வீடு கட்டுவது VS வீடு வாங்குவது

வீடு கட்டுவது VS வீடு வாங்குவது
Agriwiki.in- Learn Share Collaborate
வீடு கட்டுவது VS வீடு வாங்குவது

இந்த தொடரின் மூன்றாம் பதிவை பார்த்து விட்டு என் நண்பன் அழைத்திருந்தான்.

சேலத்தில் இருக்கும் தன் அப்பா கட்டிய வீட்டையும் அதற்காக அவர் செய்த முயற்சியையும் பற்றி பேச்சு நீண்டது. அவர் அந்த வீட்டின் மேல் வைத்திருக்கும் பந்தத்தை தன்னால் உணரவோ புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொன்னான். நான் சென்னை ல 7 வருஷம் முன்னாடி அபார்ட்மெண்ட் புக் பண்ணும்போது இது லாம் எதுவுமே யோசிக்கலயே டா. நீ எழுதுன அளவுக்கெல்லாம் எமோஷனலா இன்வால்வ் ஆகல என்றான். சுமார் 6 வருஷம் முன்னாடி சென்னை OMR ல பில்டர் ஓட ஆஃபீஸ் போனேன்.மாடல் ஹவுஸ் பார்த்தேன்.ரேட் பேசினேன்.அவ்வளவு தான் என்றான்.

யோசித்தேன். சொந்த வீடு கட்டுவதற்கும் வாங்குவதற்கும் அவ்வளவு வித்தியாசமா? கட்டிய வீட்டை வாங்கிவிட்டால், அதில் பந்தம் கம்மியாகிவிடுமா என்ன? இல்லை என்றே தோன்றுகிறது.

நிலம் வாங்கி வீடு கட்ட முனையும் போது, நாம் அதனோடு நிறைய பயணிக்கிறேம். நிலம் வாங்குவதில் இருந்து வீடு முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியில் நம் பங்கு உண்டு. வீட்டின் வரைபடம் முடிவு செய்தல்,வாஸ்து,எலிவேஷன்,அறைகளின் வடிவமைப்பு, ப்ளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் டிசைன் என்று நாம் ஒவ்வொரு நிலையிலும் நம் குடும்பமாக கூடி முடிவு எடுக்கிறோம். எல்லோரும் சேர்ந்து வீட்டிற்கு என்ன டைல்ஸ் போடலாம், என்ன டிசைன் switch வாங்கலாம் என்று பார்த்து பார்த்து வாங்குவோம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல- எல்லோருக்கும் ஒரே விஷயம் பிடித்து விடுவதில்லை.கடைக்காரர் முன்னாடி சண்டையே போட்டாலும் இதை நாம் விரும்பியே செய்கிறோம். பேசிக் கொள்ளவே நேரம் கிடைக்காத பல குடும்பங்களை வீடு கட்டும் 6 மாதங்கள் பிணைத்து விடுகிறதோ என்று தோன்றிய நாட்கள் உண்டு.

ஆனால், கட்டிய வீட்டை வாங்கும் போது, மேல் சொன்ன எந்த விஷயமும் பெரிதாக படுவதில்லை! தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லையென்றாலும் இவ்விஷயங்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்பது தானே உண்மை! கட்டிய வீட்டை போய் பார்க்கிறோம். பார்ப்பதற்கு எப்படி இருக்கு என்பதை வைத்து முடிந்த அளவு எடை போடுவோம். பிடித்துப்போனால், ரேட் பேசி வாங்கிவிட முனைவோம். பில்டரிடம் ப்ரீ புக்கிங் செய்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை. கட்டிடம் மேலே எழும்ப எழும்ப அவ்வப்போது போய் பார்த்துக்கொள்வதை விட நாம் இன்வால்வ் ஆவதற்கு பெரிதாக ஸ்கோப் இருப்பதில்லை.

அதனால் நாம் வீடு கட்டுவதை விட வாங்கும் போது இணக்கம் குறைந்து விடுகிறதா என்ன? என்னைப்பொருத்த வரை வீடு வாங்குறோமோ கட்டுறோமோ.. நாம் ஓரே மாதிரி தான் இருக்கிறோம்.

