நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை
சில வருடங்களுக்கு முன்பு, விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ விவாத நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு சென்னையில் நிகழ்ந்தது. இயற்கை விவசாயமுறையைச் சார்ந்தவர்களுக்கும், நவீனமுறை விவசாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே நிகழ்ந்த விவாத நிகழ்ச்சியது. அதில் சிறப்பு விருந்தினராக நம்மாழ்வார் பங்கேற்றிருந்தார். விவாதத்தில் பங்கேற்றிருந்த எல்லோரும் அவரவர் தரப்பைப்பற்றி பேசினார்கள். அண்ணன் அறச்சலூர் செல்வம், அண்ணன் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலரும் இயற்கை விவசாயமுறைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். நவீன விவசாயத் தரப்பிலும் நிறையபேர் தங்கள் தரப்பை வாதத்தால் வலுப்படுத்தினர்.
அந்த நிகழ்ச்சியில், வால்டேர் என்றொருவர் நவீன விவசாயத் தரப்பிற்கு ஆதராவாகப் பேசினார். இயற்கை விவசாயம் சிக்கலானது எனவும், அதுசார்ந்த என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது எனவும் சொல்லி மிகுந்த தீவிரமாகப் பேசினார். இயற்கை விவசாயம் சார்ந்த பங்கேற்பாளர்கள் ஏதோவொருவகையில் உணர்ச்சிமிகுந்த சொற்களாகத் தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தினர். அந்தக் குறிப்பிட்ட ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கான சிறப்புப்பரிசானது, தன்னுடைய வாதங்களைக் காத்திரமாக முன்வைத்ததற்காக வால்டேருக்கு அளித்தார்கள். ஒளிப்பதிவு முடிந்தது.
மறுவாரம் அந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இரண்டொரு நாட்கள் கழித்து, இன்றைய வேளாண்மை என்கிற விவசாய இதழில் அய்யா நம்மாழ்வாரின் கேலிச்சித்திரம் ஒன்றிருந்தது. நான், பேருந்துநிலையைக் கடையில் அப்புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அதில், நம்மாழ்வார்பற்றி மிகவும் கொச்சையான வார்த்தைகளில் எழுதப்பட்ட கட்டுரை பிரசுரமாகியிருந்தது. நம்மாழ்வாரைத் தூக்கிலிட வேண்டும்; அவருடைய சிரிப்பு நயவஞ்சகமானது; ஏராளமான பேர்களை அது கொலைசெய்யக் கூடியது… என்பதுபோன்ற வாக்கியங்கள் இருந்தன. மிகுந்த காழ்ப்போடும் வன்மத்துடனும் அக்கட்டுரை நம்மாழ்வார்மீது எழுதப்பட்டிருந்தது.
உள்ளே பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், அந்தக் குறிப்பிட்ட ‘நீயா நானா’ நிகழ்ச்சி குறித்து மட்டும் 20 பக்கங்களுக்கும் அதிகமான கட்டுரை வெளிவந்திருந்தது. அக்கட்டுரையில் மூன்று நான்கு பக்கங்கள் கடந்தபின், நான் சில வரிகளை வாசிக்க நேர்ந்தது. அதில், ‘நம்மாழ்வாருக்குப் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன; அவை பணமாகவும் இடங்களாகவும் இருக்கின்றன; அவைகளை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். கிரீன் பீஸ் அமைப்பிலிருந்தும் வெவ்வேறு வெளிநாடுகளிலிருந்தும் அவருக்குப் பணம் வருகிறது’ என்றிருந்தது. வெறும் அவதூறுகள் நிரம்பிவழிந்த இதழாக அதுவிருந்தது.
