வாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

வாழை சாகுபடி முறை
Agriwiki.in- Learn Share Collaborate

வாழை சாகுபடிமுறை மற்றும் பயன்கள்

Table of Contents

 

தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது.

இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம்.

நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் அலங்காரச் செடியாகவும், நார் பெறுவதற்காகவும், வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது.

எப்படி பயிரிடுவது…?

இரகங்கள் மற்றும் இடைவெளி

 

நிலம் இரகங்கள் இடைவெளி பயிர் எண்ணிக்கை எக்டர் தோட்டக்கால் நிலம் ரோபாஸ்டா, நேந்திரன் 1.8 x 1.8 மீ 3086 குள்ளவாழை 1.5 x 1.5 மீ 4444 நஞ்சை நிலம் பூவன், மொந்தன், ரஸ்தாளி, நெய்வண்ணன், நெய்பூவன் 2.1 x 2.1 மீ 2267 மலைப்பகுதி விருப்பாட்சி, சிறுமலை, நமரை மற்றும் லாடன் 3.6 x 3.6 மீ 750 (கலப்பு பயிர்)

பருவம்

ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம், செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம், டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள். ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும். அக்டோபர் மாதத்தில் பயிர் செய்த வாழை மெதுவாகவும், ஒரே சீராகவும் வளரும்.

மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் உகந்தது. காரமண் மற்றும் உப்பு மண் உகந்ததல்ல. 6 – 7.5 கார அமிலத் தன்மையுடன் உள்ள இரும்பொறை மண்ணில் வாழை நன்றாக வளரும்.

நிலம் தயாரித்தல்

நன்செய் நிலம் :

இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு மண் அணைக்க வேண்டும்.

தோட்டக்கால் நிலங்கள் :

2 முதல் 4 முறை நன்கு உழ வேண்டும்.

படுகை நிலங்கள் :

மண் வெட்டியால் ஒரு அடி ஆழத்திற்குக் கொத்திவிட வேண்டும்.

மலைப் பகுதி :

வனப்பகுதியை சரி செய்து சமஉயர வரப்பு அமைக்க வேண்டும்.

பயிரிடுவதற்கு முன், பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, தட்டைப்பயிறு வகைகளை பயிர் செய்து, நிலத்திலேயே உழுது விடவேண்டும்.

கலப்பை கொண்டு மண்கட்டிகளை உடைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.

நிலத்தைத் தயார் செய்யும் போது ஒரு எக்டருக்கு 50 டன் எருவை அடியுரமாக இட்டு, மண்ணுடன் கலக்க வேண்டும்.

விதை நேர்த்தி

 

பக்கக் கன்றுகளை முன்நேர்த்தி செய்தல்

 

கிழங்குகளின் அழுகிய பகுதிகளை, வேர்களை வெட்டி சரி செய்ய வேண்டும். தண்டுப்பகுதியில் 20 செ.மீ அளவு இருக்குமாறு கிழங்கை வெட்டி, பக்கக்கன்றுகளை அளவுக்கேற்றவாறு தரம் பிரிக்க வேண்டும்.

ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி இரகங்களில் வாடல் நோயைத் தவிர்க்க, தாக்கிய வேர்கிழங்கை வெட்டி, 0.1% எமிசான் கரைசலில் (1 லிட்டர் நீரில் 1 கிராம்) 5 நிமிடங்களுக்கு நனைத்து எடுக்க வேண்டும்.

ஒரு பக்கக் கன்றுக்கு 40 கிராம் கார்போப்யூரான் 3ஜி குருணைகளை கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். (4 பங்கு களிமண், 5 பங்கு நீர், கார்போப்யூரான் கலந்த கலவையில் கிழங்கை நனைப்பதால் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்).

மாற்றாக, கிழங்கை 0.75% மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் நனைத்து, 24 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.

5-6 இலைகளை உடைய திசு வளர்ப்பு வாழையைப் பயன்படுத்த வேண்டும்.

