தற்சார்பு விவசாயி-3 தண்ணீர்

Agriwiki.in- Learn Share Collaborate

தற்சார்பு விவசாயி – அத்தியாயம் 3 தண்ணீர்

சென்ற அத்தியாயத்தை படிக்க 

“விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ?” என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன்

“உன் வயசென்ன?” என்று பெண்களை கேட்பதும், “உன் சம்பளமென்ன” என்று ஆண்களை கேட்பதும், “இந்த வீடு என்ன விலை” என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை.

கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும்.

தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ?

முழுவதுமாக 10 மாதம் இரவும் பகலும் பாதுகாத்து வார்த்து எடுக்கும் வாழைக்குலை ருபாய் 25/-க்கு போகிறது. சில வேளைகளில் வரவு செலவு போக, கைவிட்டு நாம்தான் குட்டியானைக்கு (வண்டி) காசு கொடுக்கவேண்டி வரும்.

தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகத்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம்.

ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது.

அது தொலை தூரத்தில் பெருநகரங்களில் உள்ள உலகமயமாக்கப்பட்ட வியாபாரிகளின் கையிலுள்ளது. எங்கோ ஒரு கோடியில் இருக்கும் காரங்காடு கிராமத்தை இந்த உலகத்தோடு பிணைப்பது வங்கி, வரி, மற்றும் வட்டி. சம்சாரிகளை கட்டிய இந்த பொம்மலாட்ட கயிற்றின் நுனி அவர்கள் கையில் இருக்கும்.

இதில் கட்டுப்படாமல் தன்னிறைவான விவசாயத்துக்கு தேவை தண்ணீர், விதை, உரம் மட்டுமல்ல, சக்தியும் தேவை. நிறைய சக்தி. இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

பணி நிமித்தமாகவோ குடும்ப விசேடங்களுக்கோ விமானத்தில், ரயிலில், பேருந்தில் இந்தியா முழுவதும் செல்ல நேர்ந்திருக்கிறது. எனக்கு பிடித்த ஜன்னல் ஓரம் உட்கார்ந்து எட்டிப்பார்த்தால் 36000 அடி உயரத்திலிருந்து கீழே லட்சக்கணக்கான சிறு கட்டங்கள் தெரியும். அவை சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான துண்டு துண்டான நிலங்கள்.

ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் நம்மையும் வாழவைக்கிறது. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் இதுதான் காட்சி. எல்லா நிலங்களையும் ஒருங்கிணைத்து வெளிநாட்டைப்போல வெறும் சோளத்தை, தீவனத்தை நம் நாட்டில் போடுவது கிடையாது.

உங்களுக்கு அவியல், பொரியல், கூட்டு, குழம்பு வேண்டுமென்றால் வித விதமான காய், கனி, தானியங்கள் தேவை. பல்லுயிர் பெருக்கம்தான் ஆரோக்கியத்தை அளிக்கும். அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு.

பிரயாணத்தில் எங்கோ தொலைதூரத்தில் பாம்பைப்போல வளைந்து செல்லும் மணல் ஆறுகளை இனிமேல் கூர்ந்து தேடித்தான் பார்க்கவேண்டும். நதியினின்றும் தொலைதூரத்தில், பாலை நிலத்தில் கூட சிறிய நூறுக்கணக்கான விவசாய பாத்திகளை காணலாம். இவர்களுக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது?. எங்கிருந்து மின்சாரம் கிடைக்கிறது?. எப்படி தண்ணீரை ஏற்றுகிறார்கள் ? அது விடை தெரியாத கேள்வி.

நீங்கள் கேளிக்கை, அரசியல், போராட்ட நேரத்தில் கூடும்
கூட்டங்களை பார்க்கலாம். குவார்ட்டருக்கும், 500க்கும் வரும் கூட்டமென்று எக்கத்தாளத்துடன் கொச்சைப்படுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. கோடிக்கணக்கில் உள்ள அவர்கள் காலையும், மாலையும் உண்டுவிட்டுத்தான் உங்கள்முன் தோன்றுகிறார்கள். அவர்களுக்கு பின்னால் விட்டு வந்த பெரிய குடும்பமே இருக்கிறது.

வீடுதிரும்பி நாளையும் உண்பார்கள். உங்களையும் இவ்விதம் 365 நாளும் உயிரோடு வைத்திருப்பார்கள். 130 கோடி மக்களையும் கையேந்தாமல் வைத்திருப்பார்கள். இதுதான் இந்த நாட்டின் உணவு பாதுகாப்பு. நீங்கள் நினைப்பதுபோல அரசு அவர்களுக்கு தந்ததல்ல. அது அவர்களே சம்பாதித்த தாளாண்மை.

“தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.”
— குறள் 613


தொழில் மற்றும் வேளாண்மையின் அத்தியாவசிய தேவை ஆற்றல். மனிதனால் நாத்து நடமுடியும். களை எடுக்க முடியும். ஆனால் குடம் குடமாக தண்ணீர் விட்டு வாய்க்காலை நிரப்ப முடியுமா ? தண்ணீரை இறைக்க, நெல் அடிக்க, தானியம் பிரிக்க, அரைக்க, பிழிய என்று எல்லாவற்றிருக்கும் ஆற்றல் தேவை. தண்ணீர் அருகில் இருந்தாலும் சேந்த முடியவில்லை என்றால் செடி செத்துவிடும்.

மரபு வேளாண்மை தன்னிறைவை தரும். ஆனால் விலங்கினங்கள் பயன்பாடு குறைந்துவிட்ட இந்த காலத்தில் சிறு தோட்டத்தில் தன்னிறைவாக ஆற்றலை உண்டு பண்ணிக்கொள்ள முடியுமா ?

கரண்டு பதிசெய்து லட்சங்கள் செலவு செய்தால்தான் அத்துவான காட்டுக்கு மின்சாரம் வரும். சோலார், டீசல் எதுவும் மலிவு கிடையாது. களவு போகும், பழுது ஆகும், காத்திருப்பு நேரம் அதிகம். ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு உண்டு.

மானாவாரி சிறு விவசாயிகள் மழை வரவில்லையென்றால், ஆற்று நீர் ஓடவில்லையென்றால் என்ன செய்வார்கள் தெரியுமா ? சுவிட்சை அணைப்பதைப்போல, விவசாயத்தை நிறுத்தி விடுவார்கள். காயப்போடுவார்கள். மழை வரும் வரை அப்படியே விட்டு விடுவார்கள்.

இவர்களிடம் ஆற்றலை கொடுத்தால், மேலும் விவசாயம் செய்வார்கள். உணவு பாதுகாப்பு மட்டுமல்ல, ஏற்றுமதியும் பெருகும். இந்தியா வல்லரசாகிவிடும்.

இப்படி யோசிக்கும்போது வெறும் காற்றை மட்டும் உபயோகித்து இயற்கையே தண்ணீரை சேந்தி,. புவியீர்ப்பு விசை மூலம் சொட்டுநீர் பாய்ச்சினால் என்னவென்று தோன்றியது. மனதில் உள்ளதை செயல்படுத்தும் முன்பு வரைந்து பார்ப்பது வழக்கம். அப்படி செய்த கற்பனைதான் கடைசி படம்.

எப்போதும் காத்தடிக்குமா ? எவ்வளவு தண்ணீர் இறைக்கமுடியும் ? எவ்வளவு ஆழம் செல்லலாம் ? என்ன செலவாகும் ? எத்தனை நாள் உழைக்கும் ? நம்பி இறங்க முடியுமா ?

— வளரும்
#தற்சார்புவிவசாயி (alwar narayanan)
 அத்தியாயம் நான்கு