ஒரு சாயங்கால நேரத்தில்தான் நான் அந்த இதழை வாசித்தேன். படித்தவுடனே மனம் கொதிப்படைந்து எனக்குநானே குமுறியபடி இருந்தேன். அச்சமயத்தில் எதேச்சையாக, நவீனத் தமிழ் நாடகம் ஒன்றும் திருவண்ணாமலையில் நிகழ்த்தப்படவிருந்தது. அந்நாடகத்தைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தேன். நாடகம் நிகழத்துவங்கியது. விவசாயிகள் தற்கொலையும், விதைத்திருட்டும் அந்நாடகத்தின் மையப் பேசுபொருளாக இருந்தது. நாடகம் முடிந்தபிறகு அதன் இயக்குனரிடம் நான், “அண்ணா, ஏதோவொருவிதத்துல தேடித்தேடி அலையுற ஒரு யாத்ரீகன மாதிரிதான ஆழ்வாரு இருக்காரு. அவர ஏதாச்சும் குறியீடா நாடகத்துல வச்சிருக்கலாமே அண்ணா” எனக் கேட்டேன். அதற்கு அவர், “இல்லல்லா… அவருக்கு ஏராளமான பணம் இருக்குதுய்யா. அவரு யாத்ரீகனெல்லாம் கெடையாது” என்கிற தொனியில் பதில்சொன்னார்.
அந்த இதழில் வந்திருந்த கட்டுரையும், இவர் சொன்ன இந்த வார்த்தைளும் எனக்குள் மிகப்பெரிய உளக்கொந்தளிப்பை ஏற்படுத்தின. நாம் மிகவும் ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒரு மனிதரைப்பற்றி மற்றவர்கள் காழ்ப்புரைக்கையில் நமதுள்ளம் தாங்கிவியலாத துயரிலாழ்வதை உணரலாம். நம்மீது சுமத்தப்பட்ட பழியாகவே நான் அதைக் கருதினேன். அவசரவசரமாக எங்கெங்கோ கேட்டுத் தொகைதிரட்டி ஆழ்வாரைக் காணக் கிளம்பிச் சென்றேன்.
அச்சமயத்தில், அய்யா திருச்சி திருவானைக்காவில் இருந்தார். அவரைப் பார்க்க அதிகாலை ஐந்தரை மணியளவில் அங்கு சென்றுவிட்டேன். முரளி அண்ணன் வீட்டில் ஆழ்வார் தங்கியிருந்தார். முரளி அண்ணனைப்பற்றிப் பகிர்வதற்கு அவ்வளவு சம்பவங்கள் என் மனதுள் அடுத்தடுத்து எழும்புகின்றன. என்.ஜி.ஓ மனிதர்களிடத்தில் அதிகமும் இயங்கிக்கொண்டிருந்த நம்மாழ்வாருடைய வாழ்வுப்பயணம், முரளியண்ணனின் வருகைக்குப்பிறகு வேறொன்றாக மாறியது. அய்யாவை இரத்தமும் சதையுமாக நேசித்த மனிதர்களுள் முரளியண்ணனும் முதன்மையானவர்.
முரளி அண்ணனின் மொத்த குடும்பமே சேர்ந்து அய்யாவை கவனித்துக்கொண்டது. அவர்வீட்டு மொட்டைமாடியில் இரண்டு சிற்றறைகள் இருந்தன. அதிலொன்றில் ஆழ்வார் இருந்தார். அந்த அறையில் புத்தக அடுக்கிற்குப் பக்கத்தில் ஜக்கிவாசுதேவ் அவர்களின் புகைப்படமிருந்தது. சிறியதாக ஓர் அருவிகொட்டும் இடத்தில், நீண்டமுடி மற்றும் சிற்றாடையின் வெற்றுடம்போடு அவர் தியானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம். அமர்ந்து ஈஷாவுடைய சில உடற்பயிற்சிகளை அய்யா செய்துகொண்டிருந்தார். அதனால், சிறிது நேரம் நான் வெளியில் காத்திருந்தேன்.
காலைப்பயிற்சியை முடித்துவிட்டு வந்த ஆழ்வார் என்னைக் கண்டவுடன், “வாய்யா…சிவா. ஏன் முகம் இவ்ளோ பதட்டமா இருக்கு?” எனக் கேட்டுக்கொண்டே, கைகளை என்னுடைய தேளில்போட்டு தட்டிக்கொடுத்து பேசியபடியே மாடிப்படியிலிருந்து கீழிறிங்கி வந்தார். வீட்டிலிருந்தவர்களோடு ஒருசில வார்த்தைகள் உரையாடிவிட்டு, மீண்டும் என்னிடம், “ஏன்ய்யா? என்னாச்சுயா?” எனக் கேட்டார். நான், இன்றைய வேளாண்மை இதழில் வந்திருந்த அவதூறுக் கட்டுரையைப்பற்றி அவரிடம் சொல்லி, “மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குய்யா… இதுக்கு நாம ஏதாச்சும் எதிர்வினையாற்றனும்” என்றேன்.