விதைத்தல்

வாழை சாகுபடியில் 4 விதமான நடவு முறைகள் உள்ளன.

  1. ஒற்றை வரிசை முறை
  2. இரட்டை வரிசை முறை
  3. சதுர நடவு முறை
  4. முக்கோண வடிவ நடவுமுறை
ஒற்றை வரிசை முறை

இந்த முறையில், வரிசைகளுக்கு உள்ளே இடைவெளி குறைவு, வரிசைக்கு இடையே உள்ள இடைவெளி அகலமாக இருக்கும்.

இந்த முறை மூலம் நல்ல காற்றோட்டமும், ஈரமான இலைகள் விரைவில் உலரவும், பூஞ்சாண நோய் தாக்குதல் குறையவும் வாய்ப்புள்ளது.

ஆனால், தோட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதால் விளைச்சல் குறைந்துவிடும்.

இரட்டை வரிசை முறை

இந்த முறையில், 2 வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளி 0.9 – 1.20 மீ மற்றும் மரத்திற்கு மரம் உள்ள இடைவெளி 1.2 – 2 மீ.

இந்த இடைவெளியில் இடை உழவு செயல்களை எளிதாக செய்ய முடிகிறது. சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ஆகும் செலவும் குறைகிறது.

சதுர நடவு முறை

இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். இந்த முறையில் வாழைத் தோட்டத்தை வடிவமைப்பது எளிது.

கன்றுகளுக்கு இடையே 1.8×1.8 மீ இடைவெளி தேவைப்படும்.

இந்த முறையில் கன்றுகளை சதுரத்தின் மூலைக்கு ஒன்றாக நடவேண்டும். நான்கு மரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் குறுகிய கால பயிர்களை பயிரிடலாம்.

முக்கோண நடவு முறை

இந்த முறை திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை நடவு செய்ய ஏற்ற முறையாகும்.

இதில் வரிசைகளுக்கு இடையே 1.5 மீ இடைவெளியும், மரத்திற்கு மரம் 1.8 மீ இடைவெளியும் விடவேண்டும்.

நடவு செய்தல்

மே – ஜுன் அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். பக்கக் கன்று ஒன்றை சிறிய குழிகளின் நடுவில் மண்ணிற்கு மேலே 5 செ.மீ. அளவிற்கு தண்டுப் பகுதி வெளியே தெரியுமாறு நடவேண்டும். நட்டபின் பக்கக் கன்றை சுற்றி மண்ணை அழுத்தி அமுத்துவதால் காற்றிடைவெளிகளை தவிர்க்கலாம்.

திசு வளர்ப்பு கன்றுகள் குழிகளின் மேலாக மண் மட்டத்திற்கு நடவேண்டும். கன்றுகளை நடுவதற்கு முன் வேர்களுக்கு எந்த வித சேதம் ஏற்படாமல் பாலித்தீன் பைகளை அகற்றவேண்டும். கன்றுகளை நட்டபின் பாசனம் செய்யவேண்டும்.

கன்றுகளை நட்ட உடனேயே பகுதியளவிற்கு நிழல் ஏற்படுத்தவேண்டும்.

கன்றுகளை நான்கு முறையில் நடவு செய்யலாம்.

  1. குழியில் ஊன்றும் முறை
  2. சால் முறை
  3. அகழி நடவு முறை
  4. அடர் நடவு முறை
குழியில் ஊன்றும் முறை

புன்செய் நில சாகுபடி முறையில், குழியில் ஊன்றும் முறை பொதுவான ஒரு முறையாகும். 60x 60 x60 செ.மீ அளவுள்ள குழிகளை தோண்டி, அதில் மண், மணல், தொழு உரம் 1:1:1 என்ற விகிதத்தில் உள்ளவாறு கலந்து, நிரப்பவேண்டும். இதில், ஒரு குழிக்கு 2 (அ) 3 (அ) 4 பக்கக் கன்றுகள் வரை நடவு செய்யலாம்.

