஏக்கர் சொட்டு நீர் குழாய் உப்பு நீக்க,
ஆட் கூலி 3,000
ஆசிட் 1,000
ஒரு லைன்த்
பிவிசி பைப் 300 என்று 4,300 ரூபாயில் சொட்டுநீர் குழாய்களை புதிப்பித்துக்கொண்டேன்..

இயற்கை வழி விவசாயத்தில் நன்கு சிந்தித்து பயிர் செய்து
இது போல செலவை குறைத்து
வரவை கூட்டினால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும் என்பது எனது கருத்து..

மேலும் இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால்
89034 69996 என்ற எண்ணில் அழைக்கலாம்..

நன்றி ..
வாழ்த்துக்கள்..
திருமூர்த்தி