தற்சார்பு விவசாயி-2 தன்னுரிமை தற்சார்பு தாளாண்மை

Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு விவசாயி : அத்தியாயம் 2  (தன்னுரிமை, தற்சார்பு, தாளாண்மை)

சென்ற பதிவில் நிறைய பேர் வாழ்த்து சொல்லி இருக்கின்றனர் மிக்க நன்றி. “தன்னுரிமை, தற்சார்பு, தாளாண்மை” இந்த அருமையான பொருத்தமான பதங்களை சுகி உதயகுமார் பின்னூட்டத்தில் பதிவு செய்திருந்தார்.  (முதல் அத்தியாயம் )

நான் வடிவமைத்து இருப்பது தற்சார்புடன் ஆன “அங்கக பல்லுயிர் தோட்டம்“. இதை சிலர் இப்போதுதான் நான் தொடங்குவது போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது என்னுடைய வார்த்தை குறைபாட்டால் விளைவித்த ஒரு குழப்பமேயன்றி வேறில்லை. உண்மையில் பல நிலைகளில் தோட்டத்தில் வேளாண்மை சிறு அளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கே இருவரை நியமித்து இருக்கிறேன். அவர்களின் வேலை வாய்ப்புக்காக கம்பெனி ஓடிக்கொண்டிருக்கிறது.

கந்தன் சாதுவானவர். செல்போன் பேச தெரியாது. சைக்கிள் ஓட்டத்தெரியாது. பஸ் ஏறுவதற்கு கூட பயம்.
ஆளைவிடுங்கள் என்று நடந்துபோய்விடுவார். சுப்பு ஒரு ஆல் -இன் -ஆல் அழகுராஜா. கேபிள் ஆபரேட்டர். அப்பா விவசாயம். அவர்தான் நான் சொல்வதை செயல்படுத்துபவர்.

இந்த தோட்டத்தை “கம்பேனி” என்று நாச்சங்குளம் கிராமத்தில் செல்லமாக அழைப்பார்கள். ஒருநாள் பிரதான நுழைவு கதவை கட்ட அஸ்திவாரம் போடும்போது ஒரு லாரி நின்றிருக்கிறது. எனது நண்பனின் இன்னொரு பெரிய லாரியும் சும்மா பக்கத்தில் நின்றிருக்கிறது. இந்த அடாவடியை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு எதோ கம்பெனி வருகிறதென்று அவர்களாகவே முடிவிடுத்துவிட்டார்கள். செடிகள் வளர்ந்தபிறகும் பெயர் மட்டும் நிலைத்துவிட்டது.

சிறிய அளவில் பழங்கள் காய் கனி என்று எல்லாவற்றையும் விளைவித்து சோதனை செய்து வருகிறோம்.
நீங்கள் தோட்டத்திற்கு வந்தால் ஓடியாடி சுவையான பழங்களை சேகரித்து இந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து அதை அலம்பாமல் அப்படியே உண்ணலாம். ஆனால் சந்தைக்கு எடுத்துச் செல்லும் அளவு கட்டுப்படியாகவில்லை. செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு பரம ஏழை விவசாயி, ஒவ்வொரு நிலையிலும் எவ்விதம் சுருக்கமாக உணவு உற்பத்தி செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்து வருகிறேன். பெரிதாக கையை கடிப்பதில்லை. கைச்சுருக்கத்துக்கு வீட்டுக்காரம்மாவும் ஒரு காரணம்.

சிலருக்கு ஏற்கனவே நிலம், மின்சாரம், கிணறு பெற்றோரிடமிருந்து கிடைத்து இருக்கும். நானோ வெறும் பொட்டல் காட்டை வாங்கி விவசாயத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாத நிலையில் “ஆ” வன்னாவிலிருந்து துவங்கினேன். பதிவு நிலம் சரியாக எங்கிருக்கிறது என்றுகூட தெரியாமல் சர்வே அளக்கும் வரை எங்கேயோ காட்டில் நின்றுகொண்டு வண்ணமாக கற்பனைசெய்த நாட்கள் பல.

அதன்பிறகு கிராமத்து ஒற்றையடி பாதைகளுக்கும் , நடுகற்களுக்கும், பக்கத்து தோட்டத்து முரட்டு வீணர்களுக்கும் நிலத்தை வேலி அமைக்கும்போது விட்டுக்கொடுத்து உருவாக்கியது. பிட்டு பிட்டாக வாங்கிய நிலத்தை ஓட்டுப்போட்டு பட்டா மாற்றிய அனுபவத்தை கதையாகவே எழுதலாம். எழுதியும் இருக்கிறேன்.

நான் விவசாயம் செய்யவில்லை. செய்தால் பொருத்தமாக இருக்காது.

கணினி துறையில் 30 ஆண்டுகள். பிரச்னைக்கு தீர்வு காண்பது என் வேலை. அதுபோக அறிவியல் ஆர்வம். எஞ்சினியர் கிடையாது. படித்தது இளங்கலை கணிதம். வீட்டில் ஏகப்பட்ட இரும்பு உபகரணங்கள். சொந்தமாக பட்டறை அமைக்க கனவு. மூளை இன்னும் துருபிடிக்கவில்லை.
ஒரு குறு விவசாயி விவசாயம் செய்ய, தன்னிறைவு அடைய வேண்டி என்னென்ன செய்யலாம் என்று சிந்திப்பது, செயல்படுத்துவது – இதுதான் இப்போது நான் செய்துவருவது. இனிமேலும் செய்யப்போவது.

கடுமையான வெப்பத்தில், தண்ணீர் தட்டுப்பாட்டில், மின்சாரமில்லாமல், மண் வளமையில்லாமல், காசு செலவு செய்யாமல், விவசாயம் செய்யமுடியுமா ?

விவசாயத்தின் முதன்மை கருப்பொருள் தண்ணீர். அதை பாய்ச்ச சக்தி. அது துண்டு நிலங்களில் எங்கிருந்து வரும்? மின்சாரம் வேண்டி பதியாமல் பிடிவாதமாக காற்றாடி கொண்டு நாலு வருடம் ஒட்டினேன்.

கட்டண மின்சாரமா, திருட்டு மின்சாரமா, டீசல் ஜெனரேட்டர் எந்திரமா, மண்ணெண்ணெய் விசைபம்பா, சோலார் பம்பு செட்டா ? எப்படித்தான் தண்ணீரை வெளியேற்றுவது ? எது கட்டுப்படியாகும் ?

முதலில் வேலைவாய்ப்பை உண்டுபண்ண ஆள் வைத்து அடிபம்பு அடித்து தலா 30 குடம் தண்ணீரை பாய்ச்சிய நாட்கள் உண்டு. (கடைசி படம்)

– வளரும்
தற்சார்புவிவசாயி  (alwar Narayanan)
சென்ற அத்தியாயத்தை படிக்க