மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க

கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்
Agriwiki.in- Learn Share Collaborate

“மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க”- கோ.நம்மாழ்வார்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கவீட்ல உம்பளாச்சேரி வகைய சேர்ந்தமாடு ஒன்னு இருந்துச்சி நெத்திசுட்டி, வெடிவால், வெங்கொழும்பு, தட்டுபுள்ளி,நாலுகாலு வெள்ளனு உம்பளாச்சேரிக்கான அந்த ஐந்து அடையாளத்தோடும் பயிர்கொம்போடு கட்டுதரையில் அந்த சூரியங்காட்டு மாடு நிற்பதை நாள்முழுவதும் பாத்துகிட்டே இருக்கலாம்.

அதே வகைதான் பெரியப்பா வீட்லயும் இருந்துச்சி முப்பது உருப்படிக்கு மேல் இதே போல ஒரு மாடும் இன்னொரு பெரிய தட்டுபுள்ளி உள்ள மாடும் தாய்மாடுகள், இரண்டும் இரண்டு காள கன்னு போடும் வளரும் ஒழவுல போகும் வண்டிலபோகும். காளைக்கு போடுறதுனு தனியா ஒரு வழக்கம் கிடையாது அப்டியே கெடைக்கு அனுப்புறது பலன்பட்டு வரும் இப்டி தொடர்ச்சி பத்து ஜோடிகள் நடுவில் கிடேரிகளும் அடக்கம்.

அந்த தாய்மாடு எங்க வாங்குனது மாமானு கேட்க ஆரம்பிச்சா “முப்பது வருசத்துக்கு முன்னடி எடையூர்ல கருப்பையாத்தேவர்னு ஒரு மாட்டுதரவரு இருந்தாரு ச்செந்திலு, நா பெருமழயில உளுந்தகூலி அறுப்பறுத்து ரெண்டுவருசமா சேத்து வச்ச எரநூறுவா காச எடுத்துகிட்டு எடையூருக்கு போறேன். நானும் அவரும் மம்மலோட வாடகசைக்கிள் ஒன்ன எடுத்துகிட்டு அப்டியே மாங்குடி மருதவனம் வழியா மாடுகள பாத்துட்டே போயி”னு ஆரம்பிச்சு எட்டானாலு ராயநல்லூர் ல கயிறுமாத்துனது கொற்கையில மாத்துனது வேட்டகாரனிருப்ள கயிறு மாத்னதுனு கதமுடியும். பெறகு அதுகள்ல வந்த வழிமாடுகள்ள பாச்சமாடு சண்டிமாட்டுக்கு சரடு குத்தி இழுத்தது மூட்டுநவந்த காலொடிஞ்ச மாட்டுக்கு புளியங்கொட்ட பத்துபோட்டதுனு பேசி முடிக்க ராத்திரி மணி பத்தாயிடும். ஒவ்வொரு முறை கதை முடியும் போதும் கேட்பேன் “மாமா நம்ம மண்ணுல இப்டி உசுர கொடுத்து ஒழச்சமாடுகள்ல இப்ப கட்டுதறில ஒன்னுகூட இல்ல ஒரே ஒரு ஜெர்சி கிராஸ் நிக்கிது ஏன்? அதுகள்ல ஒன்னு கெடந்தா என்னனு நான் கேட்பதற்கு அவரிடம்பதில் இருக்காது மௌணமாக தலைகவிழ்ந்து அமர்ந்திருப்பார்.

ஒருவேளை அவர்மனதுக்குள் பால்சொம்பு நான்கு மடங்கு பெரிதாக மாறியதோ, மகேந்திரா 475DI க்கு ரொட்டவேட்டர் மாட்டியதோ,நினைவுக்கு வந்திருக்கலாம் ஆனால் அதையெல்லாம் சொல்லி இன்றைய கட்டுதறி வெறுமையை அவரால் நியாபடுத்திவிட முடியாது.

குவைத்லேருந்து ஊருக்கு வந்தவுடன் டெல்டாவுக்குள் கூடுமானவரை முத்துசித்தப்பாவோடு அலைந்துதிரிந்தேன். எங்கள் பழயவகை மாடு மாதிரியே ஒருமாடு வாங்கிடனும்னு திரிந்தேன். அதே மாதிரி கிடைக்கல ஆனால ஒரு நல்ல உம்பளாச்சேரி மாடு ஒன்னு கிடைத்தது வாங்கிவந்துவிட்டேன்.

டாடாஏஸ் ல பின்னாடி நின்னபடி தொண்டுகயித்த புடிச்சிட்டு வரும்போது பைக்ல பின்னாடி வந்த மாமா “பால் கம்மியா இருந்தாலும் பரவாஇல்ல இதுமாதிரியே நமக்கும் ஒரு மாடுவாங்கிடனும்யா செந்திலு”ன்னார். நம்ம பேச்சு வேல செஞ்சிருக்குனு மனசுகுள்ற நெனச்சிட்டு பால் கம்மியா இருந்தாலும் ங்கிற வார்த்தையில் இருக்கிற “லும்” க்கு இன்னும் நிறைய பால் அரசியல் பத்தி பேச வேண்டிருக்குனு நினைச்சிகிட்டேன்.

