விவசாய கேள்வி – பதில்கள்

Agriwiki.in- Learn Share Collaborate

விவசாய கேள்வி – பதில்கள்…!

கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Table of Contents

தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம்.

கேள்வி : நிலக்கடலையில் அதிகமாக அசுவினி தாக்குகிறது என்ன செய்யலாம்?

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 3 முறை தெளிக்கலாம். இவற்றை தெளிப்பதன் மூலம் அசுவனி பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

கேள்வி : மானாவாரி, இறவை என்றால் என்ன? இதில் எது அதிக பயனுள்ளது?

மானாவாரி பயிர் என்றால் மழையை மட்டும் நம்பி பயிர் செய்வது. அதாவது வானம் பார்த்த பூமி.
இறவை என்றால் கிணறு, ஏரி, கால்வாய் பாசனம் மூலம் பயிர் செய்வது ஆகும்.
இரண்டும் பயன் உள்ளது. மானாவரி, இறவைக்கு ஏற்ப பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிர் செய்வதன் மூலம் இரண்டிலும் இருந்து அதிக மகசூல் பெறலாம்.

கேள்வி : முருங்கை பயிரிட ஏற்ற பருவம் எது?

பதில் : ஜீன் -ஜீலை மற்ரும் நவம்பர் – டிசம்பர் மாதம் முருங்கை பயிரிட ஏற்ற மாதம்.

அவரையில் வேர்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வழிவகை கூறவும்?

பிஜாமிர்த கரைசலை தெளிக்கலாம். வேப்பம் புண்ணாக்கை தொழு உரத்துடன் கலந்து ஓவ்வொரு செடிக்கும் 2 கை அளவு வைக்கவும்.

சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றேன். அதில் வேர் பகுதிகளில் அழுகல் ஏற்பட்டு செடிகள் காய்ந்துவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து விதைகளை விதைநேர்த்தி செய்து பின் நடவு செய்யலாம். அல்லது நீர் பாசனத்தில் ஒரு ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கலந்து கலந்து விடலாம். இதன் மூலம் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

கேள்வி : கரும்பில் மாவுப்பூச்சி மற்றும் பிசின் போல் உள்ளது இதற்கு என்ன செய்வது?

பதில் : வேப்பங்கொட்டைக் கரைசலலை தெளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி தீயில் எரித்துவிடுங்கள். இதன் மூலம் மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம்.
பச்சைமிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டுக்கோமியத்தில் ஊறவைத்து வடிகட்டி எடுத்து 300 மில்லியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கவேண்டும்.
ஸ்கிம்னஸ் பொறிவண்டு 500 வண்டுகள் விடவேண்டும் இரண்டு முறை விடலாம் முதலில் 250 வண்டுகள் பிறகு 250 வண்டுகள் என பிரித்து விடவேண்டும். இவை மாவுப்பூச்சியை உணவான சாப்பிட்டு 50 நாட்கள் வரை இருக்கும்.
மீன் அமில கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

சாமந்தி செடியில் வேர்நூற்புழுக்கள் தாக்கம் காணப்படுகிறது அதற்கு என்ன செய்வது?

பதில் : கேந்தி பூ செடியை ஊடுபயிராக நடவுச் செய்யுங்கள்.
வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து இடுவதால் நூற்புழுவின் தாக்குதல் குறையும்.
மேலும் உயிர் பூஞ்சாணமான பேசிலோமைசிஸ் லைலாசினஸ் ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் கரைத்து வேர்ப் பகுதி நனையும்படி தெளித்தால் நூற்புழு இறந்தவிடும்.
சாமந்தி நடவு செய்யும் முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸை 10 கிராம் வீதமும், டிரைக்கோடெர்மா விரிடியை 4 கிராம் வீதமும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நாற்றின் வேரை நனைத்து பின் நடவு செய்யவும். மண்ணில் சூடோமோனாஸ் புளோரசன்ஸை, டிரைக்கோடெர்மா விரிடியை தலா 2.5 கி.கி, எக்டர் வீதம் நூற்புழு கட்டுப்பாட்டிற்கு உபயோகிக்கலாம்.

கேள்வி : டீலக்ஸ் பொன்னி நெற்பயிரில் அழுகல் நோய் வருகிறது இதைத் தடுக்கும் வழி முறையை கூறவும்?

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து நாற்றுகளை நடவு செய்யும் முன் வேர் பகுதியை நனைத்து பின் நடவு செய்யலாம்.
நீர் பாசனத்தில் ஒரு ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கலந்து விடலாம். இதன் மூலம் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.