பக்கக் கன்றுகளை குழியின் நடுவில் நட்டு, மண்ணைச் சுற்றி அணைக்கவேண்டும். இது பொதுவாக குட்டை கேவண்டிஷ், ரஸ்தாளி, ரொபஸ்டா, பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழை இரகங்களில் பின்பற்றப்படுகிறது.

 

சால் முறை

இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். நிலத்தை தயார் செய்த பிறகு, 20-25 செ.மீ ஆழமுடைய குழிகளை 1.5 மீ இடைவெளி இருக்குமாறு அமைக்க வேண்டும். இதில் பக்கக் கன்றுகளை சால்களில் தேவையான இடைவெளி விட்டு நடவேண்டும். தொழு உரத்தை மண்ணுடன் கலந்து இட்டு, பக்கக் கன்றுகளை சுற்றிலும் மண்ணை இறுக்கமாக அணைக்க வேண்டும். வருடா வருடம் சாகுபடி செய்யும் முறைகளில் சால்களில் நடும் முறையே பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் கிழங்குகள் வெளியே தெரிவதால், மண் அடிக்கடி அணைக்கவேண்டும்.

 

அகழி நடவு முறை

தமிழ்நாட்டில் காவேரி டெல்டா பகுதியின் நன்செய் நில சாகுபடியில் இந்த அகழி நடவு முறை வழக்கத்தில் உள்ளது. நெல்லைப் போன்று அதிகப்படியான நீர் பயன்படுத்தி, நிலம் தயார் செய்யப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் நீரை வயலில் நிறுத்தி வைத்து, பின் வயலில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும். சேற்று வயலில் பக்கக் கன்றுகளை மண்ணில் அமிழ்த்தி நடவு செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து 15 செ.மீ ஆழமுள்ள அகழிகள் தோண்டி, ஒவ்வொரு பாளத்திலும் 4 (அ) 6 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

பக்கக் கன்றுகள் 1-3 இலைகள் வரும் வரை நடவு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 20-25 செ.மீ ஆழத்திற்கு அகழிகளை ஆழப்படுத்தவேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்த மூன்றாவது மாதத்தில் அகழிகளை 60 செ.மீ இருக்குமாறு அகலப்படுத்தி, ஆழப்படுத்தவேண்டும். சில அகழிகள் வடிகால்களாக பயன்படுத்தப்படுகிறது. 2 மாதங்களுக்கு பிறகு, அகழிகளை சுத்தப்படுத்தவேண்டும். அங்கக சுழற்சிக்காக பயிர்களின் மட்கிய கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம்.

அடர் நடவு முறை

அடர் நடவு முறை என்பது பொதுவாக பரிந்துரைக்கப்படும் இடைவெளியை விட குறைந்த இடைவெளியில் நடவு செய்வதாகும்.

இந்த முறையில் ஒரு எக்டருக்கு 4400 – 5000 வாழை மரங்களை வளர்க்கலாம். மகசூலும் ஒரு எக்டருக்கு 55 – 60 டன் அதிகமாகக் கிடைக்கும். பொதுவாக சதுர அமைப்பு (அ) செவ்வக அமைப்பு முறையில் நடவு செய்யப்படுகிறது.

ஒரு குழியில் மூன்று பக்கக் கன்றுகளை 1.8×2.0 மீ ( 4600 கன்றுகள்/எக்டர்) என்ற இடைவெளி கேவண்டிஷ் இரகத்திற்கும், நேந்திரன் இரகத்திற்கு 2×3 மீ ( 5000 கன்றுகள் /எக்டர்) என்ற இடைவெளியும் விடப்படுகிறது.