பில்டர் சாவி ஒப்படைத்தவுடனேயே, அது உங்களுக்கென்றே உள்ள இடமாகி விடுகிறது. அபார்ட்மெண்டில் 100 வீடு இருந்தாலும் உங்கள் வீடு தனித்துவமாக தெரிய முனைகிறோம். ஒவ்வொரு சதுரடியும் நம் ரசனை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்கிறோம். இன்டீரியர்ஸ் மூலமாக 100 வீட்டில் என் வீடு இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அடையாளம் காண விழைகிறோம்.

பில்டர் கொடுக்கும் பொழுது 100 வீடும் ஒரே மாதிரி தான் இருந்தது. ஆனால் நீங்கள் குடியேறும் போது அதற்கென்று ஒரு அடையாளம் வந்து விடுகிறது. வாடகைக்காக வீடு கட்டினாலும் கூட நாம் மேலே பேசிய விஷயங்கள் மொத்தத்தையும் புறக்கணித்து விடுவதில்லை

எங்கள் கஸ்டமர் ஒருவர் வீட்டிற்கு tube light ஒன்று கூட மாட்ட வேண்டாம் என்றார். அதற்கு அவர் கூறிய காரணம்- மணல் கயிறு படம் பார்த்தேன். அதுலயே வீட்டில் tube light மாட்டிருக்காங்க. இத்தனை வருஷம் கழிச்சு எப்படிங்க அத மாட்றதுனு கேட்டார். ரசனைகளும் எதிர்பார்ப்புகளும் பலவிதம். சில நேரங்களில் அவர்கள் சொல்லாதவரை எங்களால் அவர்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை..

ஆக நம் சைக்காலஜி ஒரே மாதிரி தான் செயல்படுகிறது. ! இப்படி இருக்க, சில அடிப்படையான தேவைகளை நாம் மறந்து விடுகிறோம் என்று தோன்றுவதே இல்லை என்பது வேதனையான விஷயம்.

இத்தனை வருடங்கள் இந்த சைக்காலஜி மாறவே இல்லை. மாறப்போவதும் இல்லை மாற்றம் என்பது மாறாதது என்பது உண்மையென்றால் வீடு கட்டும் படலத்தில் நாம் கண்ட மாற்றங்க்ள் தான் என்ன?

#பெட்டர்மாஸ்_லைட்டே_தான்_வேணுமா?

சொந்த வீடே தான் வேணுமா? ஏன் இந்த வாடகை வீடு. ஒத்திக்கு வீடு லாம் வேண்டாங்களா?

வீட்டை கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப் பார்.

சிறு வயது முதல் எத்தனை முறை கேட்டுருப்போம். நம் முந்தைய தலைமுறைக்கு இதை விட வேறு என்ன பெரிதாக குறிக்கோள் இருந்தது. என்ன தான் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க முனைந்தாலும், கல்யாணத்துக்கு உழைப்பதை பிரசவ வார்டிலிருந்து ஆரம்பித்தார்கள். ஆனால் வீடு கட்டுவது? பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ, சொந்த வீடு பொதுவான ஒரு டார்கெட். நம் தலைமுறைக்கு இப்படியான ஆசை இருக்கிறதா? ஐந்து வினாடிக்கு பத்து முறை ரிமோட் மாற்றும் நமக்கு காலம் முழுவதும் இந்த பொறுப்பு சுமையாகத்தானே தெரிகிறது.

என்னங்க பையன் பேர்ல சொந்த வீடு இருக்கா என்று பெண் பார்க்கும் படலத்தில் கேட்கப்படாமல் இருந்தால் நம்ம வீடு வாங்குவோமா? உண்மைலயே நம்ம ஆசை பட்டுத்தான் வீடு வாங்கறோமா?

