நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி

nammlavaar

நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி

Baskar Arumugam

 

பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி

நம்மாழ்வாரை முதன் முதலில் சந்திக்க தேடியது 2012 Cummins College – Pune ல் ஒரு அறிவியல் கலந்துரையாடலுக்கு செல்கிறேன் அங்கே மறைநீர் (Virtual Water) குறித்து கலந்துரையாடல் அப்போது நேரில் சந்திக்க முடியவில்லை, அவருடனும் காடோடி நக்கீரன் தோழரோடும் போனில் பேசினேன் ஒரு முறை மறைநீர் பற்றி தெரிந்து கொள்ள.

2013 மரபு நெல் விதைகளை வழங்க திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளிக்கு வருகிறார், தனகோட்டி செந்தில் அவர்கள் தான் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார், ” உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” எனும் குடபுலவியனார் எழுதிய சங்கப்பாடல் வரிகளை கேட்கிறேன், சூரிய ஒளி அறுவடை தான் விவசாயம் எனும் வார்த்தைகளை கேட்கிறேன். ரொம்ப சரியா பேசுறாரேன்னு கூர்ந்து கவனிக்கக் தொடங்கினேன், பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி, யாருடைய அங்கிகார எதிர் சிரிப்புக்கும் தலையசைவுக்கும் காத்திராமல் வெடித்து சிரிக்கும் அந்த சிரிப்பு சத்தம் தான் எனை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது, அருகிருப்போரை அரவணைக்கும் பார்வையும், பேச்சும், சிரிப்பும் அகலாத மனிதன்.

nammlavaar

வளர்ந்த மனிதனால் இப்படி உண்மையாக உயிரை ஒலியாக்கி சிரிக்க முடியுமா எனும் சந்தேகத்தை எழுப்பும் அவரது சிரிப்பு.

அதற்கு பிறகு இரண்டு மூன்று கூட்டங்களில், நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு, அவ்வளவு தான், நல்ல வேலை நெருங்கிப் பழகவில்லை.

அவர் வாழ்வும், செயலும், சொல்லும் எழுத்தும் கற்றுக் கொடுக்காத ஒரு மாபெரும் பாடத்தை அவரது மரணம் எனக்கு கற்றுக் கொடுத்தது.

அவர் இயற்கை எய்திய பிறகு இல்லத்தில் இருந்தது முதல் வானகத்தில் நல்லடக்கம் செய்வது வரை அவரோடு பழகிய வாழ்ந்த ஒவ்வொருவரையும் படிக்க முடிந்தது, எத்தனை லட்சம் மக்களின் இதயத்தை கனமாக்கிய மனிதர்.

மரணங்கள் எப்போதும் எனை சலனப்படுத்தாது, இவரது மரணமும் அப்படித்தான், ஆனால் இவர் வாழ்ந்த வாழ்வை உணரத் தொடங்கியது அந்தக் கல்லூரி வளாகத்தில் தான்.

ஆண், பெண், ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி வேறுபாடின்றி வருசையாக ஒரு நாள் முழுவதும் கோயிலை வளம் வருவது போது வந்து வெடித்து அழுகிறார்கள், அதில் விவசாயிகள் மட்டுமல்ல.

இடதுசாரி சிவப்பு துண்டு போட்டுக் கொண்டு அழுகிறான், பச்சை துண்டைப் போட்டுக் கொண்டு உழவனும், வேளாண் சங்கங்களும் அழுகிறது, பெரியாரை நேசிப்பவர்கள் கருப்பு சட்டையோடு வந்து அழுகிறார்கள், பெண்கள் தலைமாட்டில் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார்கள், குழந்தைகள் தாத்தாவென கதறி அழுகிறார்கள்,
பல்வேறு கட்சி ஆளுமைகள் கண்ணீர் சிந்துகிறார்கள், சாமியார்கள் அழுகிறார்கள், பாஜக கட்சிக்காரன் வரை வந்து அழுகிறான்.

கல்லூரியில் இருந்து வானகம் நோக்கி வண்டி நகர்கிறது, சுருமான்பட்டிக்கு முன்பே ஆம்புலன்ஸ் கதவை திறந்து வைத்தார்கள், கூட்டத்தோடு கூட்டமாக நடந்து செல்கிறேன், ஊரே திரண்டு ஓலமிட்டு விம்மி விம்மி அழுதுகொண்டே வானகம் நோக்கி நகர்ந்தோம்.

பெண்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவது நமக்கு ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது.

சிவப்பும், கருப்பும், பச்சையும், காவியும் என எல்லா வண்ண உடைகளுடன், துண்டுகளுடன் உறுதி ஏற்பதும், வணக்கம் செலுத்துவதும் ஒரு புறம், பிரபலங்களின் பாசாங்கு ஒருபுறம், தன்னையறிந்து இன்பமுறு வெண்ணிலாவே என அருட்பா பாடிக் கொண்டு கால்மாட்டில் ஒரு கூட்டம்.

மக்கள் கூட்டம் கூட்டமாக கூடிக் கூடி இவரோடு பயணித்த, வாழ்ந்த அனுபவங்களை கவிதையும், பாடலும், வார்த்தைகளுமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

மனிதன் நடத்தும் அத்தனை நாடகங்களையும் தன் மரணத்தின் மூலம் எனக்கு கண்கூடாக காட்டிச் சென்றவர் நம்மாழ்வார், அந்த தினம் நாலடியார் கற்றுத் தந்த பாடத்தின் செயல்வடிவமாக் நம்மாழ்வாரை கண்டேன்.

அவர் நீங்கள் எடுக்கும் பாத்திரத்தின் வடிவமாக மாறக்கூடிய நீர்மை குணத்தவர், உங்கள் பாத்திரத்திற்கு ஏற்ப அவர் நிறைந்து கொள்வார். முரண்பாட்டின் மூட்டையாக இருப்பார், இயங்கும் அனைத்தும் முரண்படுகிறது, இயங்காதவைகளுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடையாது, எத்தனை செயல்படுகிறோமோ அத்தனை முரண்படுவோம், அவர் செயல்வடிமானவர்.

இதுவரை அவரது ஒரு வீடியோவும் முழுதாக பார்த்ததில்லை, ஒரு புத்தகமும் முழுதாக படிச்சதில்லை, ஆனால் அவர் வாசித்த வாசிக்கச் சொன்ன அனைத்து புத்தகங்களையும் தேடித் தேடி வாசித்து உரையாடி இருக்கிறேன், என்னுடைய பேச்சும் வாழ்வும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக அமைய மிக முக்கியமான காரணியாக அமைந்தவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரை ஒரு வண்ணத்தில் அடக்க முடியாது, எல்லா வண்ணத்திலும் விவசாயி இருக்கிறான், விவசாயி இருக்கும் வண்ணத்தில் எல்லாம் நம்மாழ்வார் இருப்பார், அவர்மீது எந்தச் சாயமும் படியாது, தும்பைப் பூவினையொத்த வெண்ணையான மனசுக்கு சொந்தக்காரன், ஆம் அவன் எல்லா நிறத்தையும் உள்வாங்கிய வெண்மை மனசுக்காரன்.

அவன் பிறப்பும் இறப்பும் எனக்கும் உணர்த்திய செய்தி இதுவே.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

குறள் 220

#பாஸ்கி
#நம்மாழ்வார்82