மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு

உண்மையில் நமது இயற்கைசூழலை கெடுப்பது அரசாங்கமும் கார்பரேட்டும் மட்டும்தானா

எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை.

இந்த முகநூலால் நான் செய்த ஒரே சாதனை என்னை போல உங்களையும் இந்த குற்றத்தை ஒத்து கொள்ள வைத்தது.

ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌. சூழலும் காலமும் மாறிவிட ஒரு கட்டத்தில் அச்சிந்தனைகள் வலுவிழந்தாலும் கூடப் பரவாயில்லை. நிந்திக்கப்படுகின்றன! ஆசை ஆசையாகப் பார்த்துப் பார்த்து வளர்க்கப்படும் குழந்தைகள் பின்னாளில் பெற்றோர்களைப் பார்த்து எனக்கு என்ன தான் செஞ்ச என்று கேள்வி எழுப்புவது போல. அறிவியலில் இது ரொம்ப சகஜம்.

தாமஸ் ஆல்வா எடிசன் முதன் முதலில் 125H.P நீராவி என்ஜின் கொண்டு முதல் மின்விளக்கு உருவாக்கும்போது அவருக்கு பின்னாளில் சூழலில் இவை என்ன பாதிப்பு உருவாக்கும்
என்றிறந்திருக்கவில்லை.

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் கார் என்ற தன்னுடைய கனவின் விளைவு நூறாண்டு கழித்து எப்படி இருக்கும் என்று ஹென்றி ஃபோர்டிற்கு தெரியவில்லை.

கரியும் கச்சா எண்ணெயும் ஒரு காலத்தில் கொண்டாடப்ட்ட சிட்டி ரோபோவாக இருந்தன‌. ஆனால் இப்பொழுது கர்த்தாக்கள் இந்த சிட்டி ரொம்ப மோசம் என்று சிட்டி2.0,3.0க்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பட்டினிச்சாவுகளை களைய, உணவில் தற்சார்பு கொண்டு வர உருவாக்கப்பட்ட பசுமைப்புரட்சியை இப்பொதைய தலைமுறை உணவில் எப்படி விஷத்தை ஊற்றி வளர்க்க ஒத்துக் கொண்டோம் என்று கோபம் கொள்கிறது.

பால்வளத்தை வளர்க்க கொண்டு வரப்பட்ட வெண்மைப்புரட்சி, இன்று பால் உற்பத்தியை பெருக்க மாடுகளை உட்படுத்தும் கொடுமைகளை முன்னிறுத்தி குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படுகிறது.

காகிதத்தை குறைத்து digitize செய்தால் மரங்கள் வெட்டப்படுவது குறையும் என்று சந்தோஷப்படுகிறோம். மின் குப்பைகளை எப்படி அகற்றுவோம். என்ற பதில் நமக்குத் தெரியாமலே…

என்றுமே பாரம்பரிய முறைகளே நமக்கு சரியான தீர்வு அதனை சுலபமாகவும்,விரைவாகவும்,செலவு குறைவாக செய்யவே தொழில்நுட்பமும்,அதற்கான பொருட்களும் தேவை.இங்கே அடிப்படை புரிதலே தவறாக மாயையாக அல்லவா உள்ளது.

ஆனால் இங்கேய கிணறு வெட்ட பூதம் கதை தான் எல்லா இடத்திலும்…

போதாக்குறைக்கு சமூக வலைதளங்கள் வந்த பின்பு எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரே பக்க நியாயத்தை மட்டும் அதிகம் திணிப்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது.எதற்கெடுத்தாலும் புரிதலில்லாமல் கார்ப்பரேட் ஒழிக கூவல் ஒரு சிறந்த உதாரணம்.

சிமெண்டும் கான்கிரீட்டும் சமூகத்தில் ஒரு தேவைக்காக வந்த ஒரு பொருளே அன்றி கார்ப்பரேட் கிரிமினல்கள் தங்கள் கஜானாவை மட்டும் ரொப்ப உருவாக்கப்பட்ட ஒரு பொருள் என்று சொல்வது எவ்வகை நியாயம்? அப்படி இப்பொழுது நடந்தாலும் கூட அது அப்பொருளின் குற்றம் என்று எப்படிச்சொல்ல முடியும்?

இந்தப்புரிதல்கள் வந்த பிறகு மனசு கொஞ்சம் ஆறுதல் அடைந்தது. சிமெண்ட்டும் கான்கிரீட்டும் எந்த அளவு எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் இருந்தால் அதுவும் நன்மைக்கே என்று விளங்கியது. உதாரணத்திற்கு
பாலங்கள் சமூகத்திற்கு பலனே தரவில்லை என்று சொல்ல முடியுமா?அவைகளை இவை இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியுமா?

ஒருவர் வீடு கட்டும் போது 100 கிலோ சிமெண்ட் குறைவாக பயன்படுத்தினால் மொத்த இந்தியாவில் எவ்வளவு சிமெண்ட் குறையும்??…சிந்தியுங்கள்

சுண்ணாம்பு போன்ற பாரம்பரிய இடுபொருட்களைப்பற்றி இப்பொழுது நிறைய கட்டுமான ஆர்வலர்கள் உலகமெங்கும் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதன் நிறை குறைகளை முழுமையாக புரிந்து கொண்டு அதனை அதிகமாக பயன்படுத்த வேண்டிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

இருந்தாலும் இது ஒரு நல்ல தொடக்கமே என்று நாங்கள் நம்ப ஆசைப்படுவதில் தவறில்லையே !?

நன்றி
உங்கள்,
ஹரி…