கடந்த 20 வருஷத்து ல அதிகரிச்ச பண புழக்கத்தோட கூட வேலையோட நிரந்தரத்தன்மை பற்றிய பயமும் அதிகரிச்சுருக்கு. ரிஷஷன், பிங்க் ஸ்லிப் எல்லாம் நமக்கு பரிச்சயமான வார்த்தைகளே.காலை ல வேலைக்கு வந்து ஐடி கார்ட் வேலை செய்யாம பார்க்கப் போக, அன்னிக்கே நமக்கு 3 மாசம் சம்பளம் கொடுத்து அனுப்பப் பட்டவர்கள் இல்லாமல் இல்லை.உங்க அப்பாக்கு எந்த வேலை இருந்ததுனால உங்க அம்மா கூட கல்யாணம் நடந்ததோ, அதே வேலை தான் உங்க காலேஜ் ஃபீஸ் கட்ட ஹெல்ப் பண்ணிருக்கும். உங்களால இப்படி யோசிக்க முடியுமா.ஒரே பொண்டாட்டி/புருஷன் கூட வாழ்ந்தாகணும்னு நம்ம தலை விதி. நல்ல வேளை வேலை ல அப்படி ஒரு சட்டம் கிடையாது. காற்றுள்ள போதே தூற்றிக்கணும்னு தெளிவா இருக்கோம். தப்பில்ல. நம்ம வேலைய எப்படி பார்க்கிறோமோ அதே மாதிரி தான் நம்ம கம்பெனியும் நம்மள பார்க்குது. கிடைச்ச வரை லாபம்னு. நம்ம கப்பல் எப்போ கவுந்து போகும்னு தெரியாது. மத்தவங்க கப்பல் மட்டும் நம்மள விட எப்போதும் பெரிசா, அழகா, பாதுகாப்பா தெரியற மாதிரி ஒரு நினைப்பு.

என்ன காரணத்துக்காக நாம வீடு வாங்க வேணாம்னு நினைக்கலாம்.

1)ஒரு நல்ல நிதி ஆலோசகர் சொல்வார். வீடு ஒரு வரவு அல்ல. செலவு என்று. போட்ட முதல் வாடகையில் எக்காலத்திலும் வராது என்று.

2) 20-30 வருஷம் E.M.I கட்டி காலத்த ஓட்ட முடியாது. !!! E.M.I வலைக்குள் நுழைந்து விட்டால் EMI தான் நம்ம Big boss அத்தனை வருஷம் ஓடவும் முடியாது.ஒளியவும் முடியாது. பரணி மாதிரி எவ்வுளவு தவ்வு தவ்வினாலும் ஒரு பய வரமாட்டான் காப்பாத்த.

3) தண்ணி ஒழுகுது. கதவு மூடலனு 1008 பிரச்சனை வரும். மெண்டெய்ன் பண்ணலனா சிக்கல் தான்,பொறுமைனா கிலோ என்ன விலைனு கேக்கற எனக்கு இந்த வீட்ட லாம் கட்டி மேய்க்க முடியாது.

4) வாழ்க்கைல எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு பண்ண. உலகம் சுத்தலாம். நிறைய புதுப்புது விஷயம் கத்துக்கலாம். அத விட்டுட்டு ஒரு பில்டிங் கூட மாரடிக்கணுமா என்ன?

5) வாடகை வீடுனா ஒரு சுதந்திரம் இருக்கு. நம்ம தேவைக்கு ஏத்த மாதிரி இடம் மாறிக்கலாம். என் குழந்த்தையோட ஸ்கூல். என் மனைவியோட ஆஃபீஸ் பக்கம்னு என் தேவை மாறிட்டே இருக்கும். அது தானே பா முக்கியம்.

6) ரசனை மாறிட்டே இருக்கும். நம்ம நம்ம புள்ளைக்கு பார்த்து பார்த்து வீடு கட்டுனா, அவங்களுக்கு அருமை தெரிய மாட்டேங்குது.

இப்படி வீடு வேண்டாம் என்பதற்கு -பட்டியல் நீட்டி முழக்க வேண்டுமானால் மைக்கேல் மதன காமராஜன் மளிகை லிஸ்ட் போல போய்க் கொண்டே இருக்கும்.

