வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது

வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது
Agriwiki.in- Learn Share Collaborate
வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது

கட்டிட கட்டுமானம் பற்றிய உபயோகமான தகவல்: (வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது என்பதுதான் இன்றைய தகவல்)

நீங்கள் ஒரு வீடு கட்டணும்  என்று முடிவு செய்தவுடன் என்ன செய்வீர்கள்…வீட்டிற்கான கட்டிட வரைபடம்(plan) வேண்டி ஒரு பொறியாளரை அணுகுவீர்கள்…அப்படி எங்களை அணுகுவோரெல்லாம் எங்களிடம் வலியுறுத்தி சொல்லுவது வாஸ்துப்படி பிளான் போடுங்க சார் என்பர்!

அப்படி அவர்கள் கேட்காவிட்டாலும் நாங்களும் இப்போதெல்லாம் வாஸ்துமுறைப்படிதான் வரைபடம் தயாரிக்கிறோம்!

ஏனெனில் இன்று வாஸ்து என்பது எல்லோரும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது

!நாங்கள் அதை தவிர்ப்பது மிகவும் கடினமான விஷயம்தான்…

இந்துக்கள் மட்டுமல்ல பிற மதத்தினர்கூட சார் வாஸ்துமுறைப்படியே செய்யுங்க என்கின்றனர்! ஏன்னா நாங்க கட்டும் வீட்டில் நாங்க மட்டும் குடியிருக்கப்போவதில்லை…வாடகைக்கு வருபவர்களும் இருக்கிறார்கள்…எனவே அவர்கள் விருப்பப்படி வீடு இருக்கவேண்டுமல்லவா என்று பிசினஸ் மைண்ட் இருந்தாலும்…பரந்த மனமும் இருக்கிறது சந்தோசமான விஷயம்.

அட நீங்க வேற…வாஸ்துப்படி வீடு கட்டலன்னா நம்ம ஊர்ல கட்டுற வீட்டையோ,பிளாட்டையோ விற்பதே கடினம்ங்க…அதனால லட்சக்கணக்கிலோ அல்லது கோடிக்கணக்கிலோ பணத்தை இறைத்து வீடு கட்டும்போது …எல்லோரும் திருப்திபடும்படிதான் கட்டுவோமே…அதுக்குன்னு நாம் ஒன்னும் தனியா செலவு பண்ணி கட்டப்பொறதில்ல…இங்க இருக்கிற அறை அங்க இருந்திட்டு போகட்டுமே என்று ஏறத்தாழ எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்…

அதனால் நல்லதோ கெட்டதோ அப்படி செய்வதால் எதுவும் ஒன்றும் குறைந்துபோகப்போவதில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டதால் வாஸ்து காட்டில் மழைதான் போங்க…வாஸ்து பார்ப்பவர்களுக்கோ அடைமழை பணமழை!

வாஸ்து பார்ப்பவர்களிடம் போனீங்கன்னா வாஸ்துவோட ராசி, நட்சத்திரம், குலம், கோத்திரம்,  மந்திரம்னு சொல்லி பணத்தை பிடிங்குற வேலைதான் நிறைய நடக்குது.

அவர்கள் சொல்கிற வீடு கட்டணும்னா நம்ம இட அமைப்புக்கு வீடு கட்டுவதே கடினம்தான்!

ரொம்ப யோசிச்சோம்னா… அதுக்கு ஒரு பரிகாரத்தை சொல்லி பரவாயில்ல பண்ணலாம் என்று காசை கறக்கும் வேலையில்தான் குறியா இருப்பாங்க…

எனவே ரொம்ப குழப்பிக்காம உங்க மன திருப்திக்காக ஒரு சில விஷயங்களை மட்டும் வாஸ்துமுறைப்படி செய்யலாம்…எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்…ஆனால் என் வாடிக்கையாளர் நம்பிக்கையை மதிப்பதுதான் தொழில் தர்மம்!

என் கொள்கையை அங்கே ஓரங்கட்டிவைத்துவிட்டு அவர் விருப்பப்படி செய்வதுதானே நியாயம்! அப்படித்தான் நான் இதுவரை செய்துவருகிறேன்…

வாஸ்து சம்மந்தமாக சில டிப்ஸ்…

பூஜை அறையானது ஈசானிய மூலை(வடகிழக்கு) இருத்தல் நலம்…

படுக்கை அறையானது (கணவன்-மனைவி தங்கும் அறை) குபேர மூலையில்(தென் மேற்கு) அமைத்தால் மிக்க நலம்! அப்போதுதான் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் (நான் சொல்லல…வாஸ்து சொல்லுது).

சமையலறை தென்கிழக்கு மூலை அதாவது அக்னி மூலை. வடமேற்கு மூலையிலும் அமைக்கலாம்(வாயு மூலை).

கழிப்பறைகளை கண்டிப்பாக குபேர மூலையிலும்(தென் மேற்கு) மற்றும் ஈசானிய மூலையிலும்(வட கிழக்கு) அமைக்கவே கூடாதாம்…

போர் அலலது கிணறு வெட்டுவது வடகிழக்கு மூலை…

செப்டிக் டேங்க் அமைப்பது வடமேற்கு அல்லது தென்கிழக்கு மூலை…

அதாவது வடகிழக்கு மூலை எப்போதும் பள்ளமாக இருக்கவேண்டும்…அதுக்குத்தான் போர் அங்கே போட சொல்றாங்க…

அதேபோல தென்மேற்கு மூலை எப்போதும் உயரமாக இருக்க வேண்டுமாம்…ஆகையினால்தான் படி ஹெட்ரூம் மற்றும் வாட்டர் டேங்கை அங்கே அமைக்கிறார்கள்!