நீர் நிர்வாகம்

நடவு செய்த 4வது மாதம் முதல் சொட்டு நீர் பாசனம் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு மரத்திற்கு 15 லிட்டர் தண்ணீர் கொடுக்கவேண்டும். மேலும் 5வது மாதம் முதல் தார் வெளிவரும் தருணம் வரை 20 லிட்டர் தண்ணீரும், அதன் பின்னர் அறுவடை வரை 25 லிட்டர் தண்ணீர் கொடுக்கவேண்டும்.

உரங்கள்

அரை வட்ட வடிவ பாத்தியை மரத்திற்குக் கீழே அதாவது மரத்தைச் சுற்றி அமைக்க வேண்டும். அதில் 315 கிராம் (40:30:40) தழை, மணி, சாம்பல் சத்தைக் கலந்து இட வேண்டும். பின் 130 கிராம் மியூரோட் சாம்பல் சத்தை அக்டோபர், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இட வேண்டும். அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தை 20 கி/மரம் என்ற அளவிற்கு 2-வது மற்றும் 4வது மாதத்தில் அனைத்து இரகத்திற்கும் இட வேண்டும்.

திசு வளர்ப்பு வாழைக்கு 50 சதவிகித உரம் கூடுதலாக நடவு செய்த 2,4,6 மற்றும் 8-வது மாதங்களில் இடவேண்டும்.

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்

நடவு செய்து ஒரு மாதம் கழித்து, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து வாழை மற்றும் ஊடுபயிர்களின் மேல் தெளிக்க வேண்டும். இரண்டு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 13 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் என்ற அளவிலும், நான்கு மாதங்கள் கழித்து 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் புளித்த மோர் என்ற அளவிலும் கலந்து தெளிக்க வேண்டும்.

ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பிறகு பெரும்பாலான ஊடுபயிர்களை அறுவடை செய்து விட முடியும். அறுவடை முடிந்த பயிர்களின் கழிவுகள் அனைத்தையும் மூடாக்காக போட்டு விட வேண்டும். மூடாக்கிட்டால்தான் ஜீவாமிர்தத்தின் முழுப்பயனும் கிடைக்கும். பிறகு 6, 8, 10, 12ம் மாதங்களில் 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தத்தையும், 4 லிட்டர் தேங்காய்த் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

 

இடைக்கன்றினை நீக்குதல்

 

அதிகப்படியான மற்றும் தேவையில்லாத இடைக்கன்றினை வாழையிலிருந்து அகற்ற வேண்டும்.

தோட்ட நிலம் மற்றும் புன்செய் நிலங்களில் மாத இடைவெளியில் இடைக்கன்று நீக்கப்படுகிறது.

மழை வாழையில், ஒரு குற்றில் இரண்டு குலை தாங்கியுள்ள மரங்கள் மற்றும் இரண்டு இடைக்கன்றுகள் மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை அகற்ற வேண்டும். மற்றவற்றில் ஒரு மரத்திற்கு ஒரு இடைக்கன்று மட்டுமே மறுதாம்பிற்காக விட வேண்டும்.

இந்த கன்றுகளை 2 மாத நிலையில் நுனி வெட்டப்பட்டு, நுனி வளர்ச்சியை தடை செய்து, கிழங்கு பெரிதாவதற்கு வழி செய்ய வேண்டும். முதல் பயிரை அறுவடை செய்யும் போது, இந்தக் கன்றுகள் அடுத்த மறுதாம்பிற்கு தயாராக இருக்கும்.

முட்டு கொடுத்தல்

குலை தள்ளும் சமயத்தில் உயரமான, அதிக எடையுள்ள குலைகளை தரும் இரகங்களுக்கு முட்டுக் கொடுப்பது அவசியம் ஆகும்.

3-4 வயதுள்ள மூங்கில் அல்லது திடமான மரங்கள் பொதுவாக முட்டு கொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது. கயிறு அல்லது பாலித்தீன் கம்பியையும் முட்டு கொடுக்க பயன்படுத்தலாம்.

