செல்வ தானியங்கள்

செல்வ தானியங்கள்

இயற்கை விவசாய நண்பர்களுக்கு வணக்கம்.

*செல்வ தானியங்கள்* என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர்.காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு.

இப்புத்தகம் இயற்கை வாழ்வியல் வாழ முற்படும் இயற்கை ஆர்வலர்கள் அனைவருடைய புத்தக அலமாரியில் கட்டாயம் இடம்பெற வேண்டிய அற்புத வாழ்வியல் தொகுப்புகளை உள்ளடக்கிய தகவல் களஞ்சியம்.

ஐயா. காதர்வாலி அவர்களின் காடுகளுக்கு நடுவே விவசாயம் என்கின்ற கோட்பாடு, வனங்கள் அருகிவிட்ட தற்காலத்தில் அத்தியாவசியமானது.

வளர்ச்சி, காடுகளை அழித்தது.
ஒருவகையில் இதற்கு தீவிர விவசாயமும் ஒரு காரணம்.
வனம் அழித்து உருவான வயல்களில், விளைந்த விளைபொருளுக்கு விலை இல்லை.
வனங்கள் அழிந்த நிலையில், சூழலியலில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, விவசாயிகளுக்கு பருவம் தவறாது சவால்கள்.

ஒரு புறம் விலையில்லா விளைபொருள்கள், மறுபுறம் அதை விளைவிக்க சூழலியலோடு உழவன் மேற்கொள்ளும் சாகச சூட்சுமங்கள்…

அழிக்கப்பட்ட வனங்களை உருவாக்கினால், சிதைந்த சூழலியல் அதன் இயல்புநிலையில் சமன்படுத்தப்படும்.

சிறு காடுகள், புல்லினங்களின் புகலிடமாகும்.
உலகின் காடுகளை உருவாக்கியதில் புல்லினங்களின் பங்கு இன்றியமையாதது.
இவை விவசாயத்திற்கு உற்ற தோழன்.

மலை நாடான குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை, காடுகள் நிறைந்த முல்லை வனத்தினுள் பாய்ந்து, அதன் வளம் குன்றா அற்புத கனிம வளங்களை தாங்கி, விவசாய நிலங்களை உள்ளடக்கிய மருதம் மண்ணில் வழிந்தோடி, வளம் பரப்பி, நெய்தலின் முகத்துவாரங்களில் கடலோடு சங்கமித்து, செல்லும், சென்றடைந்த வழியனைத்திலும் உள்ள உயிர்கள் அனைத்தையும் வாழ வைத்தது *காடு.*

காடுகள் மழையை ஈர்க்கும் மழை ஈர்ப்பு மையங்கள்.
இவற்றை பேணி காப்பதில், நம் பொறுப்பு தொலைந்து போனது….
இதன் விளைவுகள் தான் சூழலியலை புரிந்து கொள்ளாது, தவிக்கும் தற்கால தலைமுறை.

பொது இடங்களில் வனங்களை உருவாக்க, நாலு பேரின் ஒத்துழைப்பு தேவை.
தனிநபரின் மாற்றம் தான், மிகப்பெரும் மாற்றி அமைக்க இயலாத சமுதாய புரட்சி.
காணி நிலம் வைத்திருப்போரும் சிறு காடுகளை உருவாக்க முடியும், நம் பிள்ளைகள் மேல் அன்பும்,அக்கறையும் கொண்டிருந்தால்…

மனித நாகரீக வளர்ச்சியின் நகர்வு, புல்லரிசி நுகர்விலிருந்து, நெல்லரிசி நுகர்வோராக வளர்சிதை மாற்றம் அடைந்தது.

இந்த தலைமுறையினர், அதாவது தற்போது நாற்பதின் வயதினிருக்கும் நபர்களில் அவருடைய இளம் வயதுதொட்டு, புல்லரிசிகளை உணவாக உண்டு வாழ்ந்தோர் வெகுசிலராக தான் இருப்பர்.
கடந்த பத்து ஆண்டுகளில் புல்லரிசிகளின் பயன், நாட்பட்ட நோய்களின் உணவுகட்டுபாட்டில் பரிந்துரைக்கப்பட்டது, இயற்கை ஆர்வலர்களால்..
உடலினை காக்கும் இச்செல்வ தானியங்கள், நாம் சிறு தானியங்களாக அறிந்து வைத்துள்ளோம்.

*விவசாய நிலங்களில் சிறுகாடு வளர்ப்பு, காடுகளுக்கு நடுவே விவசாயம்,விவசாயத்தில்* *புல்லரிசிகளின் வளர்ப்பு என சூழலியலையும், விவசாயிகளையும், நுகரும் மக்களையும் அவரவர்* *பயணத்தில் தடம் புரளாது நிலை கொள்ள செய்யும் காடுகளுக்கு நடுவே* *விவசாயம் எனும் கோட்பாடு, சூழலியலுக்கும், உழவருக்கும்,* *மனிதர்களுக்கும் அனைத்து வகையிலும் நன்மையை மட்டுமே அள்ளி தரும்.*

புல்லரிசி விவசாயம் குறைந்த நீர்வளத்தை கொண்டே செழிக்கின்றது.
நோய்கள் அண்டாது, பூச்சிகளின் சேதம் இல்லாது, இயற்கை
சூழலுக்கு ஏற்ப தகவமைத்து கொண்டு, தானியங்களை தாராளமாய் விளைவித்திடும்.

இக்கருத்துகளை உள்ளடக்கிய டாக்டர்.காதர்வாலி ஐயாவின் செல்வ தானியங்கள் புத்தகமும், காடுகளுக்கு நடுவே விவசாயம் என்கின்ற கருத்தியலை உணர, ஐயா. காதர்வாலி அவர்களின் களப்பயிற்சியும், இயற்கை விவசாயிகள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியமானது.

மேற்கண்ட எண்ண வெளிப்பாடுகள், செல்வதானியங்கள் புத்தகத்திலிருந்து, நான் உணர்ந்தது….

உழத்தி.செல்விஜெய்குமார்
அர்வின் ஃபார்ம்ஸ்.