தண்ணீர் பரிசோதனையின் அவசியம்

Agriwiki.in- Learn Share Collaborate
தண்ணீர் பரிசோதனையின் அவசியம்

விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு. எனவே தவறாமல் பாசனத்தண்ணீரையும் பரிசோதிக்க வேண்டும்.

தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.

நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது.

மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும். எனவே பாசனத் தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. அதை பற்றி இங்கு காண்போம்.

பம்பு குழாயிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் முறைகள் :

அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு தண்ணீர் இறைத்த பின் நீர் மாதிரி எடுக்கவும்.

சுமார் அரை லிட்டர் அளவுக்கு நீர் மாதிரி எடுக்கவும். நீர் மாதிரி எடுக்கும் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும்.

காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும். சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும்.

அதில் ஒரு லிட்டர் தண்ணீரை சேகரித்து மூடி போடவேண்டும். நீர் மாதிரி எடுத்த பாட்டிலில் அடையாள குறியிடவும்.

நீர் மாதிரி எடுத்தவுடன் பரிசோதனை செய்ய அந்தந்த மாவட்ட மண் ஆய்வு கூடத்தில் அல்லது வேளாண் அறிவியல் மையத்திற்கு எடுத்துச் செல்லவும்

கிணற்றிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் முறைகள் :

பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும்.

பம்பு செட் உள்ள கிணறாக இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு தண்ணீர் இறைத்த பின் நீர் மாதிரி எடுக்கவும்.

கிணற்றில் சேகரிக்கும்போது கிணற்று சுற்றின் ஓரப்பகுதியில் நீரை எடுக்கக்கூடாது, கிணற்றின் மையப்பகுதியில்தான் நீரை எடுக்க வேண்டும்.

பாசன நீர் மாதிரியுடன் :

விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், முன்பு சாகுபடி செய்த பயிரின் பெயர், அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர், நீர் சேகரித்த இடம் (கிணறு, குளம், ஏரி, அணை) விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பு :

பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.

பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் அல்லது வேளாண் அறிவியல் மைய வல்லுனர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.