இயற்கை உரங்களால் என்ன நன்மை?
1. சத்துகளை செடிகள் அதிகம் எடுக்கும்.
2. குறைந்த அளவு உரமே போதுமானது.
3. வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
4. மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் பணி அதிகமாக இருக்கும்.
5. முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
6. அதிக வேர் வளர்ச்சியை உண்டாக்கும்.
7. செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் இருக்கும்.
நுண்ணுயிர் உரங்கள் :-
மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளில் சில வகைகள் நன்மை தருபவை. இவற்றில் சில நுண்ணுயிர்கள் பயிருக்குத் தேவையான தழைச் சத்தை (Nitrogen) அளிக்கும் வகையில் வளி மண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை. சில மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன்படும் வகையில் மாற்றி தரும். சில நுண்ணுயிரிகள் பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
ரைசோபியம் :-
வளிமண்டலத்தில் 78% தழைச்சத்து இருந்தாலும், பயிரினால் நேரடியாக அச் சத்தை எடுக்க இயலாது. ரைசோபியம் என்பது பயிறு வகை செடிகளின், வேர்களின் உள்ளே முடிச்சு ஏற்படுத்தி அதனுள் வாழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணுயிர் இரண்டும் பயன்பெறுகின்றன. நுண்ணுயிருக்கு உணவும் இடமும் கிடைக்கிறது. நன்றிக்கடனாக – அதனுள் வாழும் ரைசோபியம் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உரமாக்கி பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.
அசோஸ்பைரில்லம் :-
இவை பெரும்பாலான பயிர்களின் வேருக்கு அருகில் வளர்ந்து வளிமண்டல தழைச்சத்தை நிலைப்படுத்துவதுடன், வேர்களை நன்கு வளரச் செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.
பாஸ்போ பாக்டீரியா :-
மண்ணிலுள்ள மணிச்சத்தை (phosphorus) கரைத்து பயிருக்குக் கொடுக்கும். மற்ற உரங்களின் தேவையை குறைக்கும். இந்த வகை நுண்ணுயிர்களில் சில, திரவம் அல்லது பொடி வடிவங்களில் அங்காடிகளில் கிடைக்கின்றன.