பொதுவாகவே தெற்குப்பக்கம் உயரமாக இருப்பது நலம்! காம்பவுண்ட் சுவரைக்கூட தெற்கு பக்கம் கொஞ்சம் உயரமாக கட்ட சொல்கிறது வாஸ்து…

அதேபோல் தென்மேற்கு மூலையில் வெய்ட் இருக்கணுமாம்…அதான் அங்கே கட்டில், பீரோவுடன் கூடிய படுக்கை அறை அமைக்க சொல்கிறார்கள்!

ஹாலானது எப்போதும் கிழக்கு பக்கம் இருப்பது நலம்! ஏனென்றால் காலையில் சூரிய ஒளி ஊடுறுவும்போது சுறுசுறுப்பு கிடைக்குமல்லவா! நல்ல வெளிச்சமும் கிடைக்கும்!

பெரும்பாலும் நாம் தினசரி அதிகம் புழங்கும் பகுதிகளை (ஹால், சமையலறை, வராண்டா, போர்டிகோ, பின் வராண்டா) கிழக்கு பக்கத்தில் அமைப்பது நலம்!

படுக்கை அறை ,கழிவறை, குளியலறை, பெட்டக அறை போன்றவற்றை மேற்கு பகுதியில் அமைப்பது சிறப்பாக இருக்குமாம்!

படி ஏறும்போது எப்போதும் இடதுபுறமிருந்து ஏறவேண்டும் (clock wise)…Anti clock wise ஏற்றதல்லவாம்…

வீட்டின் வடது பக்கமும்,கிழக்கு பக்கமும் வளர்ந்திருக்கலாம்…ஆனால் தெற்கு,மேற்கு வளரக்கூடாதாம்…

அதுவும் தென்மேற்கு மூலை சரியாக 90 டிகிரியில் இருக்கவேண்டுமாம்…அதேபோல் தென்மேற்கு மூலையில் இருபக்கமும் எந்த ஓப்பனும் இருக்கக்கூடாதாம்…ஜன்னல்,கதவு,காம்பவுண்ட் கேட் எதுவும் வைக்கக்கூடாதாம்…அங்கிருந்து கிழக்கு பக்கமும்,வடக்கு பக்கமும் தள்ளி வைக்க வேண்டுமாம்…

சமையலறைக்குமேல் தண்ணீர் சம்மந்தப்பட்ட ரூம் எதுவும் இருக்கக்கூடாதாம்…

பூஜை அறைக்குமேல் கழிப்பறை அமைக்கக்கூடாது…பக்கத்திலும் கழிப்பறை இருக்கக்கூடாது…

படி ஒத்தைப்படையில் இருக்கவேண்டும்…

வீட்டின் வடக்கு பக்கமும்,கிழக்கு பக்கமும் அதிக இடம் விடவேண்டுமாம்…

சமையலறையில் சிங்க் வடகிழக்கு மூலையில் இருக்கவேண்டும்…

கழிப்பறையில் கோப்பையை வடக்கு,தெற்காக உட்காரும்படி பொருத்தவேண்டுமாம்…

சதுர வடிவஅல்லது செவ்வக வடிவ இடமே வீடுகட்ட உகந்த இடமாம்…முக்கோண வடிவ இடமோ அல்லது நீண்டு இருக்கும் இடங்கள் சரியான இடமில்லையாம்…அப்படி இருந்தால் அவற்றை நேர் பண்ணி மீதி இடத்தை தனியாக காட்டி அவற்றில் மரம் வளர்க்கலாமாம்…

பூஜை அறையில் கிழக்கு பக்கம் சாமி படம் மாட்டுவதுபோல் கப்போர்டு அமைப்பது நன்று…

வடக்கு மற்றும் தெற்கு பார்த்த வீடாக இருந்தால் காற்று நன்றாக வரும்…கிழக்கு பரவாயில்லை..மேற்கு பக்க வாசற்படியை பெரும்பாலோர் விரும்புவதில்லை…

தலவாசற்படிக்கு நேராக அனைத்து கதவுகளையும் அமைத்தால் காற்று நன்றாக வரும்…வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் காற்று வருவதுபோல் கதவு, ஜன்னல்களை அமைக்கவேண்டும்…

வீட்டின் அளவுகளை மனையடி சாஸ்திர அளவுகள்படி அமைப்பது முக்கியம்!

மேலே குறிப்பிட்டவற்றை கடைபிடிப்பதில் ஒன்றும் சிரமம் இருக்காது…எனவே ரொம்ப அலட்டிக்காமல் ஓவரா வாஸ்து பார்க்காமல் ஓரளவு கடைப்பிடித்து யாரும் குறை சொல்லாத அளவு வீடு கட்டி நிம்மதியாக இருங்கள் நண்பர்களே! ஊரோடு ஒத்து வாழுவோமே…இதற்கு உதவத்தான் பொறியாளராகிய நாங்கள் இருக்கிறோம்!

நாளை ஒரு முக்கிய செய்தியோடு வருகிறேன்…நன்றி வணக்கம்!

Note:
ஒரு சிறு திருத்தம் இருக்கிறது…. சாமி படங்கள் கிழக்கு திசையை பார்த்து இருக்க வேண்டும்…
கிழக்கில் அலமாரி அமைத்தால்… அது மேற்கு திசையை பார்த்து அமைந்துவிடும்….

தெற்கில் தலைவாசல் மட்டும் வீட்டின் அளவின் மையப் பகுதியில் அமைப்பது நல்லது அல்ல… தெற்கின் அலவை 10’ஆக பிரித்து வடக்கில் இருந்து அல்லது மேற்கில் இருந்தது 4’ஆவது பங்கில் வைக்க வேண்டும்… அந்த திசை எமன் திசையாம் அதனால் பார்வை நேராக படுவதை தவிர்க்கவும்…..

ஹரி