இவ்ளோதூரம் இந்த பதிவை படிச்சிவந்தவங்க அப்டியே தாளாண்மை இதழில் வெளிவந்த ஜெய்சங்கர் எழுதிய மாடல்ல மற்றையவை தொடரின் இந்த பகுதியையும் தொடர்ச்சியா படிச்சிடுங்களேன்

ஒரு முறை திரு. நம்மாழ்வாரை சந்தித்த போது எனது பண்னையில் என்ன என்ன செய்கிறேன் என்று சொல்லும் போது நான் பதினெட்டு மாடுகள் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அப்போது அவர், ‘மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க’ என்றார். அவர் சொன்னது எவ்வளவு ஆழ்ந்த கருத்து என்று இரண்டு வருடங்களாக பண்ணை நடத்தி வந்த அனுபவத்தின் மூலம் உணர முடிந்தது. ஆனால், அதை இவ்வளவு எளிமையாக ஒரே வரியில் அடைத்தது அவரது சிறப்பு. நாம் பொதுவாக மாடுகளை பால் கொடுக்கும் இயந்திரமாகவே பார்க்கிறோம் என்பதற்கு இரண்டு சான்றுகளை முன் வைக்கிறேன்.

உழவர்களிடம் மாடுகளைப் பற்றி பேசும் போது பொதுவாக என்னிடம் கேட்கும் கேள்வி – ‘உங்களிடம் உள்ள மாடுகள் எவ்வளவு கறக்கும்?’ பதில் – ‘சுமார் மூன்று முதல் ஐந்து லிட்டர் கறக்கும்’. பெரும்பாலானோர் இதன் தொடர்ச்சியாக, என்னிடம் ஒரு மாடு இருந்ததுங்க… ஒரு வேளைக்கு பதினைந்து லிட்டர் கறக்கும், பதினெட்டு லிட்டர் கறக்கும் என்று பெருமை பேசுவர். நல்ல மாடு என்பது அது எவ்வளவு பால் கறக்கிறது என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இவர்களுக்கு. அவர்களிடம் நான் கேட்பது, ‘அந்த பசு உங்கள் வீட்டில் எவ்வளவு கன்று ஈன்றது?’. அதற்கு ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த பதில், ‘அது… ஒன்றரை இரண்டு வருடம் கறந்தது… பின்னர் பால் மறந்த பிறகும் இரண்டு மாதம் சினை நிற்கவில்லை… எனவே அதை அடி மாட்டிற்காக வியாபாரியிடம் விற்று விட்டேன்’ என்பதே. பொன் முட்டை இடும் வாத்தை அறுத்த கதை தான் இது.

விவசாயத்தில் அதிக மகசூல் தரும் இரகங்களுக்கு அதிக இடுபொருள் செலவு ஆவதைப்போல் அதிக பால் தரும் மாடுகளுக்கு அதிக செலவு செய்து ஊட்டமும் தீவனமும் அளிக்க வேண்டும்.

வருடத்திற்கு ஒரு கன்று ஈனும் அளவில் மாடுகளை பராமரிப்பதே பண்ணை இலாபகரமாக இருக்க உதவும். அதிகமாக கறக்கும் மாடுகளுக்கு தீவனச் செலவும் அதிகமாக ஆகும். விவசாயத்தில் அதிக மகசூல் தரும் இரகங்களுக்கு அதிக இடுபொருள் செலவு ஆவதைப்போல் அதிக பால் தரும் மாடுகளுக்கு அதிக செலவு செய்து ஊட்டமும் தீவனமும் அளிக்க வேண்டும். பண்ணையை இலாபகரமாக நடத்த எவ்வளவு பால் என்பதை மட்டும் பார்க்காமல் எவ்வளவு செலவுக்கு எவ்வளவு பால் என்பதை பார்க்க வேண்டும்.

இரண்டாவது எடுத்துக்காட்டு –

சென்னைக்கு அருகில் உள்ள ஒரு நடுத்தர பால் பண்ணை ஒன்றை பார்க்கச் சென்றிருந்தேன். சுமார் ஐம்பது எருமை மாடுகள் கொண்டது அந்தப் பண்ணை. இந்த பயணம் என்னுடைய பசுக்களுக்கு நான் ‘பீர் பொட்டு’ போட வேண்டும் என்று வற்புறுத்தியதன் பேரில் அதைப் பற்றி நான் அறிந்து கொள்வதற்காகவும் அதை சாப்பிடும் மாடுகள் எவ்வளவு பால் கறக்கின்றன என்றும் தெரிந்து கொள்வதற்காகவும் நடந்தது.

அங்கு நான் கண்டவை யாவும் எனக்கு வியப்புக்கு மேல் வியப்பை அளித்தன.