மூடாக்கு போடுதல்

மூடாக்கு என்பது உலர்ந்த தாவர பொருள் அல்லது பாலித்தீன் விரிப்பு ஆகும். இது மண்ணை மூட பயன்படுகிறது. இது நீர் ஆவியாவதை குறைக்கவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும், மண் அரிப்பை குறைக்கவும், களை வளர்ச்சியை கட்டுப்படுத்தவும் மற்றும் அவை மட்கும் போது தாவரத்திற்கு சத்தளிக்கவும் உதவுகின்றது. வாழை இலை சருகு மூடாக்கு மற்றும் பாலித்தீன் விரிப்பு என்று இரு விதமான மூடாக்கு, வாழை சாகுபடியில் பயன்படுத்தப்படுகின்றது.

உதிர்ந்து போன சூல்தண்டு மற்றும் பூவிதழ்களை நீக்குதல்

நோய் பரவலைத் தடுக்கவும், முதிர்ந்த இலைகள் தண்டைச் சுற்றி ‌தொங்காமல் இருக்கவும், ஒளி படுவதை அதிகரிக்கவும் காய் சேதத்தைத் தடுக்கவும் பழைய, உதிர்ந்த இலைகளை அகற்ற வேண்டும்.

நல்ல குலை வளர்ச்சிக்கு குறைந்தது 6 முதல் 8 ஆரோக்கியமான இலைகள் வாழையில் பூக்கும் பருவத்தில் இருப்பது அவசியம். இலைகளை முற்றிலும் நீக்குவதும் குலை வளர்ச்சியைப் பாதிக்கும்.

குலையை மூடுதல்

சணல்பை அல்லது பாலித்தீன் கொண்டு குலையை மூடுவதால் காய்களை அதிக சூரிய ஒளி, காற்று மற்றும் தூசிகளிலிருந்து பாதுகாக்கலாம். கேவண்டிஷ் மற்றும் நேந்திரன் வாழைகளில் குலையை மூடுவதன் மூலம் நல்ல செழிப்பான நிறம் கிடைக்கிறது.

குலையை மூடுவதற்காக பயன்படுத்தப்படும் துளையிடப்பட்ட அல்லது பாலித்தீன் பைகளால் மகசூலை 15 – 20% வரை அதிகரிக்கச் செய்யலாம்.

துளையிடப்பட்ட சணல்/ பாலிதீன் பைகள் கொண்டு மூடுவதால் காம்பு‌ அழுகுவதைக் குறைக்கலாம்.

சீப்பு நீக்குதல்

வாழைக் குலையில் 7 முதல் 8 சீப்புகள் மட்டும் இருக்குமாறு அடிப்பகுதியில் சிறிய அளவில் உள்ள ஒன்றிரண்டு சீப்‌‌புகளை நீக்கிவிடுவது நல்லது.

கொண்ணை உரித்தல்

வாழை மரத்திலிருந்து குலைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், ஒளிச்சேர்க்கை அணுக்கள், நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது கொண்ணையாகும்.

குலை முதிர்ச்சி பெறும் சமயத்தில் நல்ல சூரிய ஒளி அதிகம் படும்போது கொண்ணையில் எரிந்தது போன்ற காயங்கள் தோன்றும். இக்காயத்தில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் தாக்கக் கூடும்.

இச்சூழ்நிலையில் கொண்ணை பாதிக்கப்படுவதால் காய்களுக்குக் கிடைக்க வேண்டிய ‌நீர், சத்துகள் மற்றும் ஒளிச்சேர்க்கைப் பொருட்கள் கிடைக்கப் பெறாததால் காய்கள் சரியாக வளர்ச்சியடையாமல், கீழே விழுந்து விடவும் வாய்ப்‌‌‌‌புள்ளது.

எனவே அதிக சூரிய ஒளிபடும் நாட்களில் கொண்ணையை வாழை இலைகளை கொண்டு மூடிவிட வேண்டும்.

