கால்நடைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள்

மாடுகளுக்கான அடர் தீவனமுறை

விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மற்றும் நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம்.

இவற்றிற்கு தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யலாம்.

கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு சில நோய்களை பற்றியும், அதற்கான முதலுதவி பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியவை :

கால்நடைகளுக்கு எதிர்பாராத விதத்தில் காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும்.

சுத்தமான துணியால் காயத்தின் மீது ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர் துளை போடவும். பின் கால்நடை மருத்துவரை அணுகவும். உடலில் புண் இருந்தால் ஈ மூலம் புழுக்கள் உண்டாகி காயத்தை ஆழமாக்கி விடும்.

எலும்பு முறிவு :

எதிர்பாராத விபத்தினால் கால்நடைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்படாத வகையில் சிறு மூங்கில் குச்சியை வைத்து, துணி கொண்டு கட்டுப்போட வேண்டும்.
உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை முறை கேட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொம்பு முறிதல் :

ஆடு, மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போது மரத்தில் மாட்டி கொம்பு முறிய வாய்ப்புண்டு.

நுனிக்கொம்பு முறிதலுககு பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவியபின் களிம்பு தடவலாம். இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்ச்சர் பென்சாயின் ஊற்றவும்.

அமில நச்சு :

மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றை அதிகமாக உண்பதால் அமில நச்சு பாதித்து கால்நடைகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உயிர் இறக்க வாய்ப்புள்ளது.

எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி காயவைத்து கொடுக்க வேண்டும்.

கருப்பை வெளித்தள்ளுதல் :

சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்தில் மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின்புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இது போன்ற முதலுதவி மட்டும் செய்து விட்டு முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.