தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை

தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை
Agriwiki.in- Learn Share Collaborate
தற்சார்பு விவசாயி – அத்தியாயம் 5 பேண்தகைமை
 

நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1).

தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்து மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார்.

இது அடிக்கடி நடக்கிற காரியமில்லை. தற்சார்பு வேளாண்மைக்கு வேண்டிய பொருட்கள் சுலபமாக, எப்போதும் கைக்கெட்டும் அளவில், மலிவாக கிடைக்கவேண்டும்.

சொந்தமாக மாடு வைத்துக்கொள்ளவேண்டியதுதானே, ஜீவாமிருதம் கொடுக்கவேண்டியதுதானே ? என்று கேட்கலாம். மாடு வைக்க வருடம் முழுவதும் தடையில்லாமல் தண்ணீர் வேண்டும். தங்கி பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும். கள்ளர்கள் நடமாட்டம் அதிகம். நோய், நொடியில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். என்னுடைய முதல் மாட்டின் பெயர் கௌரி. இந்த களரி வருவதற்கு இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.

காத்தாடி போடுவதும் இப்படித்தான். கைக்காசு போட்டு காத்தாடி மாட்டிவிட்டால் அடுத்த 50 வருடத்துக்கு தண்ணீரை இறைக்கும். அதை பாய்ச்சுவது யார் ? ஒரு மூன்று ஏக்கர் நிலத்தில் கடைக்கோடிக்கு தண்ணீரை எப்படி பாயும் ? சுலபமாக இல்லையென்றால் தண்ணீர் பாய்க்க மாட்டார்கள். இது சோம்பேறித்தனம் இல்லை. இதுதான் பேண்தகைமை (sustainability).

இதற்காக வடிவமைத்ததுதான் புவிஈர்ப்பு விசையை உபயோகித்து சொட்டு நீர் பாசன முறை. சுருங்க சொன்னால் தண்ணீரை தரை மட்டத்துக்கும் உயரத்தில் 15 அடியில் ஒரு தண்ணீர் தொட்டி அமைத்து காத்தாடி தண்ணீர் அதில் விழுமாறு செய்வது. பிறகு மேல்நிலை தொட்டியில் உள்ள தண்ணீரின் எடையினால் உண்டாகும் அழுத்தத்தால் குழாய் மூலம் கடைக்கோடி வரை இழுத்துவிட்டு சொட்டு நீர் போடுவது.

கையால் வரைந்த படத்தை பார்க்கவும்.

காற்றாடி தண்ணீர் முதலில் ஒரு உயரத்தில் உள்ள தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. எஞ்சிய தண்ணீரை தரை மட்டத்தில் இன்னொரு சிமின்ட் தொட்டிக்கும், மேலும் எஞ்சியதை பண்ணை குட்டைக்கும் செலுத்துமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

கடுமையான வறட்சியின் காரணமாக இதுவரை இந்த அளவு தண்ணீர் வரவில்லை. கந்தன் எப்போதும் தண்ணீரை சேரவிடாமல் நேரடியாக குழாய்மூலம் பாய்ச்சி விடுவார். அடிக்கும் வெயிலில் செடிகளுக்கு நிறைய தண்ணீர் தேவை.

சொட்டு நீர் வேலை செய்யுமா ? இதற்கான ஆய்வு செய்து செய்யும் என்று தெரிந்தபின் நாங்களே சொட்டு நீர் போட்டுள்ளோம். எங்கெல்லாம் காசு மிச்ச படுத்த முடியுமோ செய்யவேண்டும்.

மல்லிகை தோட்டத்துக்கு மற்றும் மரங்களுக்கு முழுவதும் இப்படித்தான் பாய்கிறது. மல்லிகை கன்றும் அதன் தற்போதைய நிலைமையும் அடுத்தடுத்த படங்களில். இது காத்தாடியிலிருந்து ஒரு 300 மீட்டர் தூரத்தில் இருக்கும் பாத்தி. இதே போல தோட்டம் முழுவதும் முக்கியமான இடம் வரை தரைக்கடியில் PVC பைப்பை இழுத்துவிட்டால் புவிஈர்ப்பு விசையின் மூலம் பாய்ந்துவிடும்.

அளவுக்கதிகமான சிக்கலாக குழாய்களையும், வால்வுகளை போட்டால் பிறகு மறந்துவிடும். கந்தனால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.

மேல் நிலை தொட்டியால் சொட்டுநீர் வேலை செய்யும். ஆனால் தெளிப்பு நீர் (sprinkler) அளவு அழுத்தம் வராது. அதேபோல சமநிலை வெள்ளை பெரிய தொட்டியை அடியில் திறந்துவிட்டு பாசன நீர் பாய்ச்சலாம். படத்தில் உள்ள கிழங்கு அப்படி விளைவித்ததுதான்.

— வளரும்
#தற்சார்புவிவசாயி (alwar narayanan )