முருங்கைக்காய் Drumstick

moringa-oleifera-murungai
Agriwiki.in- Learn Share Collaborate

முருங்கைக்காய் (Drumstick)

 

முருங்கை சாகுபடி நுட்பங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். முருங்கையில் நாட்டு முருங்கை , செடி முருங்கை என இரு இரகங்கள் உள்ளன. 

முருங்கைக்காயின் உயிரியல் பெயர் (Moringa Olifera)முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் அதிக அளவு முருங்கை பயிரிடப்படுகிறது. இது வறட்சியான காலங்களிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது. இதனால் விவசாயிகளுக்கு உகந்த பயிராக இருக்கின்றது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள்

முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளன.

இதில், நாட்டு முருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும்.

செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள்.

நாட்டு முருங்கை சாகுபடி

பருவம்

ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

விதை

நாட்டு முருங்கையானது நாற்றுகள் அல்லது போத்து (விதை குச்சிகள்) மூலம் நடவு செய்யப்படுகின்றன.

விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்

தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகாவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).

முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்திற்கு கட்டு போடுவது போல் இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.

40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்ற வேண்டும். 60 நாட்களில் நடவிற்கு தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்றாக உழவு செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்க ொள்ள வேண்டும். வாய்க்கால்களின் மையத்தில் 16 அடி இடைவெளியில், ஒன்றரை அடி ஆழத்திற்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி பார்த்தால், செடிக்குச் செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும். ஒவ்வொரு குழியிலும் மூன்று கிலோ தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம் போட்டு ஆற விட வேண்டும்.

விதைத்தல்

குழிகளின் மத்தியில் மூன்று செ.மீ ஆழத்தில், 60 நாட்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

முருங்கை நாற்றை நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

செடி முருங்கையில் சாகுபடி

பருவம்

செடி முருங்கை சாகுபடி செய்ய நவம்பர், டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது.

மண்

செடி முருங்கை எல்லா மண் வகையிலும் வளரும். எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது. மண்ணில் கார அமிலத்தன்மை 6 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.

இரகங்கள்

பி.கே.எம்.1, 2, கே.ம்.1 ஆகிய இரகங்களை நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பின் 2.5 மீட்டர் இடைவெளியில் 45:45:45 செ.மீ, நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். குழிகளை ஒருவாரம் ஆறப்போட்டு, பின் நன்கு மக்கிய தொழுஉரம் மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.

விதை

செடிமுருங்கை விதை மூலம் நடவு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.

விதைத்தல்

குழிகளின் மத்தியில் மூன்று செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும். ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

குழிகளை சுற்றி 60 செ.மீ அகலத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும். விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைக்கும் போது நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

நாட்டு முருங்கை

காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்திற்கும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கு வைக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்திற்கும் 30 கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும்.

செடி முருங்கை

செடி ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். ஆறாவது மாதத்தில் யூரியா மட்டும் ஒரு செடிக்கு 100 கிராம் இட வேண்டும். ஒவ்வொரு வருடமும் உர அளவை 100 கிராம் அதிகரிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்தால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றி மகசூல் அதிகரிக்கும்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

புழுத் தாக்குதல்

முருங்கை இலைகளில் (கீரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத் தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

கம்பளிப்பூச்சித் தாக்குதல்

சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். இதற்கு வேப்பெண்ணைக் கரைசல் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

முருங்கையில் இலைப்பிணிக்கும் புழு

இதை தடுக்க குளோரிபைரிபாஸ் ஒரு மில்லி அல்லது தையோடிகார்ப் நனையும் தூள் ஒரு கிராம் இதில் ஏதேனும் ஒரு மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் காலை வேளையில் தெளிக்க வேண்டும். மருந்து மரங்களில் நன்கு ஒட்டும் அளவில் இருக்க வேண்டும்.

முருங்கையை தாக்கும் பழ ஈ

பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேகரித்து மண்ணில் புதைத்து அல்லது தீயிட்டு எரித்து விட வேண்டும். முருங்கை பூக்கும் தருணம், மாலத்தியான் 2 மில்லி மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

பிஞ்சு வளர ஆரம்பித்த 20 முதல் 30 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவு பென்தியான் அல்லது ஒரு லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பின்னர் 15 நாட்கள் கழித்து டைகுளோரோவாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மருந்து தெளித்த ஒரு வார காலத்திற்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது.

முருங்கை மரம் பட்டுப்போவதை தடுக்கும் முறை

தேயிலை கொசு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கம் அதிக அளவில் முருங்கையில் காணப்படும்.

அதனுடைய ஊசி போன்ற வாய் பகுதியிலிருந்து, முருங்கையின் இளம் தளிர்கள், மொட்டுகள் மற்றும் குறுத்துகளில் சாற்றினை உறிஞ்சுகிறது. மேலும் ஒரு வித நச்சு திரவத்தையும் சுரப்பதால், குருத்துக்கள் முற்றிலும் வாடிவிடுகிறது. ஒரு லிட்டர் நீரில் வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பம்கொட்டை சாறு 5 சதவீதம் தெளித்து தாக்குதலை குறைக்கலாம்.

ஊடுருவிப்படியக்கூடிய மருந்து ரகங்களான டைமீத்தோயேட் ஒரு லிட்டருக்கு 2 மில்லி, அதே அளவுகளில் புரபனோபாஸ், தயோக்ளோப்ரிட் ஏதேனும் ஒன்றை அடித்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

6-ம் மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40 நாட்கள் மட்டுமே காய் இருக்கும். சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

ஊடுபயிர்

தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் பொழுது ஊடுபயிராக தக்காளி, வெண்டை, தட்டைப்பயிறு போன்ற குறுகிய காலப் பயிர்களைப் பயிர் செய்யலாம்.

முருங்கையின் பயன்கள்:

முருங்கை பூ மற்றும் காயை உண்ணும்பொழுது நியாபக மறதியை போக்கி, நினைவாற்றலைத் தூண்டும்.
முற்றிய முருங்கை விதைகளை காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி, பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கை பூ, முருங்கை இலை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நரம்புகளுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.

கர்பிணிப்பெண்கள் மற்றும் தாய்மார்கள் முருங்கை இலை மற்றும் பூக்கள் சாப்பிடும்பொழுது தாய்க்கு அதிக அளவு பால் சுரக்கும்.

முருங்கை சாறு முகப்பொலிவும் அழகும் பெற உதவுகிறது.

இருமல்,தொண்டைவலி,நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றிற்கு முருங்கை சாறு சிறந்த நிவாரணி ஆகும்.