அதற்கு உடனே ஆழ்வார், “இதுக்கு எதுக்குய்யா நாம பதில் சொல்லணும். இதுக்கெல்லாம் பதில்சொல்ல முடியாதுய்யா… பதில்சொல்லவும் கூடாதுய்யா” என்றார் திடமாக. நான், “நெறைய பேரு அத நம்புறாங்களே அய்யா….” என்று பதறினேன். அதற்கு ஆழ்வார், “நம்புறவங்க நம்பட்டும்ய்யா… நீ அங்கிருந்து இந்த கட்டுரையத் தூக்கிட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேலயா! நீ ஏன்யா இத நம்பல? நம்மள நம்புற மனசு எப்பவுமே இருக்கும்ய்யா” என்று ஆறுதல்படுத்தினார்.
சங்கிலிபோட்டு கட்டுன நாயி கத்திக்கத்தி சாகும்ய்யா. நம்மளப் பாத்து கத்துற நாய்க்கு நாம நின்னு பதில் சொல்லிட்டிருக்க முடியாதுய்யா. ரொம்ப சத்தம் வர்ற சமயத்துல நாம என்ன செய்யணும்னா… நாய் கத்துற எடத்தவிட்டு நாம வேகமா ஒடணும்ய்யா. அதனால ரெண்டு பலன் இருக்குய்யா. ஒன்னு, நாயோட சத்தம் நமக்கு கேக்காது; இன்னொன்னு, நாம ரொம்பதூரம் கடந்துவந்திருப்போம்ய்யா.
நான் அதை மறுத்து ஏதோ சொல்ல முற்படுகையில், “ஒன்னு புரிஞ்சுக்கோயா… சங்கிலிபோட்டு கட்டுன நாயி கத்திக்கத்தி சாகும்ய்யா. நம்மளப் பாத்து கத்துற நாய்க்கு நாம நின்னு பதில் சொல்லிட்டிருக்க முடியாதுய்யா. ரொம்ப சத்தம் வர்ற சமயத்துல நாம என்ன செய்யணும்னா… நாய் கத்துற எடத்தவிட்டு நாம வேகமா ஒடணும்ய்யா. அதனால ரெண்டு பலன் இருக்குய்யா. ஒன்னு, நாயோட சத்தம் நமக்கு கேக்காது; இன்னொன்னு, நாம ரொம்பதூரம் கடந்துவந்திருப்போம்ய்யா…” எனச்சொல்லி நெஞ்சு தணிந்தார்.
பேசிவிட்டு மீண்டும் மொட்டைமாடிக்குச் சென்றவர், “ஏளனத்த எத்துக்கத் தேவையில்லய்யா… எல்லாருக்கும் சேத்துதான் இங்க நாம வேல செய்றோம்… சிவாய்யா… அதிலயிருந்து கடந்துவந்திடுய்யா” எனச்சொல்லி, ஆனந்த விகடனில் வெளிவந்திருந்த திரைக்ககலைஞர் வடிவேலு அவர்களின் கட்டுரையை வாசிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டார். அதற்குப்பின், அதுகுறித்து எவ்வித உரையாடலும் எங்களுக்குள் நிகழவில்லை. அக்கணத்தில் ஒரு தன்னிலைத்தெளிவு எனக்குள் புலப்படத்தொடங்கியது.
அவரை என் ஆசான்களுள் ஒருவராக வழிதொழவைத்த ஒரு குணம் அவரிடமிருக்கிறது. தான் நம்புகிற எண்ணத்திற்காகத் தன் ஒட்டுமொத்த உயிரையும் கரைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓடுகிற ஓட்டம்தான் அது!
நான் அய்யாவுடைய எந்த பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டதில்லை. இயற்கை விவசாயம் குறித்த எந்த அடிப்படையும் எனக்குத் தெரியாது. பஞ்ச காவ்யா, காய்கறித் தோட்டம், வேளாண் சிறுநுணுக்கங்கள், விதைகள் என எதுகுறித்தும் நான் கற்றறியவில்லை. எனக்கு அடிப்படையிலேயே, அவருடைய பயிற்சி முறைகள் குறித்த ஈர்ப்பு தோன்றவேயில்லை. ஆனால், அவரை என் ஆசான்களுள் ஒருவராக வழிதொழவைத்த ஒரு குணம் அவரிடமிருக்கிறது. தான் நம்புகிற எண்ணத்திற்காகத் தன் ஒட்டுமொத்த உயிரையும் கரைத்துக்கொள்ளும் அளவுக்கு ஓடுகிற ஓட்டம்தான் அது! அந்த தீவிரம்தான் என்னை எப்பொழுதுமே சமன்குலைப்பதாக இருந்தது.
உங்களோட தத்துவம் எப்பய்யா ஜெயிக்கும்?
ஆழ்வாரின் பிறந்த தினமான, இன்றைய நாளுக்கான துவக்கமாக அந்தத் தீவிரத்தை நான் எனக்குள் நினைத்துக்கொள்கிறேன். தனக்கு உடல்நிலை சரியில்லாத ஒருசமயம் அய்யா ஆனைகட்டி சத் தர்சனில் தங்கியிருந்தார். அப்பொழுது நானும் அவருடனிருந்தேன். அந்நேரங்களில், அவருடனான பல மறக்கமுடியாத உரையாடல்களை நான் பெற்றேன். ஒவ்வொன்றுமே வாழ்வுக்கான அகத்திறப்பை உள்ளடக்கியவை. அவற்றுள், எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் என்னை உளவெழுச்சி அடையவைக்கும் பதில் ஒன்றுள்ளது. அய்யாவிடம் நான் “உங்களோட தத்துவம் எப்பய்யா ஜெயிக்கும்?” என்று கேட்டேன்.
சிவா… நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த… இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். ‘அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே’ அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்… அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது
அதற்கு அய்யா “சிவா… நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த… இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். ‘அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே’ அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்… அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது” என்றார்.
சூலூர் செந்தில்குமரன், மேல்கோட்டை சரவணன், முசிறி அருண், பனையேறி பாண்டியன், பேராசிரியர் ராம்ராஜின் மாணவர்கள், கலைத்தாயின் சிலம்ப ஆசிரியர்கள், ஈரோடு பிரதீப், ஈஷா பள்ளி திலகவதி, ஆசிரியர் விஜயராஜ்… இப்படியான இளையவர்கள் நிறையபேர் இன்று அக்கனவைச் சுமந்து தங்கள் வாழ்க்கையினை இலக்குநோக்கிச் செலுத்துவதை நான் நேர்கொண்டு பார்க்கிறேன்.மனமுகந்த ஒரு களத்தைத் தேர்வுசெய்து, செயல்களின் தொய்வற்ற தொடர்ச்சியால் பாதைகளை நிலமெழுப்பி, வாழும் சாட்சியாக அவர்கள் நிறைகிறார்கள். ஒவ்வொரு இளைய மனதிலும் ஆழ்வார் ஒவ்வொரு தன்மையாக முளைத்துக் கிளம்பியிருப்பதை இன்று என்னால் உணரமுடிகிறது. நம்மாழ்வார் என்கிற ஒரு எண்ணம் அளவிலா விளைவுவிசையாக அகவுரு அடைந்துள்ளது. இளையோர்களை ஞானாசான்களாக உருமாற்றுவது என்பதுதான் காலத்தின் மெய்ரசவாதம்.
(என் மனதுக்கு நெருக்கமான இந்த ஒளிப்படம்… திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் இருக்கும் ‘பொற்குணம்’ என்னும் கிராமத்தில் நண்பர் சண்முகம் அவர்களால் எடுக்கப்பட்டது.)