தற்சார்பு விவசாயி — அத்தியாயம் 11 எந்திரங்கள்
ஒவ்வொரு முறையும் மஞ்சள் நிற ஜேசிபி எந்திரத்தை பார்க்கும் போதும் மனதில் சில சிந்தனைகள் மேலோங்கும். இது மனித குல வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது வளர்ச்சி என்ற பெயரில் சுயநலமான மனிதனால் இயற்கையை பிளந்து உருக்குலைக்கும் எந்திரமா என்று.
இதன் தொடர்ச்சியாக யோசித்துப் பார்த்ததில் வல்லரசு ஆக வேண்டிய இந்தியாவில் சிறு குறு தொழில்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதும் மென்மேலும் தொழில்நுட்பங்கள் இறக்குமதி ஆவதும் ஏன் என்று விளங்கியது. சிந்தனை தொடரின் முடிவில் தெள்ளத்தெளிவாக இரண்டு வகையான எந்திரங்களை அடையாளம் காண முடிந்தது.
கனமான உதிரி பாகங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஆங்காங்கே சேர்க்கப்பட்டு இயங்கும் இயந்திரங்கள். இவை மலிவானவை அழகில்லாதவை, திறமை குன்றியவை ஆனால் கிட்டத்தட்ட நினைக்கும் எல்லா வேலைகளையும் திறம்பட செய்யும் வலிமை பெற்றவை. ஒரே இயந்திரத்தை பல வேலைகளுக்கும் உபயோகிக்கலாம்.
வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் இயந்திரங்கள் அழகானவை திறமை கூடியவை. ஆனால் அவை விலை கூடியவை மட்டுமல்லாது இந்த இயந்திரங்களை பழுது பார்க்கவும் வேண்டியபடி வேலைக்கு சேர்க்கவும் இயலாது. அதாவது ஒவ்வொரு வேலைக்கும் ஒரு இயந்திரத்தை வாங்க வேண்டும். பழுதானால் பெரும் பொருட்செலவில் செப்பனிட வேண்டும் அல்லது முற்றிலும் புதிதாக மாற்ற வேண்டும்.
நான் பார்த்தவரை kirloskar டீசல் இன்ஜின் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் பயன்படுகிறது. அது மெட்ரோ சாலை விரிவாக்கம் ஆகட்டும் விவசாய வேலைக்கு தேவையான நீரை இறைப்பது ஆகட்டும் பாறைகளை குடைந்து ஆகட்டும் அல்லது பொழுதுபோக்குக்கு வேண்டிய ராட்சத குடை ராட்டினத்தை சுற்ற வைப்பது ஆகட்டும். அதேபோல கடல் காற்று நீரில் சுலபமாக இயங்கும் இயந்திரங்கள், ஏழைகளுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் கரும்புச்சாறு பிழியும் இயந்திரங்கள், மாவு திரிக்கும் மிஷின்கள் என்று நூற்றுக்கணக்கான உபயோகத்திற்கு உள்நாட்டு தயாரிப்புகளே கைகொடுக்கின்றன
இதனோடு ஒப்பிடும்போது இறக்குமதி செய்யப்படும் மிட்சுபிஷி, ஹோண்டா போன்ற எந்திரங்கள் ஒரே ஒரு வேலைக்கு மட்டுமே பயன்படும். ஜெனரேட்டர் என்றால் அதற்கு மட்டும் தான். தற்போது விதவிதமான ஜெனரேட்டர்கள், மோட்டார்கள், பம்பு செட்டுகள், டிராக்டர்கள் சைனாவில் இருந்து இறக்குமதி ஆகின்றன. இவை ஒரே வேலையை மட்டும் திரும்பத் திரும்பச் செய்வதால் வேறுவேலைக்கு உபயோகப்படுத்த முடியாது. நம்முடைய நீண்ட கால முதலீடு வீணாகும். பயன்படுத்தியபின் பழுதாகி போனால் தூர எறிய வேண்டியதுதான்.
இதனால்தான் வாடகை கார்கள், ஆம்னி பேருந்துகள் போன்ற சர்வீஸ் துறைகளில் வளர்ச்சியும் மற்ற நெசவு போன்ற உற்பத்தி துறைகளில் தேய்மானமும் ஆகிறது. இன்று வெறும் அரிசி ஆலை வைப்பதற்குக்கூட கற்பனைக்கெட்டாத முதலீடு தேவைப்படுகிறது.
வட இந்தியாவில் குஜராத்தில் ராஜ்கோட் என்ற இடத்தில் சாலையோர கடைகளில் கூட மலிவு விலையில் இன்ஜின்களை உற்பத்தி செய்து வந்தனர். அதேபோல தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் பிரசித்தி பெற்றது. இன்றைக்கு அந்த சந்தைகளை குறிவைத்து வெளிநாட்டு கம்பெனிகள் குப்பைகளை இறக்குமதி செய்து முடக்கிவிட்டன. அரசாங்கத்தின் கொள்கைகளும் சிறு குறு தொழில்களை நசிக்கும் வண்ணமே உள்ளன.
பல லட்சக்கணக்கில் வினியோகிக்கப்பட்ட அம்மா மிக்சி கிரைண்டர்கள் சைனாவில் இருந்து இறக்குமதி செய்யாமல் கோயம்புத்தூரில் செய்திருந்தால் இன்னமும் வேலை செய்திருக்கும். அதேபோல சர்தார் சிலையை நம் பிஹெச்இஎல் மூலம் செய்து வார்ப்பு எடுத்திருந்தால் இந்த கட்டமைப்புகள் முதலில் கடினமாக இருந்தாலும் மேலும் சிலைகள் செய்வதற்கு ஏதுவாக இருந்திருக்கும். இதேபோலத்தான் சோலார் பேனல் களும் தற்போது சைனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன.. இவற்றை அரசாங்கம் உள்நாட்டில் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொன்றாக இப்படி செய்யும்போதுதான் பெரிய தொழில்களும் சிறிய தொழில்களும் வளர்ச்சி அடையும். இன்றைக்கு தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் ரூபாய் செலவழித்து கனரக வாகனங்களையும் ஜேசிபி எந்திரங்களையும் கிரேன் போன்ற எந்திரங்களையும் விமானங்களையும் வெளிநாட்டிலிருந்து வாங்குகிறார்கள். மருத்துவத் துறையிலும் எந்திரங்கள் பெரும் பொருட்செலவில் வாங்கப்படுகின்றன. இந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் வாடகை வசூலிக்கப்படுகிறது. அதாவது ஜேசிபி புல்டோசர் combine harvester போன்றவைகள் மிக அதிக வாடகையில் வருவதால் உருப்படியான வேலைகளை செய்ய முடியவில்லை.
இதற்கு மாறாக இந்திய தயாரிப்புகள் பாதி எந்திர மையமாகவும் பாதி உடல் உழைப்பின் மூலமாகவும் வேலை செய்வதால் மிகக் குறைந்த முதலீட்டில் அல்லது வாடகையில் பலவிதமான வேலைகளை செய்து முடிக்க முடியும்
தாம் தன்னிறைவு, தற்சார்பு மற்றும் தாளாண்மை பெறவேண்டுமென்றால் இந்திய இயந்திரங்களையும் உதிரிபாகங்களையும் வாங்கி அதை உள்ளூர் மெக்கானிக்கல் மூலம் இயக்கி பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் சாமானியர்கள் இயந்திரங்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பட விளக்கத்துடன் காண்போம்
— வளரும்
#தற்சார்புவிவசாயி