காற்றுத் தடுப்பான்

சிற்றகத்தி, சவுக்கு போன்ற காற்றுத் தடுப்புத் மரங்களை, வயல் ஓரங்களில் கிழக்கு மேற்கு திசைகளில் வளர்ப்பதன் மூலம் அதிவேக காற்றினால் மரங்கள் சாய்வதைத் தடுக்க முடியும்.

பயிர் பரப்பு மற்றும் ஒளி குறுக்கீடு

மற்ற பழ வகைகளைப் போல் அல்லாமல், வாழையில் தழை வளர்ச்சியானது பூத்தல், பழத்தின் வளர்ச்சி பருவத்தைப் பொருத்து இல்லை. வாழையின் வளர்ச்சியானது நடவு செய்யும் காலம், நடவு செய்யும் கன்றுகளின் வகை மற்றும் அளவு, நிலவும் வெப்பநிலை போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

பயிரின் அடர்த்தி மற்றும் அதன் குறுக்கீடானது 1.2×1.2மீ அளவு பயிர் இடைவெளி விடும் போது, குறைந்த அளவு சூரிய ஒளி படுவதால் சக்தியாக மாற்றும் திறன் அதிகமாக இருக்கும். 2.1×2.1மீ அளவு இடைவெளி விடும் போது சக்தியாக மாற்றும் திறன் குறைவாக இருக்கும்.

பயிரின் உயரம் மற்றும் தடிமன்

இடைவெளியை குறைப்பதால் தண்டின் உயரமும் அதிகரிக்கும். இரகங்களைப் பொருத்து, பயிரின் உயரம் மாறுபடும்.

பயிரை அடர்த்தியாக நடவு செய்வதால் தண்டின் தடிமன் குறைகிறது.

ரொபஸ்டா வாழையின் தடிமன், பயிரின் அடர்த்தி வேறுபடுவதால் மாறுவதில்லை. 1.2 x1.2 மீ் அளவு குறைந்த இடைவெளியிலும் உயரமாக வளரும் தன்மை கொண்டவை.

பூவன் ரகத்தில், 2.1×2.1மீ அளவு இடைவெளியிலிருந்து 1.5×1.8மீ அளவு இடைவெளிக்கு குறைக்கும் போது மரத்தின் உயரம் அதிகரிக்கிறது, தண்டின் தடிமனும் குறைகிறது.

பூத்தல் மற்றும் பழம் முதிர்ச்சியடைதல்

குட்டை கேவண்டிஷ் வாழைக்கு குறைந்தது 3.24 மீ அளவு பரப்பளவு தேவைப்படுவதால், அதற்கு 1.8 x1.8 மீ (அ) 2.7×1.2 மீ அளவு இடைவெளி விடவேண்டும்.

ஒரு எக்டருக்கு 1600 முதல் 10000 மரங்கள் என்ற பயிர் அடர்த்தியுடன் 1.0×1.1 முதல் 2.0×2.0 மீ அளவு இடைவெளி இருந்தால், பூத்தல் மற்றும் பழம் முதிர்ச்சியடைதல் தாமதமாகிறது.

குலை எடை மற்றும் தரம்

குட்டை கேவண்டிஷ் ரகத்தில் 1.8×1.8 மீ் இடைவெளியில் ஒரு குழிக்கு இரண்டு கன்றுகள் என்று நட்டால், மகசூல் அதிகமாகும். குலை அளவு மற்றும் பயிர் முதிர்ச்சியடையும் காலத்தை பாதிக்காது.

ரொபஸ்டா இரகத்திலும் கூட இரண்டு கன்றுகள் வரை நட்டால், விளைச்சல் அதிகமாகும்.

பயிர் பாதுகாப்பு

 

கிழங்கு வண்டு

இதனைக் கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் தண்டுப் பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறிவிடவேண்டும்.

