கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி

கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி

கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி செய்யும் வழிமுறைகள் :

#ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம்
#தெளிப்பில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம்.
#பாசனத்தில் ஜீவாமிர்தம், இஎம் ஆகியவற்றை கலந்து பாசனம் செய்தல்.

இந்த மூன்று வழிமுறைகளை மேற்கொண்டால் தீவனஉற்பத்தி தொய்வில்லாமல், எல்லா காலங்களிலும் தடையில்லாமல் உற்பத்தி செய்து நம் கால்நடை வளர்ப்பை சிறப்பாக வழிநடத்தலாம்.
ஏனெனில் தீவன உற்பத்தி தடைப்பட்டால் கால்நடை வளர்ப்பு என்பது தினந்தோறும் மிகப்பெரும் சவாலை உருவாக்கி விடும்.
எனவே தடையில்லா தீவன உற்பத்தி தான் கால்நடை வளர்ப்பின் முதன்மையான அடித்தளம்.

மேம்படுத்தப்பட்ட தொழுஉர தயாரிப்பு :

நன்கு தூளாக்கப்பட்ட ஆட்டுஎரு அல்லது மாட்டுஎரு — 100 கிலோ
பஞ்சகவியம் — 1 லிட்டர்
மீன்அமிலம் — 1 லிட்டர்.
எள்ளு புண்ணாக்கு — 10 கிலோ
கோமியம் — 10 லிட்டர்
உளுந்து பொட்டு — 2 கிலோ
வெல்லம் — 2 கிலோ
பழக்கரைசல் (பழக்கடைகளில் வீணாகும் பழங்களை வாங்கி வந்து பிசைந்து தண்ணீர் கலந்து எடுத்து கொள்ளவும்)
ஜீவாமிர்தம் — 20 லிட்டர்
இஎம் — 1லிட்டர் (தாய் திரவத்திலிருந்து செயலூட்டம் செய்யப்பட்டது) .

நிழற்பாங்கான இடத்தில் தரையில் தார்பாலீன்
ஷீட் விரித்து முதலில் தூளாக்கப்பட்ட எருவை ஒரு அடி கனத்துக்கு போட்டு அதன் மேல் இடுபொருட்ளை தெளித்து பின் எரு நனையும் அளவுக்கு தண்ணீர் தெளித்து, பின் அடுத்த அடுக்கு எருவை போடவும்.
இதுபோல் எருவை போட்ட பின்னர் தண்ணீர் எரு குவியலை விட்டு வெளியே வராத அளவுக்கு தண்ணீரை தெளித்து தென்னைஓலை அல்லது தார்பாய் கொண்டு மூடி வைக்கவும்.
தினமும் எருவில் ஈரப்பதம் இருக்குமாறு கவனித்து கொள்ளவும்.
எருவில் ஈரத்தன்மை சொத சொதவென்றும், காய்ந்த நிலையிலும் இல்லாமல், எருவில் ஈரப்பதம் புட்டுமாவு பதத்தில் இருக்கவேண்டும். அதாவது எருவை கையில் எடுத்து பிடித்தால் இறுகியும், அதையே, லேசாக பிசைந்தால் தூளாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறாக 7 நாட்கள் வைத்திருந்து, பின் மண்வெட்டியால் நன்கு கலந்து, தீவனப்பயிர்களின் கால்களில் தூவவும்.
ஒவ்வொரு ஊட்டஉர தெளிப்புக்கு பின்னரும், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தண்ணீரில் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்சினால் இன்னும் சிறப்பாக நுண்ணுயிரிகளின் பெருக்கம் மேம்பட்டு, தீவன உற்பத்தி அதிகரிக்கும்.
தினமும் ஒவ்வொரு தீவனப்பயிரின் அறுப்பு முடிந்ததும், அந்த வரிசைக்கு, ஊட்டமேற்றிய உரம் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து விட்டால், தீவன உற்பத்தி தடையில்லாமல் செழிப்பாக இருக்கும்.
பத்து நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவியம், மீன் அமிலம், இஎம் என மாற்றி, மாற்றி ஸ்பேரேயரால் தெளிப்பு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பாசனத்தின் போதும் ஜீவாமிர்தம்,இஎம் இவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து விடவும்.

இது போன்ற ஊட்டஉரங்கள் நம் செலவை மிச்சடுத்தும்.
தடையில்லாத தீவன உற்பத்திக்கு வழிவகுக்கும்.

இரசாயன உரங்களின் பயன்பாட்டால் வளரும் தீவனப்பயிர்கள், நம் கால்நடைகளின் ஆயுட்காலத்தை குறைக்கும். எனவே கால்நடைகளின் தீவன உற்பத்தியில் இரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிர்த்து இது போன்ற மேம்படுத்தப்பட்ட ஊட்ட உரங்ளை அளிக்கும் போது கால்நடைகள் நல்ல தரமான, ஊட்டசத்து நிறைந்த தீவனங்களை உண்பதால் உடல்வளர்ச்சி,எடை கூடும் திறன், சீரான சினைப்பருவங்கள், தரமான குட்டிகளை ஈனுதல் என முழு ஆரோக்கியமும் மேம்படும்.

தடையில்லாத தீவனஉற்பத்தி ஒன்றே கால்நடை வளர்ப்பை அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேற வழிவகுக்கும்.

நன்றி.
அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.