முதலில் ஐம்பது எருமைகள் கட்டும் தொழுவம் நாங்கள் பதினெட்டு பசுக்கள் கட்டும் தொழுவத்தின் அளவே இருந்தது. பால் கறக்க வேண்டுமானால் ஒருவர் மாடுகளின் சப்பையை பிடித்து வேகமாக ஒரு புறம் தள்ள இன்னொருவர் கிடைக்கும் சந்தில் உடனே அமர்ந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது எல்லா எருமைகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. நான் அறியாத சாதி என்று நினைத்து கேட்ட போது அவை சாதாரண எருமைகள் தான், வெய்யில் என்பதையே அவை அறியாது என்பதால் அந்த நிறத்தில் உள்ளது என்றனர்!

மூன்றாவது, அந்த பண்ணைகளில் மூன்று வேளை பால் கறக்கின்றனர் என்பது. காலை நான்கு மணிக்கு அரை மடி பால் கறந்து அவை உணவகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் கொழுப்பு குறைவாக இருக்கும். பிறகு ஏழு மணிக்கு மீண்டும் ஒரு முறை முழு கறப்பு. இந்த முறை கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் என்பதால் அவை ‘ஐஸ்கிரீம்’ தயாரிக்கும் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு கொடுக்கப்படுகிறது. வழக்கம் போல் மாலை நான்கு மணிக்கு இன்னொரு கறப்பு மீண்டும் பால் பண்ணைகளுக்கு.

இந்தப் பண்ணையில் நுழைந்தவுடனேயே வழுக்கமான சாணி கோமியத்தின் மணத்துடன் ஒருவித புளிப்பு மணமும் கலந்து வீசியது. அது தான் நான் தேடி வந்த பீர் பொட்டின் மணம்.

பீர் பொட்டு என்பது பீர் தொழிற்சாலைகளில் பீர் தயாரிக்க பார்லியை நொதிக்க வைத்து பிழிந்த பிறகு கிடைக்கும் சக்கை. அதே அரை குறை நுரையுடன் அன்னக்கூடைகளில் மாடுகளுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு முறை கறப்பதற்கு முன்னும் அதே தீவனம்.

இது மிகவும் மலிவு என்றும் வாங்கிய பதினைந்து நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இல்லையானால் இதை விட அதிகமாக கெட்டுப் போகுமாம். இந்தப் பண்ணையின் உரிமையாளர் என்னிடம் மாடுகளுக்கு பீர் பொட்டு போட்டால் பால் கறக்க மடியில் கை வைக்கும் போது மாடு நம்மை ‘பால் தானே… முடிந்தவரை கறந்துக்கோ’ என்பது போல் பார்க்கும் என்று பெருமையாக கூறினார்.

இங்குள்ள மாடுகள் நடப்பதே இல்லை. கட்டியது கட்டியபடியே இருக்கின்றன. அப்படியானால் சினை பிடிப்பது கடினமாக இருக்குமே என்று கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் இங்கு சினை பிடிக்க வைப்பதே இல்லை. பால் மறக்கும் தறுவாயில் மாடுகளை ஆந்திராவில் உள்ளவர்களிடம் விற்று விடுவோம். அவை அங்கு சென்று குழுவாக மேய்ந்து கொண்டிருக்கும், சினை பிடித்து கன்று ஈன்றவுடன் பால் கறக்க மீண்டும் அவர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்வோம் என்றார்.

கன்றுடன் சில வரும்… வந்தாலும் கன்றுகளை உடனே விற்று விட்டு கன்று இல்லாமல் கறக்க பழக்கி விடுவோம் என்று தெரிவித்தார். அப்போது தான் எனக்கும் தோன்றியது… பால் கறப்பவர் அமரவே இடம் இல்லாத போது கன்றுகளுக்கு ஏது இடம்.

மாடுகளை விட பாலின் பால் உள்ள நம் பற்றுதலே இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளின் மூலம் புலனாகிறது. இந்த முறைகள் நீடித்த இலாபத்தை அளிக்க வாய்ப்பே இல்லை. அந்தந்த குடும்பங்கள் பத்து பதினைந்து வருடங்களில் பொருள் இலாபம் ஈட்டி இருந்தாலும் மாடுகளின் இனத்திற்கும், பாலின் சுவைக்கும், தரத்திற்கும், அவற்றை பருகும் நமது ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவித்தே அது சம்பாதிக்கப்பட்டது. எனவே இதை ஓர் உள்ளடக்கிய வளர்ச்சியாக கருத இயலாது.

இரண்டு பின்குறிப்பு:

1)ஜல்லிகட்டு என்ற பெயரில் இதுவரை வாடியில் அவிழ்கபடாத எங்கள் உம்பளாச்சேரி செல்வங்கள் குறைந்த விலை என்ற ஒரே காரணத்துக்காக வண்டிஏத்தபடுவதும் பிறகு புடிமாடாகிட்டா வெட்டுக்கு அனுப்பறதும் அங்க புதிய நிலபகுதியில் எங்கள் மாடுகள் வெறித்தமுழியோடு நிற்பதும் வேண்டாமே…..

2)படத்துல இருக்க மாடு ஒரு பஸ் ஓனரோட மாடு அவசரபட்டு வெளிமாவட்டத்துகாரங்க மாடு எத்தன்ரூவாண்னே னு கேட்ற வேண்டாம் பஸ்ஸ உட்டு ஏத்துவார்