தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13

தற்சார்பு விவசாயி செங்குத்து அச்சு காற்றாலை
Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு விவசாயி — அத்தியாயம் 11

Alwar narayanan

மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump).

இத்தனை காலம் பல்வேறு வடிவ மாறுதல்கள் செய்து எளிதாக கிடைக்கும் உபகரணங்களை கொண்டு சுலபமாக ஒரு சைக்கிளை போல பராமரிக்கும் படியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதனை நிறுவி, காற்றின் உதவியுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்ற முடியும் . படத்தில் காண்பது பலவிதமாக உருமாற்றம் பெற்ற சோதனைக் கருவி. இதன் செயல் வடிவம் இதைவிட அழகாகவும் பெரிதாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

சாதாரணமாக தண்ணீர் இறைக்க சந்தையில் விற்கப்படும் காற்றாடிகள் வாங்க 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை தேவைப்படும். இதனால் ஆசை இருந்தாலும் வசதி வாய்ப்புகள் இல்லாமல் சிறு குறு விவசாயிகளால் வாங்க முடிவதில்லை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அதை சோலார் வாங்க போட்டுவிடுகிறார்கள்.

நம்முடைய போட்டியே இப்போது மானியத்தில் கிடைக்கும் சோலார் மற்றும் மின்சார பம்புகளோடு தான். பார்ப்போம் !.

ஆகவே குறைந்த செலவில், தரை மட்டத்தில் பழுதுபார்க்கும் அளவில் எல்லோரும் வாங்கி உபயோகிக்கும் அளவில் இதை வடிவமைத்திருக்கிறேன். இதற்கு ஆகும் செலவு 30000 ரூபாய்தான்.

விரும்புபவர் பணத்தை அனுப்பி பதிவு செய்து கொண்டால் இதனைத் தயாரித்து அனுப்ப முடியும். முடிந்தால் நீங்களும் தயாரித்து கொள்ளலாம் (இது அனைவருக்கும் சமர்ப்பணம்).

இப்போதைக்கு இலைகளும் கிளைகளும் அசையும் அளவு காற்று இருந்து இருந்தால், 30 அடியிலிருந்து, தண்ணீரை இறைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் போகப்போக குறைந்த காற்றில் இயங்கவும், அதிக தண்ணீரை இறக்கவும் வேண்டிய மாறுதல்கள் செய்து கொண்டே இருப்போம். விலையும் குறையும்.

அதிக எண்ணிக்கையில் அதாவது, ஆயிரக்கணக்கில் இதனை தயார் செய்து விவசாய நண்பர்களுக்கு அனுப்ப முடியும். சொந்த வீட்டின் மாடியிலும் இதனைப் பொருத்தி கிணற்றிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு சேர்ந்தலாம் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் முதலில் தயாரிக்கப்படும் 10 எண்ணிக்கைகள், பொருளாதார அடிப்படையில் இந்த சோதனையை தொடர்ந்து செய்து உருவாக்கம் செய்ய மிக முக்கியம்.

இந்த காற்றாடியின் முக்கிய பாகங்கள் வருமாறு:

a) காற்றாடியின் சிறகுகள். தேவைக்கு ஏற்ப அளவில் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும்.

b) குழாய் இணைப்புகள். வேண்டிய உயரத்திற்கு இதனை இணைத்துக் கொள்ள முடியும்

c) பல்லிணைப் பெட்டி. அதாவது கியர்பாக்ஸ். இது செங்குத்து காற்றாடியின் விசையை பக்கவாட்டில் திரும்புவதற்கு பயன்படும்

d) அடி பம்பு. இது தண்ணீர் இறைக்க பயன்படும். இதன் அளவிலும் தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்துகொள்ளலாம்.

எத்தனையோ நாட்களாக வடிவத்தில் மாற்றங்கள் செய்து வேலை முடிந்து ஓடவிட்டு உள்ளதால் ஆர்வத்தில் இந்த பதிவு. மேலதிக விவரங்கள் மற்றும் செய்முறை அனுபவங்கள் பிறகு பதிவிடப்படும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு மாற்றமும் முதலில் தொடங்கிய சிக்கலான வடிவமைப்பிலிருந்து எளிதான வடிவமைப்பை நோக்கி கொண்டு சென்றது. வாழ்க்கை எளிமை தானே !

— வளரும்
#தற்சார்புவிவசாயி