வீடு கட்டுவதை வைத்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருக்கும் நான் ஏன் இவற்றை சொல்ல வேண்டும். என் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது போல.

ஏன் என்றால் எனக்கு தெரியும். நான் சொல்வது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்லவே. என் நண்பர்கள், வயதை ஒத்தவர்களின் எண்ண ஓட்டத்தை தான் இந்த தலைமுறையின் கண்ணோட்டமாகக் கருதுகிறேன். இன்னொன்றும் தெரியும். நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து விட்டால் லாஜிக்காவது. வெங்காயமாவது.

எல்லா எகனாமிக்ஸ் தியரியுமே பொதுவாக மனிதன் ஒரு பகுத்தறிவோடு மட்டும் தான் ஒரு விஷயத்தை அணுகுவோம் என்று வகுத்திருப்பார்கள். அப்படியா நடந்து கொள்கிறோம் நாம். வாரத்திற்கு ஒரு முறை ஊருக்குள் சுற்றி வர கார் வாங்குவோம். ஃபாஸ்ட் ஃபுட் லாம் கெடுதல் என்று ஆங்கில பத்திரிகையை தேடி படித்து விட்டு நல்ல வறுத்த பொறிச்ச ஐட்டமா பார்த்து மொக்குவோம். அப்பா ரிடையர்மெண்ட் பணத்தை தீபாவளி புஸ்வாணம் போல மகள் கல்யாணத்தில் செலவழிப்பார். சந்தோஷமும் பெருமையும் அவர் கண்களில் வழிந்தோடும்.அடுத்த நாளில் இருந்து எல்லாவற்றிலும் சிக்கனம் பார்ப்பார்.

நம் சமூகத்தில் வீடு வாங்குவது/கட்டுவது நம் வாழ்வின் பயணத்தில் ஒரு அங்கம். மனிதர்களாகிய நாம் செண்டிமெண்டல் இடியட்ஸ். பிடித்து விட்டால் கேள்வி கேட்க மாட்டோம்.

அது பல குடும்பங்களில் அவர்கள் வாழ்நாளின் மொத்த உழைப்பின் பிரதிபலிப்பு. நம் வாழ் நாளின் எல்லா நல்லது கெட்டதும் நம் வீடு சாட்சியாக நடந்தால் ஒரு பரம திருப்தி. நம் வாழ்நாள் கடந்த பின்பும் நம்மில் ஒரு பாகமாக நம் கதை சொல்லும் என்பது நம் சமூகத்தின் நம்பிக்கை. நம் பேரன் பேத்திகள் நம் கட்டிய வீட்டின் மூலமாக நம்மை பற்றி அறிந்து கொள்வார்கள் என்று ஒரு எண்ணம். காலம் கடந்து வாழ எல்லோருக்கும் ஆசை தான். அதனால் தான் பேர் சொல்ல ஒரு பிள்ளை என்று சொல்கிறாகர்கள். வீடும் அந்த வகையில் ஒரு பிள்ளை போலத் தானே!

வீடு கட்டாமலும் நினைவுகள் சேமிக்க முடியும். சேமிக்க விரும்புகிறோமா என்பது தான் இங்கே கேள்வி.

ஒரு விஷயம் பிடித்து விட்டால் லாஜிக் எல்லாம் வேலை செய்யாது. நம் செயல்களை மனம் செலுத்துமே தவிர மூளை செலுத்தாது. இந்த முரண் தான் நம் வாழ்வில் சுவை கூட்டுகிறது. முரண் இல்லை என்றால் உப்பில்லா பண்டம் குப்பையிலே கதை தான்.

இப்படி நம்மை ஆட்கொள்ளும் இந்த வீடு கட்டும் போது நாம் சரியான கேள்விகளை கேட்டுக் கொள்கிறோமா?

நமக்கே நமக்கான வீடு கட்டும் போது/வாங்கும் போது நம்முடைய தேவைகளை நாம் உண்மையிலேயே புரிந்து வைத்திருக்கிறோமா?…

பேசுவோம்….
ஹரி