அசுவினி

இதனைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீத்தைல் டெமட்டான் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தண்டின் மேலிருந்து அடி வரை தெளிக்கவேண்டும். குலை வந்த பிறகு மருந்து செலுத்தக்கூடாது.

சாறுண்ணிகள் மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சி

எக்டருக்கு மீத்தைல் டெமட்டான் 20 இசி 2 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் ஏதாவது ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும்.

நூற்புழுக்கள்

நடவிற்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.

தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.

வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன் மீது 40 கிராம் கார்போஃபியூரான் குருணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நடவு செய்ய வேண்டும்.

தண்டுத் துளைக்கும் வண்டு

பக்கக் கன்றுகளை அதிகம் வளரவிடாமல் வெட்டி அகற்றிவிடவேண்டும். வண்டு தாக்கிய மரங்களை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து பின்பு தீயிட்டு அழிக்கவேண்டும்.

மோனோகுரோட்டோபாஸ் 1.50 மில்லியுடன் 350 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். இம்மருந்து கரைசலைத் தண்டின் அடிப்பாகத்திலிருந்து 60 செ.மீ உயரத்தில் சாய்வாகக் கீழே நோக்கி தண்டினுள் ஆழமாகச் செலுத்த வேண்டும்.

இதே போன்று வாழைத் தண்டில் 150 செ.மீ உயரத்தில், கீழே செலுத்திய பக்கத்திற்கு எதிர்புறத்தில் மேலும் 2 மில்லி செலுத்தவேண்டும். மொத்தமாக ஒரு மரத்திற்கு நான்கு மில்லி அளவு மருந்து செலுத்தவேண்டும்.

மரத்தின் 5வது மாதம் முதல் 8வது மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து போடுவதன் மூலம் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.

சிகடோக்கா இலைப்புள்ளி நோய்

வைரஸ் தாக்கப்பட்ட மரங்களை அழித்து அப்புறப்படுத்த வேண்டும். மானோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாள் இடைவெளியில் மூன்றாவது மாதத்திலிருந்து ஊசி மூலம் தண்டு பாகத்தில் செலுத்தவேண்டும்.

5 மில்லி பெர்னோக்சான் திரவத்தை ஊசி மூலம் தண்டுக்குள் செலுத்தவேண்டும்.

நோய் தாக்கப்பட்ட செடிகளை வேரோடு அகற்றிடவேண்டும்.

குழிகளில் ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பை இட்டு மண்ணால் மூடி விடவேண்டும்.

கார்பன்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்து ஊசி மூலம் தண்டுப்பகுதியும், கிழங்கும் சந்திக்கும் பகுதியில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ ஆழத்தில் செலுத்தவேண்டும். இவ்வாறு கன்று நட்ட 3வது மற்றும் 6வது மாதங்களில் செய்யவேண்டும்.

கொட்டை வாழை

2 கிராம் சோடியம் உப்பு 2,4 – டியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். இந்த அளவு 200 தார்களுக்குப் போதுமானது.

அறுவடை

கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மண், இரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.

மகசூல்

ஒரு எக்டரில் இருந்து ஒரு வருடத்திற்கு பூவன் 40 முதல் 50 டன், மொந்தன் 30 முதல் 40 டன், ரஸ்தாளி 40 முதல் 50 டன், ரொபஸ்டா 50 முதல் 60 டன், குள்ள வாழை 50 முதல் 60 டன் வரை மகசூல் கிடைக்கும். இரகங்களைப் பொறுத்து மகசூல் மாறுபடும்.

ஊடுபயிர்

வாழையின் ஆரம்ப நிலை வளர்ச்சியின் போது, ஊடு பயிரிடுவது எளிதாகும். வாழையை தொடர்ந்து கத்திரி, கருணை கிழங்கு, மஞ்சள், மிளகாய் முதலியன ஊடு காலநிலையை பொறுத்து பயிரிடப்படுகின்றன.

பயன்கள்

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.
வாழைப்பழம் அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.

வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது