நீர் மேலாண்மை – மூடாக்கு
நம்மாழ்வார் ஐயாவிடம் இயற்கை வழி விவசாயப் பயிற்சி பெற்ற பின் உழவில்லா வேளாண்மை மட்டுமே இனி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
விவசாய பூமியில் உணவுக் காடு வளர்ப்பு என்பது உழவில்லா வேளாண்மையில் மட்டுமே சாத்தியம் என்று உறுதியாக நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.
ஐயா சொன்னது போல பூமிக்கு மூடாக்கு இடுவதன் மூலம் மட்டுமே பூமியில் ஈரத்தன்மையை மிக அருமையாக சேமிக்கலாம். (மூடாக்கு இடுவதன் நன்மைகள் பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன்).
இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது.
சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது.
மூடாக்கு எப்படிப் பெறுவது? சென்ற ஆண்டு வைத்த வெள்ளாமையான, மிளகாய், ஆமணக்கு, முருங்கை, வாழை, இவற்றுடன் ஓடு கொடிகளான பாகல், பீர்க்கன், அவரை இவற்றின் கழிவு எதையும் நாம் வெளியேற்றவில்லை. உள்ளே கூட்டி நெருப்பும் வைத்து கொளுத்தவில்லை. இவற்றுடன் தானே முளைத்த களைச் செடிகள் அனைத்தையும் பறித்து மூடாக்கு இட வேண்டும். மேட்டுப் பாத்திகளை மூடும் அளவு மூடாக்கு உள்ளது. இன்னும் பதினைந்து நாட்கள் நாற்று பெரிதாக வளரும் வரை பொறுமையாக மூடாக்கு இடலாம்.
இவற்றை உண்ண நிறைய கரையான்கள் வருகின்றன. உழவு செய்யாமல் இருப்பதால் நிறையப் புற்றுகள் உருவாகியுள்ளன. இதனால் என்ன நன்மை என்கிறீர்களா?
புற்றுகள் சிறந்த மழைநீர் சேமிப்பு மையங்கள்! எப்படி?
கரையான்கள் மண்ணின் கீழ், மண்ணின் மேல், மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன.
சாதாரணமாக ஒரு அடி முதல் 20 அடி உயரம் வரை 30 மீட்டர் விட்டம் வரை இவை புற்றுகளைக் கட்டும். அத்திவாரம் உறுதியாக இருந்தால்தான் கட்டுமானம் உறுதியாக இருக்கும். எனவே புற்றின் உயரம் போலவே இரு மடங்கு அதன் கீழாலும் இருக்கும். ஒரு புற்றில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு. இரண்டாவது பூமிக்கு மேலே உள்ள அடுக்கு. பூமிக்குக் கீழே குழிதோண்டி அந்த மண்ணைக் கொண்டு பூமிக்கு மேலே சுவரெழுப்புகின்றன. இதனால் மழைநீர் மண்ணில் அடியாழம் வரை ஊடுருவிச் செல்லும்.
காடு வளர்ப்பு மற்றும் பல்லுயிர் சூழல் பெருக்கம் மூலம் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். இப்படி நாம் மண்ணை மாற்றினால் பூமியில் விழும் ஒவ்வொரு சொட்டு மழை நீரும் அப்படியே கீழே இறங்கும். நீர் ஓடுவதே கிடையாது! மூடாக்கு என்னும் இலை மக்கு நிறைந்த காட்டில் மண் அதிக தண்ணீர் உறிஞ்சி தேக்கி வைக்கும் தன்மையுடன் இருக்கும். மேலே கூட மரங்களின் நிழல் இருப்பதால் விரைவில் ஆவியாவதில்லை. மண்ணில் மூடாக்கு, மூடாக்கு சூடாகாமல் மேலேயும் நிழல்! இதனால் ஏராளமான நுண்ணுயிர்கள் மண்ணில் வாழ்ந்து மண்ணைக் கிளறிக் கொண்டே உள்ளன.
தொடரும்!
சரோஜா குமார்
https://www.facebook.com/saroja.kumar.54?__tn__=%2CdC-R-R&eid=ARBXgk2sOBRQ034v0JL0ksArWOge9-fhqGJUGRVvYu9Mjn30BN4rhwRs5XhIKbo4AO26HyqACrFxeNUI&hc_ref=ARQ1DtpXpLnKOpOXlUtVWIKutw8Rqt3-m-wEcmkHBLfNjVV7Gf24eCrHfhJ-lp4EqXI&fref=nf